போட்டோ





தனது ஆபீஸுக்கு வந்த நண்பர் பரசுராமனிடம், அங்கு மாட்டியிருந்த போட்டோக்களை காட்டி சொன்னார் கணேசன்.
‘‘இது என்னோட அப்பா சுந்தரேசன்... தொழில்ல அக்கறை காட்டாம அலட்சியமா வாழ்ந்தே சொத்து எல்லாத்தையும் இழந்தவர். இது என்னோட சித்தப்பா... தேவையில்லாம விரயச் செலவு பண்ணி லாஸ் ஆனவர். இது என்னோட மாமா.... எதையும் ஆராயாம அகலக் கால் வச்சதால ஓட்டாண்டி ஆனவர்’’ - கணேசன் சொல்லச் சொல்ல ஆச்சரியமானார் பரசுராமன்.

பொதுவாக தங்கள் ஆபீஸில் எல்லோரும் தெய்வங்களின் படத்தை வைத்து வழிபடுவார்கள். இல்லையென்றால் தொழிலில் சாதித்து வெற்றி பெற்ற முன்னோர்கள் படத்தை வைத்து பாரம்பரியம் உணர்த்துவார்கள்... இவரென்ன அப சகுனம் போல, தோற்றவர்களின் படங்களை வைத்திருக்கிறார்? ஆர்வ மிகுதியால் கணேசனிடம் கேட்டே விட்டார் பரசுராமன்.

‘‘இது அபசகுனம் இல்லை பரசுராமா... பாடம். தொழில்ல வெற்றி பெறவும் பெற்ற வெற்றியைக் காப்பாத்திக்கவும் தேவையானது பயம். அந்த பயத்தையும் எச்சரிக்கை உணர்வையும் இந்த போட்டோக்கள் தருது. அப்பா மாதிரி, சித்தப்பா மாதிரி, மாமா மாதிரி இருந்தா தொழில்ல தோத்துடுவோம்ங்கிற எச்சரிக்கை உணர்வுதான் இன்னிக்கு நான் தொழில்ல இந்த அளவு வெற்றிகரமா இருக்கறதுக்குக் காரணம்!’’
கணேசன் சொன்னது சரியென்றே பட்டது பரசுராமனுக்கு.