பூனம்சந்துக்கும் பாம்புகளுக்கும் பூர்வஜென்ம பந்தம். சீறிச் சிலிர்க்கும் விஷப்பாம்புகள்கூட அவரிடம் ‘பெட்டிப்பாம்பாக’ அடங்கி விடுகின்றன. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் யார் கண்ணில் பாம்பு பட்டாலும் அடுத்த நொடி பூனம்சந்துக்குத்தான் போன் போடுகிறார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் அந்த பாம்பு பூனம்சந்த் கையில்!
‘‘இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிக பாம்புகளைப் பிடிச்சு காட்டுல விட்டுருக்கேன். நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், தண்ணிப்பாம்பு, கடல் பாம்புன்னு எல்லாத்தையும் புடிச்சிருக்கேன். சில அடாவடிப் பாம்புகள் கடிச்சும் வைக்கும். நம்ம உடம்புக்கு இதுவரைக்கும் எந்த விஷமும் ஏறுனதில்லே’’ என்று சாதாரணமாகச் சொல்லிச் சிரிக்கிறார் பூனம்சந்த்.
பூனம்சந்துக்கு பூர்வீகம் ராஜஸ்தான். டெக்ஸ்டைல்ஸ் பிசினஸுக்காக கடலூர் வந்த குடும்பம், இப்போது தமிழ் கலாசாரத்தில் ஊறிவிட்டது. ‘‘எங்க அப்பா ஆன்மிகப் பற்றாளர். ‘எந்த உயிருக்கும் துன்பம் தரக்கூடாது’ன்னு சொல்வார். வீட்டுத் தோட்டத்துக்கு வர்ற பூரான், தேள், பாம்புகளை ஒரு கவட்டை கம்பை வச்சு லாவகமா பிடிச்சு புதர்பக்கம் கொண்டுபோய் விடுவார். ஒருநாள் அப்பா இல்லாத நேரத்தில, சமையலறைக்குள்ள நல்ல பாம்பு ஒண்ணு புகுந்திருச்சு. அம்மா பயந்து அலறிக்கிட்டு வெளியில வந்திட்டாங்க. அப்பா பயன்படுத்துற கவட்டை கம்பை வச்சு நானே அந்த பாம்பைப் பிடிச்சு புதர்ல கொண்டுபோய் விட்டேன். அப்போ எனக்கு வயசு 9. அதுக்குப்பிறகு எங்க தெருவில எந்த வீட்டுக்குள்ள பாம்பு வந்தாலும் என்னைத்தான் கூப்பிடுவாங்க’’ என்கிறார் பூனம்சந்த்.
பூனம்சந்தின் சகோதரர்கள் அனைவருக்கும் டெக்ஸ்டைல் பிசினஸ். இவருக்கு அதில் ஆர்வமில்லை. ஆடு, மாடு வளர்க்கிறார். நாய்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். இதுதவிர, ஒருநாளைக்கு ஏழெட்டு அழைப்பாவது வந்துவிடுகிறது பாம்பு பிடிக்க! எந்த ஊருக்குப் போனாலும் ஒற்றைப் பைசா வாங்குவதில்லை.
‘‘பாம்பு பிடிக்கிறது எனக்குத் தொழில் இல்லை. ஒரு தவம் மாதிரி. தனக்கு ஆபத்து ஏற்படாத வரைக்கும் ஒரு பாம்பு யாரையும் தீண்டுறதில்லை. மனித உயிர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு பாம்போட உயிரும் முக்கியம். இரண்டு தரப்புக்கும் செய்ற சேவை இது. பாம்பைப் பிடிக்கப் போறபோது, அந்த இடத்துலயே பாம்புகளைப் பத்தி ஒரு வகுப்பு எடுத்துட்டுத்தான் திரும்புவேன்’’ என்கிறார்.
பாம்புகளின் உளவியலை அனுபவப்பூர்வமாகப் பேசுகிறார் பூனம்சந்த்...
‘‘பாம்புகள்ல 2 ரகம். நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், துள்ளு விரியன்... இதெல்லாம் விஷப்பாம்புகள். நல்ல பாம்பைப் பொறுத்தவரை தனக்கு ஆபத்து வந்தாலும் உடனே கொத்தாது. நாலஞ்சு தடவை எச்சரிக்கும். ‘கிட்ட வந்தா கொத்திருவேன்’னு தரையைக் கொத்திக் காமிக்கும். புஸ் புஸ்னு சத்தம் போட்டு விரட்டும். அதையும் மீறி கிட்டே போனா கொத்தும். முட்டையிடும் நேரத்தில் எவ்வளவு ஆபத்துகள் வந்தாலும் அந்த இடத்தை விட்டு நகராது. ஆவேசமா தாக்கும். 60 நாட்களுக்கும் மேல அடை காத்தாலும், குட்டி வெளியே வர்றதை உணர்ந்ததும் அந்த இடத்தைவிட்டுப் போயிடும்.
கண்ணாடி விரியன் வெப்பத்தன்மையை வச்சு எதிரியைக் கண்டுபிடிக்கும். கொத்தின உடனே விஷம் கண்ணை மறைச்சிரும். கட்டுவிரியன் ரொம்ப சாதுவானது. முதல்ல தப்பிக்கத்தான் பாக்கும். முடியாத பட்சத்தில கொத்தும். நல்ல பாம்பைப் போல 9 மடங்கு விஷம். தப்பிக்கிறது கஷ்டம்.
நழுவை, பச்சைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், சாரை, நாய்முகப்பாம்பு... இதெல்லாம் விஷமில்லாத பாம்புகள். இதில சாரைக்கு 100க்கும் மேற்பட்ட பற்கள். கொத்தினா கொக்கி மாதிரி கையில மாட்டிக்கும். விஷமில்லை. இருந்தாலும், நாம அவசரப்பட்டு கையை இழுத்தா பற்கள் உடைஞ்சு கையோட வந்திரும். ஆபரேஷன் பண்ணித்தான் பற்களை எடுக்கணும்...’’ என்கிறார் பூனம்சந்த்.
இதுவரை 12 முறை பாம்புக்கடி வாங்கியுள்ளார் பூனம்சந்த். ஒருமுறை கூட விஷம் ஏறவில்லை என்பதுதான் வியப்பு!
‘‘கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, நாய்முகப்பாம்பு, துள்ளுவிரியன்னு 12 பாம்புகள்கிட்ட கடி வாங்கியிருக்கேன். கொஞ்சம் மிளகை அரைச்சு வாய்க்குள்ள போட்டுக்கிட்டு நிறைய தண்ணி குடிப்பேன். 2 சிறியாநங்கை இலையை கடிச்சுத் திம்பேன். சந்தேகம் இருந்தா, ஆஸ்பத்திரி போய் பிளட் டெஸ்ட் எடுத்துக்குவேன். அவ்வளவுதான்...’’ என்கிறார் கூலாக.
பாம்புகளைப் பிடிக்கும்போது முட்டைகளையும் சேகரித்து வந்து வீட்டிலேயே பொறிக்க வைத்து, அந்தக் குட்டிகளையும் காட்டில் விடுகிறார் பூனம்சந்த். வனத்துறையினரும் காவல் துறையினரும் இவருக்கு பலவகைகளில் உதவி செய்கின்றனர்.
‘‘பாம்பு வீட்டுக்குள்ள வந்துட்டா பயப்படக்கூடாது. கதவு, ஜன்னல்களை திறந்து வச்சுட்டு பாதுகாப்பான தூரத்தில நின்னு தரையை கம்பால தட்டினா அதுபாட்டுக்கு ஓடிடும். கடிச்சிட்டா பதற்றம் தேவையில்லை. பத்து மிளகை அரைச்சு முழுங்கிட்டு உடனடியா ஆஸ்பத்திரிக்குப் போயிடணும்’’ என்கிற பூனம்சந்த்துக்கு ஒரு ஆசை உண்டு.
‘‘அரசு அனுமதியோடு பாம்புப்பண்ணை தொடங்க வேண்டும். மக்களுக்கு பாம்பு பற்றிய விழிப்புணர்வையும் நட்புணர்வையும் உருவாக்க வேண்டும்...’’
நடக்கட்டும் பூனம்சந்த்... வாழ்த்துகள்!
வெ.நீலகண்டன்
படங்கள்: ரவிச்சந்திரன்