அரும்பு மீசை பருவத்தில் இளமை பொங்க இருக்கும் கமலுடன் உரையாடல் நடத்திக்கொண்டிருப்பவர் காரைக்குடி நாராயணன். கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அவரிடம் இந்தப் புகைப்படத்தைக் காட்டினோம்.
‘‘1974ல் ‘தேன் சிந்துதே வானம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த படம் இது. அப்போ எனக்கு முடி நிறைய இருக்கும். காற்றில் பறந்துகொண்டே இருக்கும் என்பதால், இப்படி கர்ச்சீப்பை தலையில் வைத்து கட்டிக்கொள்வேன். ‘அரங்கேற்றம்’ படத்தில் கமல் நடித்து முடித்திருந்த நேரத்தில்தான் ‘தேன் சிந்துதே வானம்’ படத்தில் நடிக்க வந்தார். ரா.சங்கரன் டைரக்ட் பண்ணின படத்துக்கு நான்தான் திரைக்கதை வசனம். கமல் - ராணிசந்திரா, சிவகுமார் - ஜெயசித்ரான்னு படத்தில் ரெண்டு ஹீரோ, ஹீரோயின்கள்.
‘எழுதாத பாடல் ஒன்று...’ன்னு தொடங்குற பாடல் காட்சியை ஊட்டி பொட்டானிகல் கார்டனில் ஷூட் பண்ணினோம். சலீம்தான் டான்ஸ் மாஸ்டர் என்றாலும், கமல்தான் இந்தப் பாடலுக்கு டான்ஸ் கம்போஸ் பண்ணி ராணிசந்திராவுடன் ஆடினார். அடிப்படையில் கமலும் டான்ஸ் மாஸ்டர் என்பதால், மூன்று நாள் எடுக்க வேண்டிய பாடலை எக்ஸ்பிரஸ் வேகத்தில் படமாக்கி ஒன்றரை நாளிலேயே முடித்துக் கொடுத்தார். இந்தப் பாடலின் தொடர்ச்சியாக ஸ்ரீகாந்த்தும் கமலும் மோதும் சண்டைக் காட்சியையும் படமாக்கினோம். கமல் குத்துவது போலவும், ஸ்ரீகாந்த் கீழே விழுவது போலவும் நடிக்க வேண்டும்.
கமல் குத்துவதுபோல பாவ்லா காட்ட, அடிபட்டதுபோல ஸ்ரீகாந்த் நடிக்க... வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் அதைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டது. அவ்வளவுதான்... ‘ஆடியன்ஸ் முன்னால என்னை அவமானப்படுத்தணும்னே இந்த சீனை எடுக்குறீங்களா’ என்று கோபித்துக்கொண்டு ஸ்ரீகாந்த் கிளம்பிப் போய்விட்டார். அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் நானும் கமலும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இந்தப் படத்தில்தான் குமார் மியூசிக்கில் ‘உன்னிடம் மயங்குகிறேன்...’ என்ற பாட்டு ரொம்ப பிரபலமானது. எப்போது கேட்டாலும் தேன் மாதிரி தித்திக்கும்’’ என அந்தப் பாடலை நினைவு கூர்ந்து சிலிர்க்கிறார் நாராயணன்.
- அமலன்
படம் உதவி: ஞானம்