குட்டிச்சுவர் சிந்தனைகள்






நேற்று மாலை பூங்காவுக்கு வாக்கிங் சென்றிருந்தேன். நடுத்தர வயது மனிதர் ஒருவர் பார்க் பெஞ்சில் தூங்கிக்கொண்டிருந்தார். துன்பத்தாலும் துக்கத்தாலும் பவர்கட்டாலும் பலர் தூங்க வாய்ப்பிழந்து கிடக்கையில், இவர் வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தார். குழந்தைகள், பறவைகளின் விளையாட்டுக் கூச்சல், ஹாரன்கள், பேச்சுக்குரல்கள், சைனா செல்போன் அலறல்கள் என ஆயிரம் சத்தங்களுக்கு இடையிலும் அவர் தூங்கிக் கொண்டிருந்தது என்னிடம் ஒரே ஒரு கேள்வியை ஏற்படுத்தியது. ‘இத்தனை சத்தங்களுக்கும் அசராம இப்படித் தூங்குறாருன்னா, இவரு வீட்டுக்காரம்மா சத்தம் எவ்வளவு பெருசா இருக்கும்?’
இந்தச் சம்பவத்தால் புரிந்த உண்மை... பார்க்கிலும் ரோட்டிலும் தூங்குபவர்கள், வீடில்லாமல் மட்டும் தூங்குவதில்லை; மனைவி இருப்பதாலும் தூங்குகிறார்கள்.



உள்ளூரில் ஹீரோக்கள், வெளியூரில் ஜீரோக்கள் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன இந்திய கிரிக்கெட் அணியும், இந்திய கிரிக்கெட் அணிகளும்   (மிறிலி). எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், பூஸ்ட் விளம்பரத்தில் அடிக்கும் ஷாட்களைக் கூட வெளியூர் போட்டியில் அடிப்பதில்லை நம் வீரர்கள்.


இதற்கு இரண்டே தீர்வுகள்தான் இருக்கிறது. ஒன்று, இனி இந்திய அணி எங்கு சென்றாலும், அவர்களுடன் நம்ம ஊரு மைதானத்தையும் கொண்டு செல்ல வேண்டும். இதில் கொஞ்சம் நடைமுறை சிக்கல் இருக்கிறது. விமானத்தை மைதானத்திற்குள் வைப்பது போல, மைதானத்தை விமானத்திற்குள் வைப்பது எளிதானதல்ல. ஆக இரண்டாவது யோசனை, இந்திய அணி கிரிக்கெட் விளையாடச் செல்லும் நாடுகளை எல்லாம் இந்தியா போரில் வென்று, அதுவும் இந்தியாவின் ஒரு பகுதி என அறிவிக்க வேண்டும். பிறகு இந்திய அணியினர், உள்ளூரில் விளையாடுவது போல எண்ணிக்கொண்டு உத்வேகமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டின் நூறு கோடி ரசிகர்களுக்காக அரசு இந்த சின்ன செலவு கூட செய்யாதா என்ன?