தமிழக அரசியல் வரை தாக்கங்களை ஏற்படுத்திய ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் அநேகமாக மூடுவிழா காணலாம் என்பதே இந்த வார பரபரப்புச் செய்தி.
உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், அமெரிக்காவுக்கு அனுப்பும் ரகசிய தகவல்களை வெளியிட்டு உலகைக் குலுங்க வைத்தது விக்கிலீக்ஸ். உலகத் தலைவர்களைப் பற்றி அமெரிக்கத் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் காட்டும் கண்ணாடியாக இருந்தன இந்த அம்பலங்கள். குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர் பற்றிய பல ரகசியங்களும் வெளிவந்தன.
இதெல்லாம் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க, விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாங்கேவை பணியவைக்கும் முயற்சிகள் நடந்தன. தலைமறைவாக இருந்த அவர்மீது ஸ்வீடனில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவானது. இப்போது ஜாமீன் பெற்று லண்டனில் இருக்கிறார் அவர்.
பலரும் அளிக்கும் நன்கொடைகளை வைத்தே விக்கிலீக்ஸ் இணையதளம் செயல்படுகிறது. கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் விசா, மாஸ்டர்கார்டு, பே பால், வெஸ்டர்ன் யூனியன் போன்றவை விக்கிலீக்ஸுக்கு வரும் நன்கொடைகளை ஏற்க மறுக்க, வருமானத்தில் 95 சதவீதம் கட் ஆகிவிட்டது. அமெரிக்கா தொடர்பான ரகசியங்களை வெளியிடுவதை ஏற்கனவே நிறுத்திவிட்ட விக்கிலீக்ஸ், இன்னும் சில வாரங்களில் செயலிழக்கக்கூடும்!