அண்டை மாநிலங்கள்தான் அணைகளை மறித்துக்கொண்டு தமிழக மக்களை வஞ்சிக்கிறதென்றால் இன்னொரு பக்கம் இயற்கை. ஆண்டுக்காண்டு வெயிலின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், பெய்யும் மழையின் அளவு குறைந்து கொண்டே போகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை வந்த வேகத்தில் காணாமல் போய்விட, தமிழக விவசாயிகளின் கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் கருகியது. ‘பருவநிலை மாற்றம் காரணமாக இனி வருங்காலங்களில் மழையின் அளவு குறைந்துபோகலாம்’ என்ற நிபுணர்களின் எச்சரிக்கை தமிழகத்தின் எதிர்காலத்தின் மீதே மிகப்பெரும் கேள்வியை எழுப்புகிறது.
உலகின் அதிக மழை பெய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆண்டின் சராசரி மழை அளவு 1215 மி.மீ. இதற்குக் காரணம், வேறெந்த நாட்டுக்கும் வாய்க்காத இரண்டு பருவமழைகள். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைகளின் காரணமாகவே இந்தியாவில் ஏராளமான ஜீவநதிகள் உயிர் பெற்று உலவுகின்றன.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூமியின் வெப்பநிலை அதிகமாகவும், கடலின் வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வை சமன் செய்வதற்காக தென்மேற்குப் பகுதியிலிருந்து கிளம்பி வரும் காற்றையும், மேகங்களையும் ஓங்கி உயர்ந்து நிற்கும் இமயமலை தடுத்து உடைத்து, மழையாகப் பொழியவைக்கிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூமியின் வெப்பநிலை குறைவாகவும், கடலின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகவும் மாறும். அதை சமன்செய்வதற்காக வடகிழக்கில் இருந்து வரும் காற்றையும், மேகங்களையும் தடுத்து மழையாக மாற்றுகிறது இமயமலை. இதுதான் பருவமழைகளின் பிறப்பு ரகசியம்.
இயற்கையாகவே நிகழ்ந்து வரும் இந்த சுழற்சியை குலைத்துப் போட்டிருக்கிறது ‘குளோபல் வார்மிங்’ எனப்படும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு. அதனால் பூமியின் இயக்கமே முரண்பட்டுவிட்டது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
‘‘பூமியைச் சுற்றி வளிமண்டலம் என்ற ஒரு படலம் இருக்கிறது. அதில் மீத்தேன், நீராவி, கார்பன் டை ஆக்ஸைடு, ஓசோன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்கள் உள்ளன. இவை ‘பசுங்குடில் வாயுக்கள்’ எனப்படுகின்றன. இவைதான் பூமியின் தட்பவெப்பத்தை நிர்ணயிக்கின்றன. பூமியில் பட்டு பிரதிபலிக்கிற சூரிய ஒளிக்கதிர்களை மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பி, உயிர்வாழத் தக்க அளவில் குளிர்ச்சியையும், வெப்பத்தையும் முறைப்படுத்துவதுதான் இவற்றின் வேலை.
அதிகரிக்கும் வாகனப்புகை, காடுகள் அழிப்பு, வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த பசுமைக்குடில் வாயுக்கள் செயலிழந்து வருகின்றன. உடம்பு உப்பிப் போன மனிதனைப்போல இந்த வாயுக்களின் செயல்பாடும் குலைந்து விட்டன. அதனால் பூமியின் வெப்பநிலை அதிகரித்து, துருவப்பகுதியில் இருக்கிற பனிப்பாறைகள் உருகத் தொடங்கிவிட்டன. பூமியின் வெப்பநிலை மட்டுமின்றி கடலின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. காற்றின் தன்மை மாறுவதற்கும் இதுவே காரணமாகிறது. வழக்கமாக வீசவேண்டிய காற்று தப்பிப்போவதால், மழையும் தப்புகிறது.
இதனால், வழக்கத்தை விட மழை குறைவாகப் பெய்வது மட்டுமல்ல, திடீரென எதிர்பாராத தருணத்தில் அதிகபட்ச மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கணிக்கிறபோது, நாம் சில விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்பது புரிகிறது’’ என்கிறார், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் பருவநிலை மாற்றத் திட்ட இயக்குனர் ஏ.அறிவுடைநம்பி.
தமிழக விவசாயம், பாரம்பரியத் தொழில்நுட்பமான கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. வானை அண்ணாந்து பார்த்தே இன்று மழைபெய்யும் என்று கணிப்பவர்கள் நம் விவசாயிகள். அந்த கணிப்பின்படியே விதையிடுவது, களையெடுப்பது எல்லாம் நடக்கும். ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றம் எல்லா கணிப்புகளையும் பொய்யாக்கி வருகிறது. விவசாயத்தில் ஏற்பட்ட சரிவுக்கு இதுவே பிரதான காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
‘‘பருவமாற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் அளவு 16 சதவீதம் குறைந்துவிட்டது’’ என்கிறார் சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணன். ‘‘தென்மேற்கு பருவகாலத்தை விட, வடகிழக்கு பருவகாலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் நமக்கு அதிக மழை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு பல மாவட்டங்களில் மழையளவு குறைந்து விட்டது. ஈரப்பதம் குறைந்ததுதான் இந்நிலைக்குக் காரணம். முழுமையான மழைப்பொழிவை எதிர்பார்த்திருந்த தருணத்தில், (டிசம்பர் 12ம் தேதி) வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மிகவும் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரக் கடல் பகுதியில் நிலை கொண்டது. அதனால் தமிழக கடல்பகுதியில் இருந்த ஈரப்பதம் உறிஞ்சப்பட்டது. போதாக்குறைக்கு, தென்சீன கடலில் உருவான ‘போபோ’ புயலும் தன் பங்குக்கு ஈரப்பதத்தை உறிஞ்சியதால், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகவில்லை.
இதையும் மீறி உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் தாழ்வுப் பகுதிகள் தென் இலங்கை கடற்பகுதிக்குச் சென்றுவிட்டன. நிலம் புயல் மற்றும் டிசம்பர் தொடக்கத்தில் உருவான சிறிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவே தமிழகம் ஓரளவுக்கு மழையைப் பெற்றது. வடகிழக்குப் பருவகாலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 442 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். 372 மி.மீ மழையே பெய்தது’’ என்கிறார் ரமணன்.
‘‘ஆனாலும், எதிர்காலத்திலும் இப்படியே நடக்கும் என்று பயம்கொள்ளத் தேவையில்லை’’ என ஆறுதல்படுத்துகிறார் அவர். ‘‘குளோபல் வார்மிங் போன்ற பிரச்னைகள் இருந்தாலும், இயற்கையை ஓரளவுக்கு மேல் யாராலும் கணிக்க முடியாது. தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் சக்தி இயற்கைக்கு உண்டு. எனவே வரும் காலத்தில் இந்நிலை மாறலாம்’’ என்கிறார் ரமணன்.
பருவநிலை மாறுபாடு பற்றி உலக அளவில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. ஆனாலும் யாராலும் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆர்க்டிக், அண்டார்க்டிகா துருவங்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குளிர்காலத்திலும் பனிப்பாறைகள் இளகி ஓடுகின்றன என்கிறார்கள். இதனால், கங்கை, யமுனை போன்ற ஜீவநதிகள் வற்றி, கடல் நீர்மட்டம் உயர்ந்து, சென்னை போன்ற கடலோர நகரங்கள் எல்லாம் உப்புநீருக்குள் மூழ்கிப்போகும் என்கிறார்கள். இயற்கைக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட மனிதனை இப்போது இயற்கை திருப்பித் தாக்குகிறதோ எனத் தோன்றுகிறது. பருவமழைக் குறைவு அதற்கான முன்னோட்டம்தானோ?!
- வெ.நீலகண்டன்