சங்கிலி... சாவிக்கொத்து!





எந்த விசேஷத்துக்கும், எந்த வயதினருக்கும் அன்பளிப்பு கொடுக்க ஏற்றது சாவிக்கொத்து. பத்து ரூபாயில் சிம்பிளாகவும் வாங்கித் தரலாம்; பத்தாயிரம் ரூபாய்க்கு வெள்ளியிலும் அன்பளிக்கலாம்.

அதைக் காசு கொடுத்து வாங்கித் தருவதைவிட, நாமே நம் கைப்பட டிசைன் செய்து கொடுத்தால், அதில் கூடுதல் சந்தோஷம்தானே! ‘சாவிக்கொத்தை எல்லாம்கூட நாமே தயாரிக்க முடியுமா என்ன?’ என்பதுதானே உங்கள் கேள்வி! ‘‘விதம்விதமான சாவிக்கொத்துகள் மட்டுமில்லை, பெண்கள் இடுப்பில் அழகுக்காக தொங்கவிட்டுக் கொள்கிற ஹிப் செயின் மாடல் சாவிக்கொத்துக் களையும் கூட உங்கள் கைப்பட செய்யலாம்; விற்பனையும் செய்யலாம்’’ என்கிறார் சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த தமிழரசி.

‘‘குழந்தைங்களுக்குப் பிடிச்ச மாதிரி கார்ட்டூனோ, பொம்மையோ வச்சு பண்றது, பெரியவங்களுக்கு சாமி படம் வச்சு பண்றது, ஃபேஷனா விரும்பறவங்களுக்கு உட்டன் கட் அவுட்ல மணிகளும், முத்துக்களும் வச்சுப் பண்றதுன்னு இதுல கற்பனைக்கு அளவே இல்லை. சேலை கட்டும்போது இடுப்புல மாட்டிக்கிற கிளிப் மாடல் சாவிக்கொத்து, வட இந்தியாவுல ரொம்பப் பிரபலம். முன்னல்லாம் வெள்ளியில சலங்கை வச்சு காஸ்ட்லியா வந்திட்டிருந்தது. அதை இப்ப கிரிஸ்டலும் முத்தும் வச்சு, ஃபேன்சியா பண்ணலாம். நகை மாதிரியே தெரியறதால, பெண்கள் அதிகம் விரும்பறாங்க.
அத்தனை மாடல்களுக்கும் தேவையான மரத்தால் ஆன மணிகள், பிளாஸ்டிக் மணிகள், கிரிஸ்டல், மர கட் அவுட், ஃபேப்ரிக் கலர், அக்ரிலிக் கலர், சாவிக் கொத்து வளையம், பசை, எம் சீல், சலங்கை, ஜுமர்னு சொல்ற கிளிப் (இடுப்புச் சங்கிலிக்கான கிளிப்), ஏ,பி,சி,டி - ஆங்கில பிளாஸ்டிக் எழுத்துகள்... எல்லாமே ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும்.

சாதாரண சாவிக் கொத்துக் களை கடைகள்ல சப்ளை பண்ணலாம். கார்ப்பரேட் கம்பெனிகள்கிட்ட ஆர்டர் வாங்கி, அவங்க கம்பெனி லோகோ பதிச்சு, உட்டன் கட் அவுட்ல பண்ணிக் கொடுக்கலாம். பிறந்தநாள், கல்யாண ரிசப்ஷன் மாதிரி இடங்களுக்கு வர்றவங்களுக்கு, ஆன் தி ஸ்பாட்ல அவங்களோட பெயரை அப்படியே வரிசையா கோர்த்து சாவிக் கொத்து பண்ணிக் கொடுக்கிறதும் இப்ப ஃபேஷனாயிட்டு வருது. 500 ரூபாய் செலவழிச்சா, ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கலாம். இடுப்பு கிளிப் மாடல்களுக்கு பியூட்டி பார்லர், பொட்டிக், புடவைக் கடைகள்ல ஆர்டர் எடுக்கலாம். புடவையோட கலருக்கும், டிசைனுக்கும் மேட்ச் ஆகிற மாதிரி பண்ணிக் கொடுக்கலாம்.’’
என்ன... உங்கள் வெற்றிக்கான மந்திரச்சாவியைக் கையில் எடுக்கத் தயாரா?

முதலீடு            : ரூ.2 ஆயிரம்
லாபம்            : 100 சதவீதம்
பயிற்சிக்கு        : 1,000 ரூபாய் (2 நாள்களில் 2 மாடல்களுக்கு)
எங்கெல்லாம் விற்கலாம்? - ஃபேன்சி ஸ்டோர்கள், கண்காட்சிகள், கல்லூரி வாசல்கள், பொட்டிக்...
தொடர்புக்கு        : 99520 80420

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்