சென்டிமென்ட்
‘‘புதுசா வந்த மருமககிட்ட ரொம்பவே பாசத்தை பொழியாதே லட்சுமி... அப்பப்ப மாமியார்ங்கிற திமிரையும் காட்டி பயமுறுத்தி வைக்கணும். இல்லேன்னா, உன் மகனுக்கு தலையணை மந்திரம் ஓதி, குடும்பத்தைப் பிரிச்சுருவா!’’ - எச்சரித்தாள் எதிர்வீட்டு பொன்னம்மாள் கிழவி.
‘‘சரி பாட்டி...’’ என்றபடி புன்னகைத்தாள் லக்ஷ்மி. ‘‘சிரிக்காதே லட்சுமி... அனுபவத்துல சொல்றேன்... அப்புறம் உன்பாடு... அவ பாடு!’’ - அங்கலாய்த்தவாறே கிளம்பி விட்டாள். மருமகள் அர்ச்சனாவிடம், பொன்னம்மாள் கிழவி கூறியதை லக்ஷ்மி தெரிவித்தபோது வெடித்தாள் அர்ச்சனா.
‘‘எல்லா தெருவுலயும் இப்படி சில பேரு இருப்பாங்க போல... குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்றதுக்காகவே வந்துட்டாளா கிழவி? நாம நல்லா வாழறது கண்ணை உறுத்துது போல! எங்க குடும்ப விஷயத்துல தலையிடாதேன்னு திட்டியிருக்கலாமில்ல அத்தை?’’
‘‘இதுல ஒரு சென்டிமென்ட் இருக்கு அர்ச்சனா... நான் புதுசா இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்ப, என் மாமியார்கிட்டயும் இப்படித்தான் பத்த வச்சுது இந்தப் பாட்டி. ஆனா, இதுவரைக்கும் நான் அவங்களைப் பிரியாம குடும்பத்தை கவனிச்சுட்டிருக்கேன். அதுபோல, இப்ப உன்னைப் பேசுது. நீயும் என்னை விட்டு பிரியாம குடும்பத்தை காப்பாத்துவேங்கறது நிச்சயம். அதனாலதான் அது சொன்னதை பெருசா எடுத்துக்கலை!’’
|