வாடகைத்தாய்மை





தாய்மையை வரமாகப் போற்றுகிற மண் இது. இங்குதான் தாய்மையை வாடகைக்கு விடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் குழந்தைகள், வாடகைத்தாய்கள் மூலம் பிறக்கிறார்கள். பல நாடுகளிலிருந்து வாடகைத்தாய்களை நாடி ஆயிரக்கணக்கானோர் இந்தியா வருகிறார்கள். காரணம், இங்குதான் தாய்மையின் விலை மலிவு. அமெரிக்காவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற 80 லட்சம் செலவாகும் என்றால் சென்னையில் வெறும் 10 லட்சத்தில் முடிந்துவிடும்.
சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட வாடகைத்தாய்கள் இருப்பதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு. 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் வாடகைத்தாய்கள் மூலம் குழந்தை பெற்றுத் தரும் பணியைச் செய்கின்றன. இதில் பல, உரிய பதிவு பெறாதவை.
வாடகை கார், வாடகை வீடு தெரியும்... அதென்ன வாடகைத்தாய்?

ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டையோடு இணைந்து கருப்பையில் அமர்ந்து கருவாக வளர்ந்து குழந்தையாக உருப்பெறுவதுதான் இயற்கை. ஆணின் உயிரணு வலுவற்றதாகவோ, பெண்ணின் கருமுட்டை வடிவற்றதாகவோ இருந்தால் குழந்தைப்பேறு வாய்க்காமல் போகலாம். சில பெண்களின் கருப்பை வாய்மூடி மௌனித்து விடலாம். கட்டி, புற்று போன்ற காரணங்களால் கருப்பையை எடுக்கவும் நேரலாம். இந்தியாவில் 6ல் 1 தம்பதி இப்படியான காரணங்களால் குழந்தைப்பேறின்றி தவிக்கிறது. மருத்துவத்துறையின் இமாலய வளர்ச்சி, இவர்களுக்கும் குழந்தை வரத்தை சாத்தியமாக்கியிருக்கிறது. அதில் ஒரு வழிதான் வாடகைத்தாய் முறை.

சோதனைக்குழாய் மூலம் ஒரு தம்பதியின் கருவை உருவாக்கி, ஒரு வாடகைக் கருப்பையில் வளர்த்து, தங்களுக்கே தங்களுக்கான குழந்தையை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். குழந்தைக்கும், கருப்பையை வாடகைக்குத் தந்த தாய்க்கும் எந்த மரபுத்தொடர்பும் இருக்காது. கருப்பையோடு உறவு நிறைவாகிவிடும். இவ்வளவு காலம் திரை மறைவில் நடந்துவந்த வாடகைத்தாய் தொழில் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சமூகத்தின் புறக்கணிப்புக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்த வாடகைத்தாய்கள், இப்போது தைரியமாக வெளியில் வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.  
ஆனந்திக்கு இரண்டு குழந்தைகள். வாடகைத்தாயாக இருந்து ஒரு குழந்தை பெற்றளித்திருக்கிறார். ‘‘ஒரு பெண்ணா, தாயா, குழந்தை இல்லாத பெண்களோட வலி எனக்குப் புரியும். நான் வாடகைத்தாயா மாற ஒத்துக்கிட்டது அதுக்காகத்தான். இது புனிதமான வேலை. ஒரு பெண், குழந்தையை பிரசவிக்கிறதுக்கு எந்த விலையும் நிர்ணயிக்க முடியாது. அது சாவோட எல்லைக்குப் போயிட்டுத் திரும்புறது மாதிரி’’ என்று ஆத்மார்த்தமாக பேசுகிற ஆனந்தி, தான் வாடகைத்தாயாக நேர்ந்த கதையையும் சொல்கிறார்.   

‘‘என் வூட்டுக்காரு எந்த வம்பு தும்புக்கும் போகாம திருந்தி வாழுற மனுஷன். ஆனா, ஊருல எந்தப் பிரச்னை நடந்தாலும் போலீசு நேரா எங்க வீட்டுக்குத்தான் வரும். அவரை தூக்கிட்டுப் போய் ரிமாண்ட் பண்ணிருவாங்க. அவரை ஜாமீன்ல எடுக்க வட்டிக்கு பணம் வாங்குவேன். அஞ்சாயிரம், பத்தாயிரம்னு வாங்கி, கடன் அதிகமாகி சாப்பாட்டுக்கே கஷ்டமாச்சு.

எங்க தெருவுல புதுசா ஒரு அம்மா குடி வந்துச்சு. எங்க சூழ்நிலையப் பாத்துட்டு ‘வாடகைத்தாயா வர்றியா.. பணம் வாங்கித் தாரேன்’னு கேட்டுச்சு. முதல்ல நாங்க ஒத்துக்கலே. என் வூட்டுக்காரு, ‘இப்படியெல்லாம் பிழைக்கிறதுக்கு செத்துப்போகலாம்’ன்னாரு. ‘நாம தப்புத்தண்டாவுக்கு போகப் போறதில்ல. குழந்தை இல்லாம கஷ்டப்படுற ஒரு பொண்ணுக்கு உதவப்போறோம். பணமும் கிடைக்கும்’னு வீட்டுக்காரருக்கு எடுத்துச் சொன்னேன். அரை மனசா ஒத்துக்கிட்டாரு.



அந்த அம்மா ஒரு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போச்சு. 2 லட்ச ரூபாய் தரேன்னு சொல்லி நிறைய பேப்பர்கள்ல கையெழுத்து வாங்கினாங்க. ரத்தமெல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு நாலுநாள் கழிச்சு கருவை வச்சாங்க. 16 நாள் மரண வேதனை. கரு நம்ம கருப்பையில தங்கி வளரத் தொடங்குகிற வரைக்கும் அசையக்கூட கூடாது. பாத்ரூம் போற நேரம் தவிர மத்த நேரங்கள்ல படுக்கையிலேயே இருக்கணும். 16 நாளுக்குப் பிறகு வீட்டுக்கு வந்துட்டேன். ரெண்டு, மூணு மாசத்துல வயிறு தெரியத் தொடங்குச்சு. ஊருல இருந்தா ஒருமாதிரி பேசுவாகளேன்னு, அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு ஆஸ்பத்திரியிலயே போய் தங்கிட்டேன். மாசா மாசம் சாப்பாடுச் செலவுக்கு மூணாயிரம் பணம் கொடுத்தாங்க.

ஸ்கேன் பண்றதைக் கூட பாக்க விடமாட்டாங்க. பாத்தா குழந்தை மேல பாசம் வந்திடுமாம். 9ம் மாசம் வலி வந்தவுடனே சிசேரியன் பண்ணுனாங்க. மயக்கம் தெளிஞ்சு பாத்தா, பக்கத்துல குழந்தை இல்ல. ஆணா, பெண்ணான்னு கூட சொல்லல. உயிரே போன மாதிரி இருந்துச்சு. கதறி அழுதேன். ‘அது உன்னோட குழந்தை இல்லை. அதனால அதை மறந்துடு’ன்னு சொல்லி அனுப்பி வச்சுட்டாங்க...’’ - கலங்கிய கண்களோடு சொல்கிறார் ஆனந்தி.

வாடகைத்தாய் தொழிலில் புரோக்கர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது. இவர்கள் மருத்துவமனைகளோடு தொடர்பில் இருப்பார்கள். வாடகைத்தாய் தேவைப்படும் பட்சத்தில், பெண்களிடம் பேசி மருத்துவமனைக்கு அழைத்து வருவார்கள். இதில் லட்சக்கணக்கில் பணம் பார்க்கிறார்கள். இவர்களின் நெட்வொர்க் இந்தியா முழுவதும் விரிந்துகிடக்கிறது.  

ஆனந்தியின் தெருவில்தான் சுமதியும் குடியிருக்கிறார். இவரையும் வாடகைத் தாயாக்கியது புதிதாக குடிவந்த அந்தப் பெண்தான். சுமதியின் கணவர் ஆட்டோ டிரைவர். 4 குழந்தைகள். ‘‘இதுக்கு நிறைய ரூல்ஸ் இருக்கு. 21ல இருந்து 35 வயசுக்குள்ள இருக்கணும். திருமணம் முடிஞ்சிருக்கணும். கணவர் ஒத்துக்கணும். இதுக்கு முன்னாடி 1 குழந்தையாவது பொறந்திருக்கணும். வாடகைத்தாயா 3 குழந்தைகளை மட்டும்தான் பெத்துக் கொடுக்கணும். யாரோட குழந்தையை சுமக்கிறோம்னு நமக்குத் தெரியாது. ஆனா அவங்களுக்கு நம்மைத் தெரியும். குழந்தை வயித்தில மிதிச்சு விளையாடுறதைக்கூட ரசிக்க முடியாது. ‘இது உன்னோட குழந்தை இல்லை’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஒரே ஒரு முறை குழந்தையோட முகத்தைப் பாக்குறேன்னு கெஞ்சினேன்.. ‘பாத்தா பாசம் வந்திடும்... கஷ்டப்படுவே’ன்னு சொல்லிட்டாங்க.

முதல்ல 3 லட்சம் ரூபாய் பேசுனாங்க. மாசம் ரெண்டாயிரம் கொடுத்தாங்க. குழந்தை பிறந்த பிறகு 2 லட்சம்தான் கொடுத்தாங்க. ‘மீதம் 1 லட்சத்தை ஏஜென்ட் வாங்கிட்டுப் போயிருச்சு’ன்னு சொல்லிட்டாங்க. ஏஜென்ட் பொம்பள தலைமறைவாயிருச்சு’’ என்று வருந்துகிறார் சுமதி.

குழந்தை இல்லாத தம்பதிகள் சாதாரணமாக வாடகைத்தாய்களை தேர்வு செய்வதில்லை. உருவ ஒற்றுமை முக்கியம். வெளிநாடுகளில் இருப்பவர்கள் டூரிஸ்ட் விசாவில் கிளம்பி வந்து கருவை கொடுத்துவிட்டு கிளம்பி விடுவார்கள். 9வது மாதம் மீண்டும் டூரிஸ்ட் விசாவில் வந்து குழந்தையை பெற்றுக்கொண்டு செல்வார்கள். அண்மையில் ஒரு ஜப்பான் தம்பதி, குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்தது. குழந்தை பிறக்கும் முன்னே அந்த தம்பதி விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அதனால் குழந்தை அனாதையானது. முன்பு ஓரினச் சேர்க்கையாளர்களும் இங்கு வந்து குழந்தை பெற்றுச்செல்வதுண்டு. கடந்த மாதம் மத்திய அரசு அதை தடை செய்துவிட்டது.

கனடா, இங்கிலாந்து, உள்ளிட்ட உலகின் 70 சதவீத நாடுகளில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 2002ல் வாடகைத்தாய் முறை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அதற்கென இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் விதிமுறைகளையும் வகுத்தது. ஆனால், மருத்துவம் இதை வளம்கொழிக்கும் தொழிலாக்கி விட்டது.
ஆதிக்கு 33 வயதாகிறது. கணவர் ரிக்ஷா ஓட்டுகிறார். விளிம்புக் குடும்பம். இவரும் அண்மையில் வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தந்திருக்கிறார்.

‘‘தப்பான வழிக்கு போகலே. என்னால முடிஞ்ச சேவை. அதனால எனக்கும் பணம் கிடைக்குது. அதனாலதான் ஒத்துக்கிட்டேன். கிடைச்ச பணத்துல வீட்டுக்காரருக்கு ஒரு ரிக்ஷா வாங்கிக்கொடுத்தேன். பசங்கள நல்ல ஸ்கூலுல படிக்க வச்சேன். இதுல ஏஜென்டுங்க நிறைய மோசடி பண்றாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரை ரூ.2 லட்சம் தருவதாகச் சொல்லி ஆந்திராவுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கே போனபிறகு ரூ.60 ஆயிரம்தான் தருவோம்னு மிரட்டியிருக்காங்க. போராடி தப்பிச்சு வந்திட்டாங்க’’ என்கிறார் ஆதி.

ஜனித்தது இரட்டைக் குழந்தையாக இருந்தால் பேசியதைவிட கூடுதலாக தொகை கிடைக்கும். இடையில் கரு சிதைந்தால் வாடகைத்தாய் பொறுப்பல்ல. எந்த நாட்டு தம்பதியின் கருவைச் சுமந்தாலும், பிறக்கும் குழந்தை முதலில் இந்திய பிரஜை. அதன் பிறகு அத்தம்பதி விருப்பப்பட்டால் தங்கள் நாட்டு குடியுரிமையை வாங்கிக்கொள்ளலாம்.

‘வாடகைத்தாய்களின் உரிமைகளை முன்னெடுக்கும் நிறுவனம்’ ஒன்றை தொடங்கியுள்ளார் ஐ.சி.டபிள்யூ.ஓ அமைப்பின் செயலாளர் ஹரிஹரன். இதில் ஏராளமான வாடகைத்தாய்கள் உறுப்பினர்கள்.
‘‘இவர்கள் பலமட்டங்களில் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்களை வைத்து மருத்துவமனைகளும், மருந்து கம்பெனிகளும், புரோக்கர்களும் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். சென்னை இந்தியாவின் மிகப்பெரிய மெடிக்கல் டூரிஸம் சென்டராக வளர்ந்து வருகிறது. எனவே இதை முறைப்படுத்த வேண்டியது அவசியம்’’ என்கிறார் ஹரிஹரன்.

விடைபெறும் முன்பு ஆனந்தி, சுமதி, ஆதி மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
‘‘தயவுசெஞ்சு முகத்தை மறைக்காம எங்க புகைப்படங்களை போடுங்க. இது தவறான தொழில் இல்லை. எங்கள பாத்து இன்னும் நாலு தாயிங்க, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு உதவ முன்வரட்டும்!’’

ஸ்கேன் பண்றதைக் கூட பாக்க விடமாட்டாங்க. பாத்தா குழந்தை மேல பாசம் வந்திடுமாம். 9ம் மாசம் வலி வந்தவுடனே சிசேரியன் பண்ணுனாங்க. மயக்கம் தெளிஞ்சு பாத்தா, பக்கத்துல குழந்தை இல்ல. ஆணா, பெண்ணான்னு கூட சொல்லல!
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்