பொற்சிலை சுனைனா!





அட்டையில் கற்சிலைக்குப் பக்கத்தில் பொற்சிலையாய் சுனைனாவின் படம்... சூப்பர்! அதை விட கவர்ச்சி தூக்கலான படங்கள் உள்ளே அணிவகுத்தது சூப்பரோ... சூப்பர்!
- செ.மணிகண்டன், நாகை.

‘வித்தியாச வில்லேஜ்கள்’ வாசித்தபோது மிகவும் பெருமையாக இருந்தது. நாற்றம் நிறைந்த பீடியுடன் போராடாமல், மகத்துவம் நிறைந்த ராட்டையுடன் வாழ்க்கை பின்னப்படுவது மகளிருக்கு மேலும் சிறப்புதான்!
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகளை என்னவென்று சொல்லுவது? அரசு மருத்துவர்களே அவர்களிடம் நோயாளிகளை அனுப்பி வைப்பது பேரதிர்ச்சி.
- இரா.கோவலன், விழுப்புரம்.

கிளாமர் குயின் மல்லிகா ஷெராவத்துக்கு பெரிய புளியங்கொம்பு தொழிலதிபர் யாரும் கிடைக்கவில்லையோ? ‘கல்யாணம் என்பது காலாவதியானது!’ என்று புலம்பவிட்டுட்டீங்களே பாஸ்!
- கரு.பாலகிருஷ்ணன், பெரியகாரை.

னி-கி பகுதி மீண்டும் தொடங்கியுள்ளதைப் பார்த்ததும் ஏதோ பள்ளிக்கால தோழியை மீண்டும் சந்தித்தது போல அப்படியொரு சந்தோஷம்!
- கே.விமலாராணி, தஞ்சாவூர்.

அடேயப்பா... தீபாவளி ஸ்பெஷலுக்காக நிறைய ஜோக்குகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. வரும் வாரங்களிலும் இதேபோல் எங்களை சிரிப்புக் கடலில் மூழ்கடிப்பீர்கள் என நம்புகிறோம்.
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘நேற்றைய ஆபாசம் என்பது, இன்றைய சாதாரணம்... நாளைய இலக்கியம்!’ என்று நறுக்குத்தெறித்தாற் போன்று சொல்லிய ‘ச்சீய்’ பக்கங்கள்... ஆரோக்கியமான, அவசியமான டீன் ஏஜ் டீச்சிங்!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

மலாலா யூசுப் என்ற 14 வயது சிறுமியின் துணிச்சல் குறித்த மனுஷ்யபுத்திரனின் எழுத்தைப் படித்தபோது, ஆணாதிக்கம் கொண்ட பாகிஸ்தானிலும் வீரப் பெண்கள் இருப்பதை உணர முடிந்தது. சிறுமி நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்!
- டி.இந்திரா, வேலூர்.

ஆல்தோட்ட பூபதியின் குட்டிச்சுவர் சிந்தனைகள் சாதாரண தமிழ்நாட்டு பாமரனின் உள்ளக் குமுறலை அழகாக வெளிப்படுத்தும் ஹைக்கூ கவிதைகளாகவே பரிமளிக்கின்றன.
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.

‘ஆடு, மாடு மற்றும் மனிதர்கள்’ தலைப்பே கரம் பிடித்து கிராமத்துக்கு எங்களை அழைத்துப் போய்விட்டது. மண்ணின் மணத்தை மட்டுமல்லாது மண்ணின் மனத்தையும் உணர்ந்து கொண்டோம்!
- எஸ்.சுந்தரி சுகந்தன், பழனி.

கிச்சுகிச்சு மூட்டும் ‘க்ளிக் கமென்ட்ஸ்’ பகுதிக்கு வெல்கம். நாட்டு நடப்பை நக்கலடிக்கிறது நீங்க. மாட்டி விடுறது நடிகர்களையா? நடக்கட்டும் நடக்கட்டும்!
- எச்.பால்பாண்டி, மதுரை.