நையாண்டி
‘விஸ்வரூபம்’னு படம் எடுத்தா பிரச்னைய விஸ்வரூபம் ஆக்குறாங்க. ‘ஆதிபகவன்’னு படம் எடுத்தா அந்த வார்த்தைய முதன்முறையா பயன்படுத்தின திருவள்ளுவர் மேலேயே கேஸ் போடுறாங்க. ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்துல சாமியார்கள தப்பா சொல்றாங்கன்னு ஒரு போராட்டம் வேற. ‘கடல்’ படத்துல கிஸ் அடிச்சதுக்கு எல்லாம் எதிர்ப்பாம். இப்படியே போனா, இனி பாம்பு மட்டும்தான் சுதந்திரமா படம் எடுக்க முடியும். எதுக்கும் அடுத்து வரப்போற கீழ்க்கண்ட பட படைப்பாளிகள் கொஞ்சம் கவனமா இருக்கணும்.
‘பரதேசி’ - அடிக்கடி இந்த வார்த்தையை சில பல கெட்ட வார்த்தைகளோடு சேர்த்துப் பயன்படுத்தும் சென்னை ஆட்டோக்காரர்கள், தங்களை இந்தத் தலைப்பு புண்படுத்துவதாக ஃபீல் பண்ணலாம். பாலா சார் உஷார்!
‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ - யாரு கண்டா! இந்திய தேசியக் கொடியைத்தான் இந்தப் பட டைட்டில் மறைமுகமாகக் கலாய்த்து இறையாண்மையை இடியாப்பம் பிழிந்துவிட்டது என்று மத்திய அரசே மல்லுக்கட்டலாம். பத்திரம் பாரதிராஜா சார்!
‘பிரியாணி’ - தினம் பழைய சோறு தின்கிற தங்களை கிண்டல் பண்ணுவது போல இந்தப் பெயர் இருக்கிறது என்று இந்தியாவில் உள்ள அத்தனை புருஷன் மார்களும் சண்டைக்கு வரலாம். வெங்கட் பிரபு, பீ கேர்ஃபுல்!
வாலு - சிம்பு சார், ‘மனித குலத்தின் மூதாதையர்களான எங்களை இழிவுபடுத் தும் விதமாக படம் இருக்கலாம்’னு சந்தேகிச்சு வாலுள்ள குரங்குகள் எல்லாம் வண்டலூர்ல தர்ணா பண்ணிச்சுன்னா, வெளியூர் ஷூட்டிங் போக முடியாது, பார்த்துக்கோங்க!
என்னங்க, இவ்வளவு நேரமாவா தூங்குவீங்க, எந்திரிங்க!’’ ‘‘குளிச்சுட்டு பாத்ரூம் பைப்ப அடைச்சீங்களா?’’ ‘‘தோசை ஊத்துனதுக்கு அப்புறம் மாவ பிரிட்ஜுக்குள்ள வைங்க!’’ ‘‘ஏங்க கேஸ் அடுப்ப ஆப் செஞ்சீங்களா?’’ ‘‘கதவ நல்லா பூட்டுங்க, பூட்டிட்டு இழுத்து பாருங்க!’’ ‘‘ஏங்க எங்க இருக்கீங்க? டைம் என்னாகுது தெரியுமா?’’ ‘‘சீக்கிரம் வீட்டுக்குப் போங்க, ஏரியாவுல திருட்டு பயம் ஜாஸ்தி!’’ ‘‘சாப்பிட்டீங்களா? மிச்ச சாப்பாட்டுல தண்ணி ஊத்துங்க!’’ ‘‘இவ்வளவு நேரம் முழிச்சு இருக்கீங்களா? தூங்குங்க!’’ ‘‘டி.வி லைட்டை எல்லாம் போட்டுட்டு தூங்காதீங்க!’’ ஊரில் இருந்தாலும் போனில் வாழ்கிறார்கள் மனைவிகள்.
இந்த வாக்கியத்தை நீங்கள் படித்து கொண்டிருக்கும் வேளையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்திருக்கலாம், வெளிவராமலும் இருக்கலாம். செய்தியும் விஸ்வரூபம் பற்றியதல்ல. சினிமாவால் மக்கள் கெட்டார்களா? மக்கள் செய்வதையே சினிமாவாக எடுக்கிறார்களா? என்ற ஆய்வை விட்டு விட்டு, ஒரு தமிழனாய், தமிழ்ப்பட ரசிகனாய் கூற விரும்புவது வேறு. எந்த நேரத்தில் கமலை ‘உலகநாயகன்’ என்று சொன்னோமோ... அந்த வாய் முகூர்த்தம் உண்மையாகிவிட்டது. கமல் எங்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டாரோ அந்த தமிழகம் தவிர உலகெங்கும் அந்தப் படத்தை பார்க்க முடிகிறது.
50 வருட காலம் தமிழ் மக்களை மகிழ்வித்த ஒரு உன்னதக் கலைஞருக்கு நாம் செய்யும் கைமாறு இதுவல்ல உறவே. நம் கலையை முன்னோக்கி இழுத்துச் சென்ற ஒருவரை நாமே நம்பாமல் கைவிட்டிருக்கிறோம். எதிலும் முதல் முயற்சி செய்த ஒரு திறமைசாலியை நடக்க விடாமல் முடக்கி வைத்திருக்கிறோம். நம்மை மாற்ற விரும்பிய ஒரு கலைஞனை நாம் மாற்ற விரும்புகிறோம். அரசியலில் கலை இருந்தது போய், கலைக்குள் அரசியலை திணித்துவிட்டோம். ஒரு ரசிகனாக, ஒரு தமிழனாக, கமலின் படைப்புகளை நாம் துரத்தியடிப்பது யாருக்கு நஷ்டம் என்பதை காலம் முடிவு செய்யட்டும். கமல் சார், நீங்க ஹாலிவுட்டுகே போயிடுங்க. நீங்கள் நம்பாத கடவுளோ, நீங்கள் நம்புகின்ற கலையோ உங்களை எப்போதும் மேலேற்றியே வைத்திருக்கும்.
மனைவியுடன் துணி எடுக்க சென்று பல மாமாங்கம் காத்திருந்தவரா நீங்கள்? ஒரு சேலை வாங்க ஒன்பது கடை ஏறி இறங்குறாங்களா? மனைவி புடவைக்கடையில் சீக்கிரமா புடவையை தேர்வு செய்து வாங்கி வர வேண்டுமா? நல்ல இடத்துக்குதான் வந்து இருக்கீங்க. உங்க மனைவி செகண்டுல சேலை எடுக்க நீங்க செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்... மனைவி உங்ககிட்ட ‘இந்தப் புடவை டிசைன் நல்லா இருக்கா’ன்னு கேட்கிறப்ப, அங்க துணிக்கடையில இருக்கிற பொம்பள பொம்மையவே உத்து பாருங்க. பொம்மை பக்கத்துல இல்லாட்டி, புடவைய எடுத்து தர சேல்ஸ்கேர்ளையே உத்து பாருங்க, அது போதும்.
பிடித்தமான குறுந்தகவலுக்கு இதழ் பிரிக்காமல் பெண்கள் பூக்கும் புன்னகை படு அழகு. தூக்கம் கலைகையில் கைகளை சிறகுகளாக விரித்து சோம்பல் முறித்தல் செம அழகு. கண்டுக்காமல் போவது போல ஓரக்கண்ணால் கண்டுவிட்டுப் போவது கோடி அழகு. பிரம்மன் வாஸ்து பார்த்து செதுக்கிய முகத்தில் புருவம் தூக்கி காட்டுவது பெரும் அழகு. தகிக்கும் உதட்டால் தங்க சங்கிலியை கடித்து யோசிப்பது தாறுமாறு அழகு. முழுவட்ட முகத்தில் முதல் முகப்பரு முழு அழகு. செய்த சிறு தவறை எண்ணி முகம் சுளித்து சமாளிக்கையில் சாத்வீக அழகு. பெண்ணின் பொறுமை அழகு, பெருமை பேசுவது அழகு, பொறாமை கூட ஒரு வகை அழகு. எல்லாவற்றையும் விட, கன்சீவ் ஆகியிருக்கேன் என்று சொல்லும்போது பெண் காட்டும் வெட்கமே அழகினில் அழகு.
குட்டிச்சுவர் சிந்தனைகள்
எங்கேயோ போயி ஒளிஞ்சுக்கிட்ட ‘சட்டம், ஒழுங்கு’தான் இந்த வார குட்டிச்செவுரு போஸ்டர் பாய்(ஸ்)
காதல் என்பது Made in India, கள்ளக்காதல் என்பது Made in China. விலையில்லா ஆட்சியில் எம்.எல்.ஏ பதவி என்பது Made in India, அமைச்சர் பதவி என்பது Made in China. கல்லூரி நண்பனின் நட்பு Made in India, கல்லூரித் தோழியின் நட்பு Made in China. உழைத்து சம்பாதித்த காசு Made in India, ஊரை ஏமாற்றி சம்பாதித்த காசு Made in China. திமுகவுடன் கூட்டணி என்பது Made in India, அம்மா திமுகவுடன் கூட்டணி என்பது Made in China. மனைவியின் கோபம் Made in India, கணவனின் கோபம் Made in China. அரேஞ்சுடு மேரேஜ் Made in India, லவ் மேரேஜ் என்பது Made in China. மச்சினன் உறவு என்பது Made in India, மச்சினிச்சி உறவு என்பது Made in China. இந்தியாவுல தயாராகிற பொருளுக்கு கேரண்டி, வாரண்டி எல்லாம் உண்டு. சீனா அயிட்டங்கள் பத்தி உங்களுக்கே தெரியுமே!
ஆல்தோட்ட பூபதி வாஸ்து பார்த்து கதவு, ஜன்னல் என வைக்காவிட்டாலும் எப்போதும் பணப் புழக்கத்துடன் ஏ.டி.எம் சென்டர்கள். நியூமராலஜி கணித்து ஒதுக்கப்படாமல் இருந்தாலும் அழைத்தவுடன் உயிர் காக்கும் 108 ஆம்புலன்சுகள். நேமாலிஜி பார்த்து பெயர் வைக்கப்படாவிட்டாலும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள் காந்திஜியும் நேருஜியும். அஸ்ட்ராலஜி பார்க்காவிட்டாலும் நூற்றைம்பது வருஷம் வாழ்கிறது அமைதியான ஆமை. சரி சரி... முறைக்காதீங்க. இதன் மூலம் நாங்க சொல்லவரும் கருத்து என்னன்னா, நம்பர் மேல வைக்கிற நம்பிக்கைய உங்க குடும்ப மெம்பர் மேல வைங்க. அம்புட்டுதான்!
|