நிழல்கள் நடந்த பாதை



கொண்டாட ஒரு நாள்


விழாக்கால மாதங்கள் தொடங்கி விட்டன. அக்டோபரிலிருந்து ஜனவரி வரை நிறைய விடுமுறைகளும் கொண்டாட்டங்களும் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி, மொஹரம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என மக்கள் கொண்டாடிக் கொண்டாடி களைத்துப் போவார்கள்.

பணப்புழக்கம் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதுபோல சட்டென அதிகரித்து எல்லா இடத்திற்கும் பாய்வதைக் காணலாம். (இந்த உதாரணத்தை இப்போது சொல்வது சரிதானா என்று தெரியவில்லை!) எந்தக் கடைக்குப் போனாலும் உள்ளே நுழைந்து வெளியே வர முடியவில்லை. வாங்கித் தீராத பொருள்கள் எல்லா இடங்களிலும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. விலைவாசி உயர்வு, மின்சாரமின்மை, மழையின்மை போன்ற விஷயங்கள் அடித்தட்டு மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. ஆனால் பண்டிகைக் காலங்களில் இதெல்லாம் எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. மக்கள் விழாக்காலத்தின் ஏதாவது ஒரு நுனியையாவது பற்றிக்கொண்டு, அதன் ஒரு பகுதியாக மாறிவிடுகிறார்கள்.

நகரங்களில் பிழைப்பிற்காக வந்தவர்கள் பண்டிகைக் காலங்களில் ஊருக்குச் செல்லும் காட்சி, ஏதோ யுத்த முனையிலிருந்து தப்பிச் செல்லும் மக்கள் கூட்டத்தை நினைவூட்டுகிறது. ரயில்கள் பல மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. தனியார் பேருந்துகள் கிட்டத்தட்ட வழிப்பறி செய்வதைப் பார்க்கலாம். ஓட்டை உடைசல் பஸ்களில் எல்லாம் மக்களை மந்தை மந்தையாக ஏற்றி, பாதி வழியில் இறக்கிவிட்டுச் செல்வதை சாதாரணமாகப் பார்க்கலாம்.

இவ்வளவு நெருக்கடிகளுக்கும் பிரயாசைகளுக்கும் நடுவில் மனிதர்கள் வீட்டுக்குப் போகவேண்டும் என்று நினைக்கிறார்கள். கையில் கொண்டாட்டத்தை உருவாக்கும் அளவுக்குப் பணம் இல்லாவிட்டால்கூட, தன் இடத்தோடும் குடும்பத்தோடும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்; தன் நண்பர்களோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தனது சமூக வேர்களிலிருந்து உடைந்து போன மனிதனுக்கு பண்டிகைகள் என்பது தன்னை எங்கோ மீட்டுக்கொள்வதற்கான ஒரு கனவாக இருக்கிறது.

வீட்டில் யாராவது இறந்துபோன முதல் வருடம் பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. அன்று இறந்தவரின் நினைவுகள் பெரும் பனிப்படலமாக வீட்டில் வந்து இறங்குவதைக் காணலாம். இறந்தவரின் நிழல் நம்முடைய ஒவ்வொருவரின் நிழலிலும் கலந்துவிடும். இறப்பின் புனித ஆடைகளை நாம் அணிந்துகொண்டு, புத்தாடைகளைத் துறந்துவிட்டு நின்றுகொண்டிருப்போம்.

ஆனால் குழந்தைகளால் இந்த துக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் சாவு நடந்த வீட்டின் முதல் வருட பண்டிகை தினத்தில் ஏங்கிப் போவார்கள். அந்தக் குழந்தைகளை நம்மால் முடிந்த அளவு இறுக அணைத்துக்கொள்ள வேண்டும். சாவின் துக்கம் அந்தக் குழந்தைகளின் இதயத்தில் இறங்கக் கூடாது. அது அவர்களின் மகிழ்ச்சியின் முளைகளைக் கருகச் செய்துவிடும். எவ்வளவு பெரிய துக்கத்திலும், ஒன்றுமே நடக்கவில்லை என்றுதான் நம் குழந்தைகளை

நம்பச் செய்யவேண்டும். என் அம்மா இறந்த முதல் வருட ரம்ஜானில் என் தம்பிக்குப் புத்தாடைகள் அணிவித்தேன். ‘அம்மா இல்லாத முதல் ரம்ஜான்’ கவிதையில் அந்த தினத்தை எழுதினேன்.
பண்டிகை தினங்களில் வீட்டுக்குப் போக முடியாமல் ஏதோ காரணத்தால், ஏதோ ஒரு நகரத்தில், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கிக்கொண்டவர்களின் தனிமையுணர்ச்சி மிகவும் கடுமையானது. தான் புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஒரு உணர்வை அடைகிறார்கள். அவர்கள் தங்களைச் சேர்ந்த யார் யாரையோ நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அன்று ஒரு ஹோட்டலில் உணவு வாங்கிச் சாப்பிடும்போது அந்த துக்கம் அளப்பரியதாக மாறிவிடுகிறது. பண்டிகைகள் கொண்டாடுவதில் மரபு சார்ந்த அவ்வளவு நம்பிக்கைகள் இல்லாத என்னையே பல சமயங்களில் இந்த உணர்வு அலைக்கழித்திருக்கிறது. நான் பொதுவாக, யாரும் என்னை அவர்கள் வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்று விரும்புகிறவன் அல்ல. ஆனால் பண்டிகை தினங்களில் நான் ஒரு அழைப்பிற்காகக் காத்திருந்திருக்கிறேன். பெரும்பாலும் அந்த அழைப்பு வந்ததே இல்லை.

குழந்தைகள்தான் ஒவ்வொரு பண்டிகைக்கும் உயிர் கொடுக்கிறார்கள்; வடிவம் கொடுக்கிறார்கள். பண்டிகை தினத்தின் ஒவ்வொரு ஒளிரேகையும் குழந்தைகளின் கண்களிலிருந்தே பிறக்கிறது. அவர்கள் பண்டிகையை தெருவிலிருந்து வீட்டிற்குள் கொண்டுவருகிறார்கள். பண்டிகை காலங்களில் நமது முதன்மையான செலவு குழந்தைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் குழந்தைகள் இல்லாத வீட்டில் பண்டிகை ஒரு வேண்டா விருந்தாளியைப் போல தயங்கித் தயங்கி வந்து சோபா நுனியில் அமர்ந்திருக்கிறது. அதனோடு என்ன பேசுவதென்று நமக்குத் தெரிவதில்லை. கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், குழந்தைகள் இல்லாமல் ஒரு வீட்டிற்குள் பண்டிகைகளின் குரலை ஒலிக்கச் செய்வது கடினம். அப்படிப்பட்ட வீடுகளின் மனிதர்கள், குழந்தைகளைப் போல வாடிப் போய்விடுகிறார்கள். நாம் குழந்தைகளை எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்பது இந்தப் பண்டிகை தினங்களில் தெரிவது போல வேறெப்போதும் தெரிவதில்லை.

முன்பெல்லாம் பண்டிகைக்கு என்று சில குறிப்பிட்ட தேவைகள்தான் இருந்தன. மதம் சார்ந்த வழிபாடுகள், பட்சணங்கள், புத்தாடைகள், சந்திப்புகள். அது ஒரு கலாசாரம் சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் இன்று பண்டிகைக் காலத்தில் வாங்கவும் பரிசாகக் கொடுக்கவும் என்னென்னவோ வந்துவிட்டன. செல்போன்கள் இப்போது பண்டிகைக் கால பரிசின் முக்கியமான பகுதியாக மாறிவிட்டன. பண்டிகைக் காலத்தில் புத்தாடைகளுக்கோ இனிப்பிற்கோ தள்ளுபடி கொடுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வாஷிங்மெஷின், பிரஷர் குக்கர், ஏர் கண்டிஷனர் என்று எதை எதையெல்லாமோ பண்டிகைக் காலங்களில் வாங்கும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். மக்களுக்கு பண்டிகைக் காலத்தில் கையில் கிடைக்கும் காசை எப்படி யார் யார் எவ்வளவு பங்கிட்டுக்கொள்வது என்பதில்தான் பிரச்னை.

ஒவ்வொரு சமூகப் பிரிவினருக்கு என்றும் பண்டிகைக் காலத்தில் சில தனிச்சிறப்பு வாய்ந்த உணவுப் பண்டங்கள் இருந்தன. அந்தக் காலத்தில் மட்டுமே அதன் சுவையையும் மணத்தையும் நுகர முடியும். இன்று அவை அபூர்வமாகவும் அழிந்து வரும் பண்பாட்டின் அடையாளமாகவும் மாறிவிட்டன. வடஇந்திய இனிப்புகள் இன்று எல்லா குடும்பங்களுக்குள்ளும் பண்டிகைக்குள்ளும் நுழைந்துவிட்டன. அது கொஞ்சம் வருத்தத்தைத் தந்தாலும், பண்டிகைக் காலங்களில் பெண்களுக்கு இருந்த மிகப் பெரிய சுமை அகன்று வருகிறது.

பண்டிகைக் காலங்களில் அனுப்பப்பட்டு வந்த வாழ்த்து அட்டைகள் வேகமாக வழக்கொழிந்து வருகின்றன. பிடித்த வாசகங்களுடன் அவற்றை வாங்கி கையெழுத்திட்டு அனுப்புவதில் ஒரு அந்தரங்கமான சந்தோஷம் இருந்தது. இன்று குரூப் எஸ்.எம்.எஸ்கள் வாழ்த்தின் எந்த ஒரு தனிப்பட்ட அர்த்தத்தையோ வெதுவெதுப்பையோ தருவதில்லை. நான் அவற்றைப் படிப்பதுகூட இல்லை.
இறுதியாக பண்டிகைக் காலங்களில் பொதுவாக என்ன நடக்கிறது என்று யோசித்தால், பெரும்பாலான ஆண்கள் குடிக்கிறார்கள்; பெரும்பாலான பெண்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இதற்கும் காரணம் இறைவனா?

மதுரை ஆதீனம் அருணகிரியால் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததும் உடனே அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, ‘‘இதுவும் ஆண்டவன் செயலே...’’ என்று அறிக்கை பேட்டியளித்துள்ளார். அவர் இவ்வளவு காலம் யாரை ‘ஆண்டவன்... ஆண்டவன்...’ என்று சொல்கிறார் என்று இப்போதுதான் லேசாகப் பொறி தட்டுகிறது. அத்தனை சைவ மடங்களின் எதிர்ப்புகளையும் காலில் போட்டு மிதித்தவர், ஒரு அரசாங்கத்தின் குரலுக்கு உடனே மண்டியிட்டதன் மூலம் இவர்களின் மதம் என்னவென்று தெளிவாகத் தெரிகிறது.
ஒரு நாத்திகனான என்னையே இவர்கள் இப்படி ஆண்டவனை அவமதிக்கும் விதம் புண்படுத்துகிறது என்றால், தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் எப்படித்தான் தாங்கிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

பெண்களுக்கு எதற்கு போன்?
இந்திய அரசியல்வாதிகள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று யார் யாரோ பெண்களின் கற்பு பற்றி இப்போது தினமும் கவலைப்பட்டு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ஒருவர், ‘இளம் பெண்களிடமிருந்து செல்போன்களைப் பிடுங்கவேண்டும்’ என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சட்டமன்றத்தை செல்போனில் ஆபாசப்படம் பார்க்கும் ரகசிய அறைகளாக மாற்றிவிட்ட மக்கள் பிரதிநிதிகள் வாழும் நாட்டில், அவர்களிடமிருந்தெல்லாம் போனைப் பிடுங்கிவிட்டு அப்புறம் பெண்களிடம் வரலாம்.
(இன்னும்  நடக்கலாம்...)




நான் படித்த புத்தகம்
விதைகள் தொகுப்பு நூல்


இந்திய விவசாயத்தின் பேரழிவு பசுமைப் புரட்சிக்குப் பின் துவங்குகிறது. நவீன வேளாண்மை முறையும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகபட்ச உற்பத்தி என்ற மாயவலையின் மூலம் நமது இயற்கையான வேளாண் ஆதாரங்களை நிர்மூலமாக்கிவிட்டன.
அகில உலக தாவர மரபியற் வளங்களுக்கான அமைப்பின்கீழ், பல்வேறு நாடுகள் மரபுக்கூறு வங்கிகளை அமைக்கின்றன. அவை அந்த நாடுகளிலிருந்து உயிர் ஆதாரங்கள் என்ற பெயரில் விதைகளைச் சேகரித்து தங்கள் வர்த்தக நலன்களுக்கு ஏற்ப மரபணு மாற்றங்கள் செய்து புதிய விதைகளை வடிவமைக்கின்றன. நமது மரபான விதைகள் படிப்படியாக அகற்றப்பட்டு, இந்தப் புதிய விதைகளை சாகுபடி செய்யும்படி விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இந்த வகை விதையிலிருந்து வளரும் பயிர்கள் மாட்டுத் தீவனம் போன்ற பயன்பாடுகளுக்கு உதவாதவை. விதைகளுக்குப் பின்னே இருக்கும் பொருளாதாரத்தையும் அரசியலையும் விரிவாக அலசும் இந்த நூல், ஒரு நாட்டை ராணுவரீதியாக கைப்பற்றுவதைவிட ஆபத்தானது அதன் விதைகளைக் கைப்பற்றுவது என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது.
(விலை: ரூ.70/-,
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்,
ஏ2, அலங்கார் பிளாசா,
425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை-600010.
தொலைபேசி: 044-26461455.)

எனக்கு பிடித்த கவிதை
இன்றுவரை


இன்றுவரை
ஒன்றுமே செய்ய முடியவில்லை
அந்த இரவை

சங்கர் அண்ணனின்
அகால மரணத்தைச் சொல்லி
சாலைவரை கைப்பற்றி
ஆட்டோவில் பயணிக்கும்போது
வருடிக்கொடுத்து
பிணவறை வாசலுக்கு
அம்முவைக் கூட்டிச் சென்றது
எனக்கு மிகப் பிடித்தமான
ஒரு பௌர்ணமி இரவில்தான்

ஒன்றுமே செய்ய முடியவில்லை
அந்த இரவை
இன்று வரை
- வே.பாபு

மனுஷ்ய புத்திரனின்
ஃபேஸ்புக் பக்கம்


தமிழக அரசு சூரிய ஒளி மூலம் அடுத்த 3 வருடத்தில் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்போகிறதாம். பாராட்டுக்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நாங்கள் இதே கருத்தை முன்வைத்தபோது அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று எங்களை சட்டையைப் பிடித்து அடிக்க வந்த அணு உலை ஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?