தானுண்டு தன் தங்கையுண்டு என்றிருக்கும் பாசக்கார சாமானியன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் சூப்பர் ஹீரோ ஆகும் கதை. அதை சிரிக்க, ரசிக்க, அழ, நெகிழ வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.ராஜா.
பாகிஸ்தான் பார்டருக்குக் கடத்தப்படும் தமிழக உள்துறை அமைச்சரிடம், சென்னையின் பல இடங்களில் குண்டு வைத்துப் பிரளயம் பண்ணச்சொல்லி பயங்கரவாதிகள் அசைன்மென்ட் கொடுக்க, தமிழக மூலையில் பவுனூரில் பால்விற்றுப் பிழைக்கும் வேலாயுதம் அதை எப்படி முறியடிக்கிறார் என்று சுவாரஸ்ய திரைக்கதை ஓட்டுகிறார் இயக்குநர்.
விஜய்க்கு இதுவரை ஏற்காத சாமானியன் வேடம். ஓடும் ரயிலை விரட்டி ‘குருவி’யாகப் பறந்து ஏறி ரயிலுக்குள் அரிவாளை வீசும் வேகத்தில் நாலு தலையாவது உருண்டிருக்க வேண்டும் என்று நினைத்தால், தங்கை உட்கார மேல்துண்டுக்குப் பதிலாக அரிவாளைப்போட்டு ‘சீட்’ பிடிக்கிறார் அவர். விஜய்யுடன் ஒரு கோஷ்டியே சென்னைக்குப் பயணப்பட, அவர்களை ஊரே திரண்டு வழியனுப்புகிறது. அந்தப் பாசக்கதைகளை விஜய்யின் நண்பர்களில் ஒருவரான பரோட்டா சூரி சொல்ல, டி.டி.ஆரான டி.பி.கஜேந்திரன் கேட்பதில் ஆரம்பிக்கும் சிரிப்பு அந்த ரயில் எபிசோட் முழுக்க நீண்டு, சிரித்து சிரித்துக் கண்களில் நீரே முட்டிக்கொள்கிறது.
பாதிப்படம் முழுக்கவே வழக்கமான பில்டப்புகள் இல்லாமல் வரும் விஜய்யைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எதேச்சையாக மேற்படி குண்டுவெடிப்புப் பிரச்னைக்குள் வந்து மீடியா நிருபர் ஜெனிலியாவின் யோசனையால் பயங்கரவாதிகளை மிரட்டும் பலவானாகும் அவர், பாசம், நேசம், ஆக்ஷனோடு காமெடியிலும் கலகலக்க வைத்திருக்கிறார்.

‘கொழுக் மொழுக்’ பிரியர்களுக்கு ஹன்சிகாவும், ‘ஸ்லிம்’ பிரியர்களுக்கு ஜெனிலியாவுமாக இரண்டு ஹீரோயின்கள் கிராமத்திலும், நகரத்திலுமாக கிறங்க வைத்திருக்கிறார்கள். ஹன்சிகாவை இத்தனை கிளாமராக இதற்கு முன் பார்த்ததில்லை. ஜெனிலியாவின் காதல் ஒருதலையாய்ப் போனாலும் கதையின் உயிர்முடிச்சில் முக்கியத்துவம் பெறுகிறார் அவர்.
தன் ஆசையை நிறைவேற்றிய அண்ணனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு குதூகலிப்பதிலும், கடைசியில் அண்ணனுக்கேற்ற தங்கையாகி, ஊரைக் காப்பாற்றி உயிர்விடுவதிலும் நிறைவாகச் செய்திருக்கிறார் விஜய்யின் தங்கை சரண்யா மோகன். அந்த உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் பயங்கரவாதியும் முகம் தெரியாதவர்களாக இருந்தாலும் மிரட்டுகிறார்கள்.
இண்டஸ்ட்ரியில் இருக்கும் அத்தனை காமெடியன்களையும் வளைத்துப் போட்டு நம்மை சிரிக்கப் பண்ணியிருப்பதில் ஜெயித்திருக்கிறார் ராஜா. அதில் சந்தானம் பின்னி எடுக்கிறார். திருடனாக முயன்று கிளைமாக்ஸுக்கு முன்னர் அது நிறைவேற, அதைக் கொண்டாடும் விஜய்யிடம் ‘‘இதை மூணாவது சீன்லயே சொல்லியிருந்தா நான் இத்தனை கஷ்டப்பட்டிருக்க மாட்டேனே..?’’ என்பது டாப்கிளாஸ்.
காமெடி கடந்து பார்த்தால், ‘விஜய் ஒரு பால்காரர்’ என்று வசனங்களில் மட்டுமே வருகிறதே தவிர ஒரு காட்சியிலாவது அவர் பால் கறந்ததாகவோ, வீடுகளுக்கு ஊற்றியதாகவோ இல்லை. குறைந்தபட்சம் அட்மாஸ்பியரில் ஒரு பசுமாடு கூட இல்லை. அதேபோல் நாடே காணத்துடிக்கும் வேலாயுதத்தைப் பார்க்க ஸ்டேடியத்தில் ஜேஜேவென்று மக்கள் கூட, பாதுகாப்புக்கு போலீஸ் வரமாட்டார்களா..? உள்துறை அமைச்சருக்கே போலீஸ் பாதுகாப்பு இல்லாதது என்ன லாஜிக்..?
விஜய் ஆன்டனியின் இசையில் ‘சொன்னா புரியாது’, ‘சில்லாக்’, ‘முளைச்சு மூணு இலை...’ பாடல்கள் அட்டகாசம். கண்ணைக் கவரும் பிரியனின் ஒளிப்பதிவில் இத்தனை நிறங்களை இதுவரை பார்த்ததில்லை.
குங்குமம் விமர்சனக்குழு