சம்பந்தம்
தன்னைப் பெண் பார்த்து சம்மதம் தெரிவித்த மாப்பிள்ளையோடு தனியாகப் பேச விரும்பினாள் மாதங்கி. பெற்றோர் ஏற்பாட்டின்படி பொது இடத்தில் அவரை சந்தித்துப் பேசிவிட்டு சோர்வாக வீடு திரும்பினாள். அம்மா பார்வதி ஆர்வத்தோடு கேட்டாள்... ‘‘என்னம்மா, பேசினியா?’’ ‘‘ஆங்... பேசினேன், இந்தப் பையன் வேண்டாம்மா’’ - அசுவாரஸ்யமாக பதிலளித்தாள் மாதங்கி. ‘‘என்னடி சொல்ற? நேர்ல பார்த்தப்போ கூட சரின்னுதானே சொன்னே? இப்போ என்னாச்சு? மாப்பிள்ளை ஏதாவது சொன்னாரா?’’
‘‘ஏதாவது சொன்னாதான் பரவாயில்லையே. எதுவுமே சொல்லலை. நான் பேசுறதையே கேட்டுக்கிட்டு உக்கார்ந்திருக்கார். ஏதாவது கேட்டா, ‘உங்களை புடிச்சிருக்கு’ன்னு ஓட்டை டேப்ரெக்கார்டர் மாதிரி சொல்றார். என் ஃப்ரண்ட் அஜய் எப்படிப் பேசுவான் தெரியுமா? நாள் முழுக்க கேட்டுக்கிட்டே இருக்கலாம்!’’
‘‘அடி அசடே, பெண்கள் ரசிக்கிற மாதிரி பேசத் தெரியாம இருக்குறது இந்தக் காலத்துல ரொம்பப் பாதுகாப்புடீ. உன்னையே பேசிக் கவுக்கத் தெரியாதவன் வேற யாரை கவுத்துட முடியும்? இது ஒரு நல்ல விஷயம்தானே. படிப்பிலும் வேலையிலும் திறமைசாலியான்னு மட்டும் பாரு’’ என்றாள் பார்வதி.
‘‘இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கலையே... நீ சொல்றதும் கரெக்ட்தாம்மா’’ என அசடு வழிந்தாள் மாதங்கி.
|