சுமார் நான்கரை லட்சம் மாணவர்கள் எழுதிய கடந்த ஆண்டு இயற்பியல் தேர்வில், சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை வெறும் 142. சில பகுதிகளில் கேள்விகளை ட்விஸ்ட் பண்ணிக் கேட்டது மற்றும் விடைத்தாள் திருத்துவதில் காட்டிய ‘ஸ்ட்ரிக்ட்னஸ்’ ஆகியவைதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் சில ஆசிரியர்கள். ‘‘இயற்பியலைப் பொறுத்தவரை, எல்லாப் பகுதிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கணும்; மாணவர்கள் அதைச் செய்யவில்லை’’ என்கிறார்கள் வேறு சில ஆசிரியர்கள். சென்டம் வாங்க இந்த ஆண்டு மாணவர்கள் என்ன செய்யலாம்?
‘‘1 மார்க் கேள்விகளுக்கு 30
3 மார்க் கேள்விகளுக்கு 45
5 மார்க் கேள்விகளுக்கு 35
10 மார்க் கேள்விகளுக்கு 40
- இதுதான் கேள்வித்தாள் ஆர்டர். மதிப்பெண் வரிசையைப் பார்த்தீங்கன்னா, புரியும். பத்தி பத்தியா எழுத வேண்டிய பெரிய கேள்விகளுக்கு 40 மார்க்னா, செகண்டுல விடையளிக்கற - அதுவும் விடை தரப்பட்டிருக்கிற ஒரு மார்க் வினாக்களுக்கு அதைவிடப் பத்து மார்க்தான் குறைவு. ரெண்டு பாயின்ட் அளவுக்கே விடையளிச்சா போதும்ங்கிற 3 மார்க் கேள்விகளுக்கு அதைவிட ஐந்து மார்க் அதிகம். அதனால ‘சென்டம்’ ஆசை நிறைவேறணும்னா, எல்லாப் பகுதியையும் சமமாப் பார்க்க வேண்டியது முதல் அவசியம். முதல்ல 1, 3 மார்க் கேள்விகளைப் பார்க்கலாம். ட்விஸ்ட் பண்ணிக் கேட்கப்பட்டதால, போன வருஷப் பசங்களைக் குழப்புனது இந்தப் பகுதிதான்’’ என்கிறார் இயற்பியல் ஆசிரியர் திருமாறன்.
பயனுள்ள
ஒரு மார்க் டிப்ஸ்...
மொத்தமுள்ள முப்பது ஒரு மார்க் கேள்விகளில் 20 வரை ‘புக்பேக்’ கேள்விகள்தான். மீதி 10 கேள்விகள், புத்தகத்தில் எங்கிருந்தாவது எடுக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் ரிப்பீட் கேள்விகளாக இருப்பதால், முந்தைய ஐந்து வருடக் கேள்வித்தாள்களை வாங்கிப் படித்தால் நல்ல பலன் கிடைக்கிறது.
ஒருவேளை இந்த வருடம் வினாத்தாள் தயாரிப்பவர்களைப் பொறுத்து, புதுக்கேள்விகளுக்கும் வாய்ப்பு இருக்கலாம். எனவே எல்லாப் பாடங்களையும் ஓரிரு முறை வாசித்து விடுவதும் அவசியமாகிறது.
கவனத்தைக் கொஞ்சம் அதிகப்படுத்தினால், ட்விஸ்ட் கேள்விகளைச் சமாளித்து விடலாம். உதாரணத்துக்கு.. ‘இரும்பு அணுக்கருவின் பிணைப்பு’ எனக் கேட்டால், 493 விமீக்ஷி என்கிற விடை ‘பட்’டென மாணவர்கள் மனதில் வந்து விடுகிறது. விடையில் இந்த எண்ணைப் பார்த்ததுமே மாணவர்கள் அதை எடுத்து எழுதி விடுகிறார்கள். ஆனால் இதே கேள்வியை ‘ஒரு இரும்பு அணுக்கருவின் பிணைப்பு’ என்று கேட்கிறபோது, விடை 8.8. இதுவும் விடைகளில் இருக்கும். இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.
முப்பதில் ஐந்து கேள்விகள் கணக்கை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பாலும் ‘புக்பேக்’ கணக்குகள் அப்படியே கேட்கப்படுவதால், நல்ல முறையில் ரிவிஷன் பண்ணிப் போயிருந்தால் விடையைப் பார்த்ததும் ‘பளிச்’செனத் தெரியும்.
சிலர் கேள்வித்தாளை வாங்கியதும், வாசிக்கக் கிடைத்த நேரத்தில் ஒரு மார்க் பகுதியையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். முப்பது கேள்விகளும் அட்டெண்ட் பண்ணியாக வேண்டுமென்பதால் இது தேவையில்லை. சாய்ஸ் பகுதிகளுக்கு அந்த நேரத்தைச் செலவழித்து கேள்விகளைத் தேர்வு செய்யலாம்.
அடுத்ததாக மூன்று மதிப்பெண் கேள்விகள். இதில் இருபது கேள்விகள் கேட்டு பதினைந்து எழுதச் சொல்கிறார்கள். இதில் 2 மற்றும் 9வது பாடங்களிலிருந்து மட்டுமே 7 கேள்விகள். அதேபோல் ஐந்து கணக்குக் கேள்விகள். கணக்குக் கேள்விகள் 2,4,5,6,9 ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்படுகின்றன.
மூன்று மார்க் கேள்விகளில் முழுமையாக மார்க் அள்ளுவதற்கு சில டிப்ஸ்...
கணக்கு கேள்விகள் மிகவும் எளிமையானவையே. ஃபார்முலாக்கள் மட்டும் மனதில் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் 20 ஃபார்முலாக்கள் வரை இருக்கலாம். தனியாக தொகுத்துப் படித்தால் ஈஸி.
கணக்குக் கேள்விகளுக்கு விடையளிக்கிறபோது, விடைக்குப் பக்கத்தில் கட்டாயம் யூனிட் எழுத வேண்டும். மறந்தால் அரை மார்க் மைனஸ்.
மேம்போக்கான பதிலுக்கு முழு மதிப்பெண் கிடையாது. டீடெய்லான பதிலை எதிர்பார்க்கிறார்கள். புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளுடன் கம்ப்ளீட் பதில் அவசியம். எடுத்துக்காட்டாக.. ‘மின்தேக்கியின் பயன்’ என்று கேட்டால், ‘ரேடியோவில் பயன்படுகிறது’ என்று பதிலளிக்கக் கூடாது. ‘ரேடியோவில் மின்காந்த அலைகளை உருவாக்கி மின்சுற்றுகளில் ட்யூனிங் செய்யப் பயன்படுகிறது’ என்கிற பதிலுக்கே முழு மார்க்.
தனித்தனி கேள்விகள் என்றாலும் ஒரே மாதிரி தெரியும் சில மூன்று மார்க் ட்விஸ்ட்ஸ்...
‘மின்னாற்பகுத்தல் விதி’ மற்றும் ‘மின்காந்த தூண்டல் விதி’
‘கூலும் - வரையறு’ மற்றும் ‘கூலும் விதியைக் கூறு’
‘லேசருக்கான நிபந்தனைகள்’ மற்றும் ‘லேசருக்கான சிறப்பியல்புகள்’
‘நிலைநிறுத்தப்பட்ட குறுக்கீட்டு விளைவுக்கான நிபந்தனைகள்’ மற்றும் ‘குறுக்கீட்டு விளைவில் பொலிவுப் பட்டைகளுக்கான நிபந்தனைகள்’
முனைவுள்ள, முனைவற்ற மூலக்கூறு
பொதுவாக எப்போதும் எதிர்பார்க்கப்படும் மூன்று மார்க் ரிப்பீட் கேள்விகள் வருமாறு...
ஒளிவட்ட இறக்கம் என்றால் என்ன?
மைக்ரோ அலை சமையல் கலன் என்றால் என்ன?
இடி, மின்னலின்போது மரத்தடியில் நிற்பதை விட, காரின் உள்ளே இருப்பது பாதுகாப்பானது, ஏன்?
இயக்க எண் - வரையறு
ஓமின் விதியைக் கூறுக
ஆம்பியர் - வரையறு
வெப்பத்தை உண்டாக்க நிக்ரோமினால் ஆன கம்பிச்சுருள் பயன்படக் காரணங்கள் யாவை?
மின்காந்தத் தூண்டல் என்றால் என்ன?
ஃபிளமிங் வலக்கை விதியைக் கூறுக.
நியூட்டன் வளையங்களின் மையம் கருமையாக அமையக் காரணம் யாது?
ஒளியியல் அச்சு என்றால் என்ன?
மென் எக்ஸ் கதிர் மற்றும் வன் எக்ஸ் கதிர்களிடையே உள்ள தொடர்பு என்ன?
லவே ஆய்வில் உள்ள இரண்டு கருத்துகள் யாவை?
லேசர் செயலைப் பெற வேண்டிய நிபந்தனைகள்
நிறுத்து மின்னழுத்தம்
ஒளிமின்கலன்களின் பயன்கள்
ஒரு கியூரி - வரையறு
எலக்ட்ரான் வோல்ட் - வரையறு
கேத்தோடு கதிர் அலைநோக்கியின் பயன்கள்
எதிர் பின்னூட்டத்தின் பயன்கள் யாவை?
அலைவு ஒன்றிற்கான பர்கௌசன் நிபந்தனை
பண்பேற்ற எண் - வரையறு
செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் குறைபாடுகள்
ஐந்து, பத்து மதிப்பெண் கேள்விகள் வரும் இதழ்களில்...
தொகுப்பு:
அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன், கிருஷ்ணமூர்த்தி
செலக்ட் பண்ண வேண்டாம்!
‘‘ஒரு மார்க்கை மட்டும் ப்ளூப்ரின்ட்படி படிச்சா வேலைக்கு ஆகாதுன்னு முதல்லயே முடிவு பண்ணியிருந்தேன். அதனால ஏ டூ இசட் புத்தகத்தை வாசிச்சுட்டுப் போனேன். ட்விஸ்ட் கேள்விகள் என்னையும் மிரட்டுச்சு. ஆனா அந்தக் கேள்விகளுக்கு கடைசியில நேரம் ஒதுக்கி யோசிச்சு ஆன்ஸர் பண்ணுனேன். பாடங்களை செலக்ட் பண்ணிப் படிச்சா பாஸ் பண்ணிடலாம். ஆனா, சென்டம் கிடைக்காது. இப்ப ஆரம்பிச்சாலும் வாசிக்க டைம் இருக்கு’’ என்கிறார் கடந்தாண்டு சென்டம் பெற்ற 142 பேரில் ஒருவரான, மாணவி ரஞ்சனி.