ஈழத் தமிழர்களின் வாழ்வில் வெளிச்சம் வீசுவதற்காக, தமிழ் சினிமாக் கலைஞர்களான நாங்கள் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்கும் படம்தான் இது’’ என அந்த சோக நினைவுகளில் மூழ்கி பேசத் தொடங்கினார், சமீபத்தில் ‘டத்தோ’ பட்டம் பெற்ற ராதாரவி.
‘‘இலங்கையில் ஜெயவர்த்தனே ஆட்சியின்போது தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. ஈழத் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசை கண்டித்தும் 1984ல் நடிகர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடத்தினோம். விடியலே இல்லாமல் ஈழத்தில் துயரம் தொடர்ந்தபோது. 86ம் ஆண்டில் நான் நடிகர் சங்கத் தலைவராக இருந்தேன். அப்போது நான், விஜயகாந்த், சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் ஆகிய நால்வரும் ஒற்றுமையாகவும், பிரச்னைகளில் முன்னின்று குரல் கொடுப்பவர்களாகவும் இருந்தோம்.
பிரசிடென்சி கல்லூரி எதிரே மெரினா கடற்கரையில் தமிழ் சினிமாக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பதென முடிவானது. பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். தமிழ் சினிமாவில் உண்ணாவிரதக் காட்சி என்றால் பின்புற வழியாக பிரியாணி வருவது போல காட்டுவதுண்டு. அது சினிமா. நிஜ வாழ்க்கையில் சினிமா நடிகர்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் பயங்கரமான மழை. நாங்கள் அசரவில்லை. அந்த நேரத்தில் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் ஞாபகம் வந்தது. எச்சில் கூட விழுங்காமல், உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்தான் திலீபன். அதுதான் உண்மையான உண்ணாவிரதம். இஸ்லாமியர்கள் ரமலான் நோன்புக் காலத்தில் எச்சில்கூட விழுங்க மாட்டார்கள். நோன்பு என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் ஒரு மாதத்திற்கு உயிர் பிரியாமல் தாக்குப் பிடிக்கலாம் என்பார்கள். எங்களால் அதுபோல் இருக்க முடியாவிட்டாலும், அடை மழையின் ஒரு சொட்டுத்துளிகூட நாக்கில் படாமல் பார்த்துக்கொண்டோம். கேரவன் வசதி இல்லாத அந்தக் காலத்தில், இயற்கை உபாதைக்காக எழுந்து போகாமல் கூட உட்கார்ந்திருக்கிறோம்.
ஈழத்தில் பிரச்னைகள் தலை தூக்கும் நேரங்களில் நடிகர் சங்கம் சார்பில் நாடகமெல்லாம் போட்டு வசூலித்து நிதி கொடுத்திருக்கிறோம். மயிலாடுதுறையில் நான் தனிப்பட்ட முறையில் நாடகம் நடத்தி நிதி கொடுத்திருக்கிறேன். ஊர்வலம், உண்ணாவிரதம் என்று நடத்தியிருக்கிறோம். இப்படியெல்லாம் போராடியும் ஈழத்தில் இன்னமும் வெளிச்சம் வராத வேதனைதான் எனக்குள் இருளைப் போலவே அப்பியிருக்கிறது.’’
- அமலன்
படம் உதவி: ஞானம்