பெண் அரசியல்
‘‘என்னங்க... நம்ம எதிர் ஃபிளாட் கனகா ரொம்ப தைரியசாலி தெரியுமா? அவ வீட்டுல இருந்தா, நீங்க வெளியூர் டூர் போகும்போது கூட எனக்கு பயமில்ல. எல்லாருக்கும் உதவுற மனசு அவளுக்கு. வீட்டைக் கூட ரொம்ப சுத்தமா வெச்சிருக்கா. அவ குழந்தைகளை டியூஷன் கூட அனுப்பாம அவளே வீட்டுல பாடம் நடத்தறா தெரியுமா?’’ - கனகாவை வானளாவப் புகழ்ந்து தள்ளிய ரமாவை கேசவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.
‘ரெண்டு பேரும் போன வாரம்தானே பயங்கரமா சண்டை போட்டாங்க! ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட கனகாவுக்கு ஏகப்பட்ட சாபம் கொடுத்தாளே? என்ன ஆச்சு இவளுக்கு?’ சந்தேகத்தைக் கேட்டே விட்டான். சற்று அருகில் வந்து, ரகசியக் குரலில் பேசினாள் ரமா. ‘‘போன வாரம் அவளோட சண்டை போட்டது நமக்குத்தாங்க நஷ்டம். அக்கம்பக்கத்துல உள்ள பாதுகாப்பு முக்கியம் இல்லையா? நான் இப்ப அவளைப் பாராட்டி பேசினதை கண்டிப்பா நம்ம வேலைக்காரி அவகிட்ட போய்ச் சொல்லுவா. அவளுக்கும் என் மேல உள்ள கோவம் குறையும். அதான் இப்படி..!’’
‘‘அப்போ, போன வாரம் சண்டை போட்டதுக்கு யார் காரணம் ரமா?’’ ‘‘இதே வேலைக்காரிதான்!’’ பெண்களின் அரசியல் புரியாமல் கேசவனுக்கு தலை சுற்றியது.
|