பிரிவு





“மகேஷ்... என்னால ஒரு நிமிஷம்கூட உங்கம்மாவோட இருக்க முடியாது. ‘இதச் சாப்பிடாதீங்க... அதப் போட்டுக்காதீங்க... வயசாயிடுத்து... ரொம்ப நேரம் டிவி முன்னால ஒக்காராதீங்க...’ன்னு ஒரே சித்திரவதை. என்னைப் பேசாம டெல்லிக்குக் கூப்பிட்டுக்கோ. வேலை பார்த்த இடம். ஆறுதலா இருக்கும். மும்பையில இருக்கற உன் தம்பிக்குச் சொல்லி அம்மாவை வச்சுக்கச் சொல்...’’

ஈஸ்வரன் படபடவென்று பையனிடம் பேசிவிட்டு போனை வைத்தார்.
‘‘என்னங்க இது... உங்க மேல இருக்கற அக்கறையிலதானே அப்படிச் சொல்லிட்டிருக்கேன்!’’ என கலங்கிய பாக்கியத்தை, ‘‘கொஞ்சம் பொறுத்துக்கோ’’ என்று ஈஸ்வரன் கையமர்த்தினார்.
சிறிது நேரத்தில் போன் வந்தது. இப்போது மகேஷின் தம்பி சுரேஷ் மும்பையிலிருந்து...
‘‘அம்மா... அப்பாவுக்கு என்ன பைத்தியமா? ஏன் இப்படி பேசறார். 35 வருஷ தாம்பத்யம். நானும் மகேஷும் குடும்பத்தோட அங்க வந்து ஒரு பத்து, பதினஞ்சு நாள் இருக்கோம். எல்லாம் சரியானதும்தான் திரும்புவோம். கவலைப் படாதே..!’’
போனை வைத்த பாக்கியம், கணவரிடம் விஷயத்தை சொன்னாள்.
‘‘எப்போ பாரு ‘வேலை... லீவ் இல்லை... முடிஞ்சா நீங்க வந்துட்டுப் போங்க...’ன்னு அவங்க இதுவரைக்கும் சொன்ன எல்லாத்துக்கும் இந்த தடவை ஒரு முற்றுப்புள்ளி! அவங்க குடும்பத்தோடு வந்து இங்க இருப்பாங்க. அவங்க முன்னால நீ என்னைக் குறை சொல்றதை மட்டும் நிறுத்தாதே...’’
- ஈஸ்வரன் சொல்லி சிரித்தார்.