உதவி





‘‘அம்மா, சார் டியூஷன் ஃபீஸ் கேட்டாரும்மா!’’ என்ற மகன் ரவியை வியப்புடன் நோக்கினாள் ராணி.
‘‘டேய்... உன்கிட்டயாடா ஃபீஸ் கேட்டாரு?’’
‘‘ஆமாம்மா. நான் என்ன பொய்யா சொல்றேன்... நிஜம்மா!’’
அருகில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த கணவனை நோக்கி, ‘‘பாருங்க... அந்தப் பையன் படிக்க ஆயிரம் ஆயிரமா நீங்க உதவி செய்தீங்க... இன்னைக்கு நம்ம பையன்கிட்டேயே ஃபீஸ் கேட்டிருக்கான்’’ - வருத்தத்துடன் சொன்னாள் ராணி.
‘‘சரி விடு, ஃபீஸ் கொடுத்தனுப்பு!’’ என்று, தினசரியில் மூழ்கினார் அவர்.

மாலை...
‘‘வாங்க தம்பி... உட்காருங்க!’’
‘‘காலையில தம்பி ஃபீஸ் எடுத்து வந்து கொடுத்தான்... இந்தாங்க’’ என்று பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் ஆசிரியர் ஜெயபால்.
‘‘நீங்கதான் கேட்டீங்கன்னு சொன்னான்...’’

‘‘ஆமாம் சார். பையனுக்கு ஃபீஸ் கொடுத்து படிச்சாதான் அதோட அருமை தெரியும். இல்லைன்னா, ஃப்ரீயாதானே சொல்லித் தராங்கன்னு ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்தமாட்டான். நீங்க எனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கீங்க. உங்ககிட்ட நான் பணம் வாங்கக் கூடாது. அதான் திருப்பிக் கொடுக்க வந்தேன்.’’

‘சே... இந்தத் தம்பியப் போய் தப்பா நினைச்சிட்டோமே’ என்ற வருத்தத்தோடு, இருவருக்கும் காபி போட ஆரம்பித்தாள் ராணி.