கவிதைக்காரர்கள் வீதி




மனப்புண்


பாட்டியின்

எழுபது வருட மனப்புண்ணை
ஆற்றுமா
வாயில் விட்ட பால்?
- அம்பை தேவா,
சென்னை-116.

ஆசி

சற்றே வேகத்தை நிதானமாக்கி
சாலையோர கோயிலைப் பார்த்து
ஒற்றைக் கையால்
கன்னத்தில் போட்டுக்கொண்டு
உடனடியாக வேகம் பிடிக்கும்
வாகன ஓட்டிகளை
துரத்திச் சென்று
பிடிக்க முடியாமல்
சாலையில் விழுந்து உடைகிறது
கடவுள் வீசும் ஆசி!
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.


கேள்விகள்

சலிக்காமல்
கேள்விகள் வைத்திருக்கின்றன
எல்லா பதில்களுக்கும்
குழந்தைகள்.
- எஸ்.ஆனந்தகுமார், சென்னை-78.

ஏமாற்றம்

அலைகளைத் தேடி
ஏமாறுகின்றன
வீட்டில் வளர்க்கப்படும்
தொட்டி மீன்கள்.
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

முத்தம்

புரண்டு வரும் அலைகளிடம்
ஒளிந்து கிடக்கிறது
கரைக்கான
காதல் முத்தம்.
- ஏ.மூர்த்தி,
புல்லரம்பாக்கம்.

பலி
இதுவரை
யாரையும் வெட்டாத
மதுரை வீரனின் அரிவாளுக்கு
அவ்வப்போது பலியாகும்
நுனியில் செருகப்படும்
எலுமிச்சை பழம்.
- இரா.கமலக்கண்ணன், சித்தோடு.