ஃபேஸ்புக் ட்விட்டர்... அரட்டை தளமா ஆபாசக் களமா





‘‘சின்மயி விவகாரம் சீரியஸாயிடுச்சு. இனிமே அடக்கி வாசிக்கணும் மச்சி!’’ என பம்மிக் கிடக்கின்றன இணைய வட்டாரங்கள். விஷயம் இதுதான்... பாடகி சின்மயி, ட்விட்டர் இணையதளத்தில் தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக சென்னை போலீஸாரிடம் 5 பேர் மீது புகார் அளிக்க, அதில் இருவரைக் கைது செய்திருக்கிறது சைபர் க்ரைம் போலீஸ்.
‘இந்த விஷயத்தில் சின்மயி மீதும் தவறு இருக்கிறது’ என்று கைதானவர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்களும் உண்டு. ஆனால் வரம்புமீறிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, சமூக வலைத்தளங்களுக்கு இப்படியொரு ஷாக் டிரீட்மென்ட் தேவைதான் என்கிறது பெரும்பான்மை.
‘‘அப்படியா?’’ என்ற கேள்வியோடு பிரபல ட்வீட்டர்கள், மற்றும் ஃபேஸ்புக்கர்கள் சிலரை சந்தித்தோம்...

ஈரோடு கதிர்:
‘‘யார் மேல குற்றம் சொல்றதுன்னு தெரியலைங்க. தெருப்பெயர்கள்லயே ஜாதி இருக்கக் கூடாதுன்னு எடுத்துட்டோம். ஆனா, இந்த மாதிரி தளங்கள்ல தன் பேரோட ஜாதிப் பேரை பெருமையா போட்டுக்கிட்டு வலம் வர்றவங்க நிறைய பேர். ஒடுக்கப்பட்ட சமூகத்துல இருந்து வர்றவங்களை இது உறுத்துறது இயல்புதானே. அதுலதான் மோதல் வெடிக்குது. தினம் தினம் நூத்துக்கணக்கான
சர்ச்சைகள், விவாதங்கள் ட்விட்டர்லயும் ஃபேஸ்புக்லயும் நடக்குது.  அலசிப் பார்த்தீங்கன்னா, அஸ்திவாரமா ஜாதிப் பிரச்னை இருக்கும்.
இதுல சில சமயம் பெண்கள் வந்து மாட்டிக்கும்போது, நிலைமை பரிதாபமா போயிடுது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பொண்ணு... பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒருத்தரை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. அவங்க ஹஸ்பெண்ட் பேரே ஒரு ஜாதிப் பெயர்தான். அதைப் பின்னாடி போட்டுக்கிட்டு ட்விட்டருக்கு வந்ததால அவங்க பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சமில்ல. ஏற்கனவே ஜாதிக் கலவரத்துல கொதிச்சுக்கிட்டிருக்கிற இடத்துல நீங்க என்ன சொன்னாலும் தப்பாயிடுமில்ல... அப்படித்தான் அவளையும் துவச்சு எடுத்துட்டாங்க. அதுல நேர்மையான, கூர்மையான தாக்குதலும் இருந்துச்சு. பப்ளிக்ல சொல்ல முடியாதபடி பாலியல் தாக்குதலும் இருந்துச்சு. கடைசியில அவங்க தன்னோட ட்விட்டர் அக்கவுன்ட்டையே குளோஸ் பண்ணிட்டுப் போயிட்டாங்க!’’

விக்னேஷ்வரி:
‘‘நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க... பொதுவாவே பப்ளிக்ல பேசுறோம்ங்கிற உணர்வு எல்லாருக்கும் வேணும். வெவ்வேற துறையில இருக்குறவங்களுக்கு எழுத்தாற்றல் இருக்கலாம். அவங்கல்லாம் படைப்புகளை உலகத்துக்கே தெரியிற மாதிரி போஸ்ட் பண்ண ப்ளாக்கும், ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பெரிய வாய்ப்பு. ஒரு காலத்துல ‘கத்துக் குட்டிங்க... என்னவோ எழுதறாங்கப்பா’ன்னு நினைச்ச எழுத்து உலகம், இன்னிக்கு எங்களையெல்லாம் கவனிக்க ஆரம்பிச்சிருக்கு. எல்லா பத்திரிகையிலயும் ஃபேஸ்புக், ட்விட்டர் கமென்ட்டுகளுக்கு பக்கம் ஒதுக்கறாங்க. அப்படி இருக்குறப்போ முகம் சுளிக்குற மாதிரி இதை நாறடிக்கறதுல யாருக்கு நஷ்டம்?  

ஒரு பொண்ணு சிக்கிட்டா அவளை என்ன வேணும்னாலும் பேசலாம்ங்கிற ஆணாதிக்க மனநிலை இங்க அப்படியேதான் இருக்கு. அதுவும் நடிகைகள் படத்தைப் போட்டு சில ஆண்கள் அடிக்கிற கமென்ட் இருக்கே... படு மோசம். உலகமே பாக்குற தளம்ங்க இது. இதென்ன பப்ளிக் டாய்லெட் சுவரா? இப்படி கமென்ட் அடிக்கிற இடத்துல நமக்கு என்ன வேலைன்னு நிறைய ஏரியாக்கள்ல நானே ஒதுங்கி
வந்திருக்கேன்.’’

தேனம்மை லெக்ஷ்மணன்:
‘‘பயமா இருக்குங்க... உங்களுக்கு நான் ஏதாவது சொல்லப் போயி... நீ எப்படி இப்படியெல்லாம் பேசலாம்னு நாளைக்கு என்னையும் டார்கெட் பண்ணி வார்த்தையால தாக்குவாங்களோன்னு நடுக்கமா இருக்கு.
நாம என்ன சொன்னாலும் அதுல ஜாதியைக் கொண்டு வந்து குற்றமா பாக்குறவங்க இங்க நிறைய உண்டு. உங்க பேரை வச்சே நீங்க என்ன ஜாதின்னு ஊகிச்சு தாக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஏதாவது சொன்னா, ‘இப்படி கருத்து சொல்றவங்க இந்த ஜாதியாத்தான் இருக்கும்’னு முடிவு பண்ணிடுவாங்க.

எனக்கு 45 வயசாகுது. என்னை ‘அம்மா... அக்கா...’ன்னு கூப்பிடுற எவ்வளவோ நல்லவங்களை நான் ப்ளாக் மூலமாவும் ஃபேஸ்புக் மூலமாவும் சம்பாதிச்சிருக்கேன். ஆனா, சமையலைப் பத்தி நான் போஸ்ட் போடுறதைப் பார்த்துட்டு நான் ஜாதியைத் தூக்கிப் பிடிக்கறேன்னு என்கிட்ட கோவிச்சுக்கிட்ட தோழிகள் கூட உண்டு. எல்லாத்தையுமே தப்பா பார்த்தா என்னங்க பண்றது?’’

சேதுராமன்:
‘‘ஒரு அவுட்சைடரா சொல்றேன்... சின்மயி விஷயத்துலயே ஒரு பக்கம்தான் தப்புன்னு முடிவெடுத்துட முடியாது. விசாரணைன்னு வந்தா ரெண்டு தரப்பு மேலயும் தப்பு வரும். அவங்களை மாதிரி ஒரு லட்சத்துக்கு மேல ஃபாலோயர்ஸ் இருக்குற வி.ஐ.பிக்கள் ஒரு கமென்ட் போட்டா யோசிச்சுப் போடணும். ஒரு பத்திரிகையில லூஸ் டாக் விட்டா, வாசலுக்கு வந்து கல்லெறியறதில்லையா? ஒரு லட்சம் பேர் படிக்கிற ட்வீட்டும் பத்திரிகை மாதிரிதான். அதனால பொறுப்பா பேசணும். தெனாவட்டா கருத்து போட்டா, அதை அநாகரிகமா எதிர்கொள்றவங்களை சந்திக்கத்தான் வேணும். இப்படி வல்கர் வார்த்தைகளைப் பயன்படுத்துறவங்க ஆண்கள் மட்டும்தான்னு நினைக்கிறீங்களா? பெண்களும் இருக்காங்க. இந்த மாதிரி புகாரால அவங்களை எல்லாம் கட்டுப்படுத்திடலாம். ஆனா, இவங்க திட்டுறதுக்கு காரணமான ஜாதி வெறியை யார் கட்டுப்படுத்துறது?’’
- நவநீதன்