தலைக்கு வைத்துக்கொள்கிற கிளிப் முதல், காலுக்கு அணிகிற செருப்பு வரை சகலமும் உடைக்கு மேட்ச்சாக இருக்க வேண்டும் சிலருக்கு. மற்ற எல்லாம் மேட்ச்சிங்காக கிடைக்கும். பூ? அவசியம் அதே கலரில்தான் வேண்டுமென்றால் செயற்கை பூக்களை சூடிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் உமாஸ்ரீயிடம் அதற்கும் மாற்றுவழி இருக்கிறது. ஒரிஜினல் பூக்களில் விதம்விதமாக கலர் ஸ்பிரே செய்து, அலங்கரித்துத் தருகிறார் இவர். மணப்பெண் அலங்காரங்களில் இதுதான் இன்று லேட்டஸ்ட்!
‘‘12 வருஷங்களா பியூட்டிஷியனா இருக்கேன். கல்யாண அலங்காரத்துக்கு வரும்போதெல்லாம், மணப்பெண்களுக்கு தலைல வைக்க மல்லி, முல்லையைத் தேடி ஓடணும். சிலவேளை நல்ல பூக்கள் கிடைக்கும். பல நேரம் நாம எதிர்பார்க்கிற மாதிரி கிடைக்காது. அப்பதான் ஈரோடுல பூக்களுக்கு கலர் ஸ்பிரே பண்றது பத்தித் தெரிய வந்து, போய் கத்துக்கிட்டேன். கல்யாணப் பெண்கள் புடவையைக் கொண்டு வந்து, மேட்ச்சிங்கா பூக்கள் ஆர்டர் பண்றது இப்ப பிரபலமா இருக்கு’’ என்கிற உமாஸ்ரீ, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘விருப்பமான கலர்கள்ல பூக்களுக்கான பிரத்யேக கலர் ஸ்பிரே, மல்லிகை, ரோஜா, ஜெர்பரா, ஆர்க்கிட், முல்லை, சம்பங்கி, வெற்றிலைன்னு பூக்களும், இலைகளும், ஊசி, நார் எல்லாத்துக்கும் ஆயிரம் ரூபாய் முதலீடு போதும்.’’
என்ன ஸ்பெஷல்?‘‘மல்லி, ரோஜா, சம்பங்கின்னு நிஜ பூக்கள் எல்லாத்துலயும் புடவைக்கு மேட்ச்சா ஸ்பிரே பண்ணலாம். பொதுவா சிகப்பு, வெள்ளை, மஞ்சள்னு குறிப்பிட்ட சில கலர்கள்லதான் நமக்கு எல்லா பூக்களும் கிடைக்குது. பச்சை, வயலட், கோல்டன், சில்வர் கலர்கள்ல வேணும்னா இப்படி ஸ்பிரே பண்ணிக்கலாம். உதாரணத்துக்கு மயில் கழுத்து கலர்ல உடல், கருநீலத்துல ஜரிகை வச்ச பார்டர் போட்ட புடவைன்னு வச்சுப்போம்... அதே காம்பினேஷன்ல நிஜ பூக்களை மாத்தலாம். இப்படிச் செய்யற பூக்கள் ஒரு வாரம் வரைக்கும் வாடாம, அப்படியே இருக்கும். குறிப்பா போட்டோல பார்க்க பிரமாதமா இருக்கும்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘வெறுமனே கலர் ஸ்பிரே பண்றது மட்டுமில்லாம, விதம்விதமான மாடல்ல பூக்களை கட்டவும் தெரிஞ்சிருக்கணும். கற்பனைக்கேத்தபடி கட்டி, கலர் செய்யலாம். கல்யாணப் பெண்ணுக்கு இந்த பூ அலங்காரத்துக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வாங்கலாம். 50 சதவீதத்துக்கும் அதிக லாபம் நிச்சயம். பியூட்டிஷியனா இருக்கிறவங்க, இதைக் கூடுதல் தகுதியா கத்துக்கலாம். மத்தவங்க இதை மட்டுமே ஒரு பிசினஸா எடுத்தும் செய்யலாம்.’’
பயிற்சி?‘‘ஒரே நாள் பயிற்சிக்கு 750 ரூபாய் கட்டணம்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்