குத்துச்சண்டை ரவி... கொத்து பரோட்டா த்ரிஷா!





ரசகுல்லா ஒன்று டிராகுலா ஆனது போல ‘ஜெயம்’ ரவியின் முகத்தில் ‘பஞ்ச்’ வைக்க இடம் தேடிக்கொண்டிருந்தார் த்ரிஷா. இப்படி கிக் பாக்ஸிங் ‘கிக்கான’ பாக்ஸிங்காக மாறி இருந்த ‘பூலோகம்’ செட்டை விட்டு நகர மனசு வருமா? படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணனை ஓரங்கட்டி, ‘‘என்னங்க தமாஷ் இது?’’ என்றால், ‘‘ஹலோ... படத்தில சீரியஸாவே ஜெயம் ரவியோட கோச்சா த்ரிஷா வர்றாங்க!’’ என்று எதிர்பார்ப்பைப் பற்ற வைத்து, படம் பற்றி பேசினார்...

‘‘உலகத்தில் எத்தனையோ விளையாட்டுகள் இருக்கு. அத்தனை விளையாட்டுகளையும் சேர்த்து தலைசிறந்த விளையாட்டு வீரர்களா சமீபத்தில் மூணு பேரைத்தான் தேர்வு செஞ்சிருக்காங்க. குத்துச்சண்டை முகமது அலி, கால்பந்தில் பீலே, டென்னிஸ்ல ரோஜர் பெடரர். இதில் முதல் இடத்தில் இருப்பதே பாக்ஸிங் வீரர்தான். உலக அளவில் இவ்வளவு பிரபலமா இருக்கும் பாக்ஸிங்கை பத்தி இப்போ நமக்கு அதிகம் தெரியறதில்ல. ஆனா, ஒரு காலத்துல தமிழ்நாட்டுல... குறிப்பா, சென்னையில இதுதான் வீர விளையாட்டு. சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரைன்னு ரெண்டு பிரிவா இந்த பாக்ஸிங் சென்னையைக் கலக்கிட்டு இருந்திருக்கு. நாம இதை ஆராதிக்காததால, தமிழக குத்துச்சண்டை வீரர்கள் சர்வதேசப் புகழ் பெற முடியலை.

இந்த பெருமையான வரலாறை படம் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை. ‘பேராண்மை’ படத்துல நான் ஜனநாதன் சாருக்கு அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணினேன். அப்போதான் ஜெயம் ரவிகிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். பண்ணலாம்னு அவர் சொன்ன பிறகு, விறுவிறுன்னு அதுக்கான ஆராய்ச்சியில இறங்கிட்டேன். மூன்றரை வருஷம் இதுக்காக மெனக்கெட்டு தகவல் சேகரிச்சேன். விளையாட்டு, அதற்குள் இருக்கும் அரசியல், சமூகப் பார்வை, காதல்னு எல்லாமும் கலந்த கதை.

சுதந்திர இந்தியாவுக்கு முன்னால தொடங்குற கதை, பிறகு நிகழ்காலத்திற்குத் தாவுகிற மாதிரி திரைக்கதை பண்ணியிருக்கேன். கதைன்னாலே உண்மையோட கற்பனையும் கலக்கறதுதானே? அதனால நாட்டு மருந்து வாத்தியார் பரம்பரை, இரும்பு மனிதர் ராஜமாணிக்கம் பரம்பரைன்னு கற்பனையா ரெண்டு பெயர்களை வச்சிருக்கேன். இதில் நாட்டு மருந்து வாத்தியார் பரம்பரையைச் சேர்ந்த பூலோகம் என்ற கேரக்டர்தான் ஜெயம் ரவி.
ஒரு எதிர்பாராத சம்பவத்தால குத்துச்சண்டையில் இறங்குறவர், சர்வதேச குத்துச்சண்டை வீரரை எப்படி தோற்கடிக்கிறார் என்பதுதான் கதை. அந்த சர்வதேச குத்துச்சணடை வீரரா, நிஜமாகவே சர்வதேச அளவில் பிரபலமான பெலாங்டோ பாக்ஸிங் டோர்னமென்ட் பிளேயரான நேஷன் ஜோன்ஸ் நடிக்கிறார். ஏழு அடி உயரத்தில் மிரட்டும் ஜோன்ஸுக்கும் ஜெயம் ரவிக்குமான க்ளைமாக்ஸ் பாக்ஸிங் பைட் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத ஆக்ஷன் விருந்தா அமையும்.’’
‘‘இதில் த்ரிஷா எப்படி ஹீரோவுக்கு கோச்..?’’

‘‘படிப்புக்காக பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு வர்றாங்க த்ரிஷா. அதுக்காக சந்தனக் கலர் புடவையோட ஒரு ஷோகேஸ் பொம்மையா கற்பனை பண்ணிடாதீங்க. இது லைஃப். த்ரிஷாவோட அண்ணன், ஜெயம் ரவி வீட்டுக்கு எதிர்லயே பரோட்டா கடை வச்சிருக்கார். அந்தக் கடையிலதான் அவங்க காதல் மணக்க மணக்க மலருது. பின்னாடி சர்வதேச பிளேயரை வீழ்த்த வேண்டிய கட்டம் வரும்போது, த்ரிஷா உதவியோட அதை சாதிக்கிறார்.



வெறும் நுனிப்புல் மேயாம குத்துச்சண்டை பற்றி நிறைய டீட்டெயிலை இதுல சொல்லியிருக்கேன். பாக்ஸிங் ப்ராக்டீஸ் பண்றவங்க, எதிரிக்கு தன்னோட நுணுக்கம் தெரியக்கூடாது என்பதற்காக இருட்டில்தான் பயிற்சி எடுப்பாங்க. கையில ஒரு தங்கச் சங்கிலியைக் கட்டிக்கிட்டுதான் எதிரியை சண்டைக்குக் கூப்பிடுவாங்களாம். தமிழ் முறை, ஆங்கில முறைன்னு எதுக்கும் தயாரா இருப்பாங்களாம். தமிழ் முறைன்னா முகத்தில் மட்டும் குத்தணும். ஆங்கில முறைன்னா தொப்புளுக்கு மேல எங்க வேணும்னாலும் குத்தலாம். மாட்டு வால் சூப், கொண்டைக் கடலை, காலையிலேயே பிரியாணின்னு அவங்க சாப்பிடுறதே ஒரு தினுசா இருக்கும்.’’
‘‘படத்தில கானா பாட்டு நிறைய இருக்காமே?’’
‘‘ஆமா! வழக்கமான தமிழ் சினிமா பாட்டா இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி நானும், ஸ்ரீகாந்த் தேவாவும் சென்னை கானாக்களை சலிச்சு எடுத்து கொண்டாந்திருக்கோம். இதுல ஹைலைட்டா அமையப்போறது ‘மசானக் கொள்ளை’ பாட்டுதான்.

‘மசானக் கொள்ளையிலே அமாவாசையிலே
பூலோகத்தோட ஆட்டம் பாரேண்டா
பரம்பரை பகை தீர பயங்கர வெறியோட
அவன் சுயரூபத்தை காட்ட போறாண்டா
இவன் நரம்ப முறிச்சி எடுப்பான்
அவன் குடல உருவி குடிப்பான்...’ னு ஆரம்பிக்கிற அந்தப் பாட்டு, செம போல்டா இருக்கும்.
ஓட்டேரி சுடுகாட்டுக்கே போய் இந்தப் பாட்டை படமாக்கினோம். ஜெயம் ரவி அங்காளம்மனா ஆடுற அந்த சீனை ஷூட் பண்ணினபோதே துணை நடிகைகள் பத்து பேருக்கு நிஜமாவே சாமி வந்து ஆடினாங்க. சுடுகாடு அது இதுன்னதும் இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டு எழுதவே பெரிய பெரிய கவிஞர்களெல்லாம் தயங்கினாங்க. கடைசியா ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் விஜயசேகர்தான் பாட்டு எழுதினார்.

ஜெயம் ரவியோட இன்னொரு பரிமாணத்தை இந்தப் பாட்டுல பார்க்கலாம். இந்தச் சின்ன வயசில அவருக்குள்ள இருக்குற அற்புதமான நடிகனைப் பார்த்து நானே மிரண்டுட்டேன். ஜனநாதன் சாரோட வசனம், ஆர்ட் டைரக்டர் மோகனோட கலை இயக்கம் இரண்டுமே படத்துக்கு பெரிய பலமா இருக்கு. நசநசன்னு தமிழ்நாட்டு ஜனத்தொகையில பாதிய தாங்கிச் சுமக்குற சென்னையைத்தான் நமக்கெல்லாம் தெரியும். ஆனா, அதைத்தாண்டி இதுவும் ஒரு கிராமம்தான். இங்கயும் பூர்வீக மக்கள் உண்டு. அவங்களுக்குன்னு ஒரு பண்பாடு உண்டு. அதுல வீரம் உண்டு. நாம கவனிக்க மறந்த அந்த விஷயங்களை இந்த பூலோகத்துக்கே காட்டப் போகுது எங்க படம்!’’
- அமலன்