தீபாவளி கொடுமைகள்!





இந்த மனைவி, சொந்தபந்தங்கள் போன்ற தீய சக்திகள் எல்லாம் தீபாவளிக்கு தீபாவளி நம்மைப் பிடித்து ஆட்டுவது வழக்கம். அதிலிருந்தெல்லாம் எஸ்ஸாகி இனிய தீபாவளியைக் கொண்டாட எளிய வழிகள்...

மனைவி புடவை எடுக்கக் கூப்பிடும்போது ‘‘எனக்கு அதைப் பத்தி என்ன தெரியும்? வேணும்னா என் அம்மாவை கூட்டிட்டுப் போயேன்’’என்று சொல்லிப் பாருங்கள்... மேஜிக் போட்டது போல் புடவை எடுக்கும் திட்டமே கேன்சல் ஆகிவிடும்.

பலகாரம் செய்கிறேன் பேர்வழி என்று நம்மை பரிசோதனை எலியாக்கும் சித்ரவதை, சொல்லி மாளாதது. ‘‘மைசூர்பாகு ஸ்மூத்தா வந்திருக்கா பாருங்க... அதிரசம் டேஸ்ட்டா இருக்கா பாருங்க... முறுக்கு மொறுமொறுனு இருக்கா பாருங்க...’’ என்று இல்லாததை எல்லாம் சொல்லச் சொல்லி நம்மை இம்சை பண்ணுவார்கள். ‘‘ம்... ஆனாலும் மூணாவது வீட்டு சுதா பண்ணின ஸ்வீட் மாதிரி இல்லையே!’’ என்று சொல்லுங்கள். அப்புறம் பலகாரம் என்ன... சாப்பாடு கூட கிடைக்காது.

தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம் போட வேண்டும். தங்கம் தறிகெட்டு விற்கும் நேரத்தில், இதிலிருந்து தப்பிக்க ஒரு (வ)தந்திரம் உள்ளது. எஸ்... பச்சைப் புடவை வதந்தி, பச்சைக் குழந்தை பேசிய வதந்தி வரிசையில்... ‘‘மாப்பிள்ளைக்கு தங்கம் போட்டா சம்பந்தியம்மா மண்டையப் போட வாய்ப்பிருக்காம்’’ என்று கிளப்பி விடுங்கள். மாப்பிள்ளையே மோதிரத்துக்காக அடம் பிடித்தாலும், அம்மா தலையில் குட்டி வைப்பார்.

‘‘தங்கம் விலை பவுனுக்கு அம்ம்ம்ம்பது பைசா குறைஞ்சிருக்காம்’’ என்று ஆச்சர்ய தகவல் தந்து, மறைமுகமாக நம் போனஸை டார்கெட் பண்ணும் மனைவிக்கு ஃபுல்ஸ்டாப் வைக்க வேண்டுமா? ‘‘இந்த தீபாவளிக்கு புது நகை எடுத்தா, இன்னும் ஏழு வருஷத்துக்கு நகை எடுக்கற பாக்கியம் வராதாம்... திருவண்ணாமலை பக்கம் ஒரு தீவட்டி சித்தர் சொன்னார்’’ என்று திரியைக் கொளுத்துங்கள். ஒரு தீபாவளிக்காக ஏழு வருட நகை பாக்கியத்தை யாராவது இழப்பார்களா? ஏழைக் காட்டி ஏழரையில் இருந்து தப்பலாம்!

முன்னணி சேனல்களில் முன்னணி நடிகைகள் தமிழையும், நம்மையும் கொன்று கொத்து பரோட்டா போடுவதுதான் தீபாவளியின் உச்ச கொடுமை. நரகாசுரனே நடுநடுங்கிப் போகும் இந்த பேராபத்தில் இருந்து தப்பிக்க, யாருக்கும் தெரியாமல் ரெண்டு மணி நேரம் ஃப்யூஸ் கேரியரை பிடுங்கி ஒளித்து வைத்துவிடுங்கள். மீதி நேரம், நமது மின்சார வாரியமே ‘தன் கடமையை’ச் செய்து நம்மைக் காப்பாற்றும்!

நண்பர்களோடு ஜாலியாக ‘சரக்கு’ போடாவிட்டால் என்ன தீபாவளி? இதை உணராத அஞ்ஞானியான மனைவி, கோயிலுக்குக் கூப்பிடுவாள். அங்கு பிரசாதம் கிடைக்குமே என்று சபலப்பட்டு கடமை தவற வேண்டாம். நமக்கு ‘தீத்தம்’தான் முக்கியம்! ‘‘பக்கத்துத் தெருவுக்கு நம்ம ஃபிராடானந்தா வந்திருக்காராம்... அவர் தர்ற தாயத்து ரொம்ப சக்தியாம். அதை வீட்ல கட்டிட்டா, மாமியாருக்கு வாய் பேசவே வராதாம்... மருமக பெட்டிப் பாம்பா அடங்கிடுவாளாம்’’ என்று அவிழ்த்து விடுங்கள். அப்புறம் கோயிலாவது... பூஜையாவது!

சரக்கு அடித்துவிட்டு, மனைவியிடம் தப்பிக்க வேண்டுமே... ‘‘நான் வேணாம்னுதான் சொன்னேன். அந்த கணேஷ் கடன்காரன்தான் ஊத்தி விட்டுட்டான். உன் தம்பி வேலை விஷயமா அவன்கிட்டதானே சொல்லி இருக்கேன்... அவன் கோச்சுக்கிட்டா என்ன பண்றது?’’ என்று சென்டிமென்ட் பிழியுங்கள்.
உங்கள் ஹேங் ஓவருக்காக லெமன் பிழியப்படும்!

‘அதிரச  மாவரைக்க வேண்டும்...’, ‘முறுக்கு பிழிய வேண்டும்...’, ‘ஜாங்கிரி பிழிய வேண்டும்’ என்று வீட்டில் பிழிந்தெடுப்பார்கள். இதிலிருந்து தப்பிக்க எளிய வழி... ‘‘ஊர்ல உன் அப்பா, அம்மா இருக்க, நாம தனியா தீபாவளி கொண்டாடினா நல்லாவா இருக்கு? வரச் சொல்லு...’’ என வலிய வரவழையுங்கள். எந்த மாமனார், மாமியாராவது மருமகன் வேலை
செய்வதைப் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?

தீபாவளியின் உச்ச டென்ஷன், பட்ஜெட். துணி, நகை, பலகாரம் என்று எல்லாம் முடிந்து பார்க்கும்போது நம் பர்ஸுக்கு டைஃபாய்டு வந்திருக்கும். கடன்காரன் எண்ணிக்கையும் கூடியிருக்கும். நாட்டில் எவ்வளவோ ஊரில் பொங்கல் கொண்டாடுவது இல்லையாம். அது போல, தீபாவளி கொண்டாடாத ஊர் ஏதாவது இருந்தால், தேடிப் பிடித்துக் குடியேறினால் இதிலிருந்தும் எளிதில் தப்பலாம்.

வருடம் பூராவும் உங்களைப் படுத்தி எடுக்கும் மனைவியை தீபாவளி அன்று பழி தீர்க்க அருமையான வாய்ப்பு. ‘‘பொங்கலுக்கு சாப்பிட பொங்கல் பண்ணினியே. தீபாவளிக்கு சாப்பிட எனக்கு தீபாவளி பண்ணிக்கொடு’’ என மொக்கை தத்துவத்தைச் சொல்லி சீரியஸாய் அடம்பிடியுங்கள். ‘‘அய்யோ... கடைசியில உண்மையாவே என்னவோ ஆயிடுச்சு போலிருக்கே!’’ என்ற கவலையில் உங்களிடம் ஒன்றுமே கேட்க மாட்டார்கள். லூஸென்று பெயர் வாங்கினாலும் பீஸ்ஃபுல்லாகக் கழியும் தீபாவளி!    
 - கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.