தீபாவளியன்று என்னால் சுவாசிக்க முடியவில்லை. காற்றுமண்டலம் புகைமண்டலமாக இருந்தது. சாம்பல் படர்ந்த தெருக்களில், எழுதப் படிக்கத் தெரியாத சிறுவர்களின் பாடப்புத்தகங்களை பிடுங்கிச் சுக்குநூறாகக் கிழித்துப் போட்டதைப் போல பட்டாசுக் குப்பைகள். குப்பைகள் மட்டுமல்ல... ‘குடி’மக்களும் அங்கங்கே விழுந்து கிடந்தார்கள். இதுதான் ஒரு பண்டிகையின் பின்விளைவா என்று யோசிக்க முடியாத அளவுக்கு வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
‘பிள்ளையார் வழிபாடு பற்றி 1960களில் ஆராய்ந்து கருத்தை வெளியிட்டோர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும் தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரும் ஆவர். அவர்தம் முடிவு, பிள்ளையார் வழிபாடு தமிழ் மக்களுடைய மரபு வழிபாடு அன்று. மகாராட்டிரப் பகுதியில் இருந்து நரசிம்ம பல்லவனால் (கி.பி. 630&668) அறிமுகப்படுத்தப்பட்டது என்பது ஆகும்’ என்கிறார் க.ப.அறவாணன். (‘தமிழ் மக்கள் வரலாறு’ & தமிழ்க்கோட்டம் வெளியீடு)
இப்படித்தான் தீபாவளியும் நமக்கு பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அறிமுகமாகியிருக்கிறது. வெடிமருந்து அதுவரை இங்கே அறிமுகமாகவில்லை. இயற்கையை மட்டுமே வழிபட்டு வந்த தமிழர்களின் தொடர்ச்சியான நாம், இன்று இயற்கைக்கு எதிராக வெடி வெடித்துக் காற்றை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு இந்த பட்டாசுப் பண்டிகையின் கொண்டாட்டத்தில் சிறுவயதில் ஒரு சந்தோஷம் இருந்தது. அந்த அறியாமையைப் பிறகு மெல்ல மெல்ல உணரத் தொடங்கினேன். இன்று என் மகளுக்கு அதை எடுத்துச் சொல்லி உணர வைக்கும்போது, ‘பட்டாசு வேண்டாம்’ என்பதை அவள் அவளது தோழிகளுக்கும் சொல்லத் தொடங்கியிருக்கிறாள்.
உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் ‘வீட்டுக்கு வீடு மரம் வளருங்கள்’ என்று எப்படிச் சொல்லித் தருகிறோமோ, அதே போல அடுத்த தலைமுறையின் இதயத்தில் ‘வெடி வெடிக்காதீர்கள்’ என்பதையும் ஆழமாக விதைக்க வேண்டும்.
மத்தாப்புகளையும் வெடிகளையும் கொளுத்துகிறபோது அதிலிருக்கும் பாஸ்பரஸ் காற்றிலிருக்கும் ஆக்சிஜனோடு சேர்ந்து ஆக்சைடாக வெளியேறும். இது குளிர் நிறைந்த மாதம் என்பதால், நிலப்பரப்பிலேயே புகை தங்கிவிடும். குழந்தைகளும் வயதானவர்களும் மூச்சுத் திணறுவார்கள்.
வெடிச்சத்தத்தின் அதிர்வில் பறவைகள் தங்கள் குஞ்சுகளைக் கூடுகளில் பரிதவிக்க விட்டுப் பறந்தோடி விடுகின்றன. பசியிலும் பிரிவிலும் குஞ்சுகள் அனாதைகள் ஆக்கப்பட்டு பெரும்பாலும் இறந்து விடுகின்றன. பறவைகளுக்காக வெடி வெடிக்காமல் இருக்கின்ற சில கிராமங்களை & அந்த மனிதர்களை & இப்போது எனக்கு வணங்கத் தோன்றுகிறது.

பூமியில் வாழ்க்கை என்பதும் சந்தோஷம் என்பதும் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. ஆடுகளையும் மாடுகளையும் பூனைகளையும் நாய்களையும் நாம் நம் குழந்தைகளைப் போலவே பேணி வளர்த்தவர்கள். வாசலில் வரைந்த பச்சரிசி மாவுக் கோலத்தை எறும்புகள் ஊர்ந்து வந்து எடுத்துச் செல்வதைப் பார்த்து ரசித்தவர்கள். இன்று இயற்கைக்கு எதிரான தீபாவளிக் கலாசாரத்தை காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்களிடமும் பரப்பிவிட்டோம். அவர்களும் வெடிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களது குடியிருப்புகளைச் சுற்றி வசிக்கிற புள்ளிமானாக இருந்தாலும் சரி; பிளிறும் யானையாக இருந்தாலும் சரி... வெடிச்சத்தத்தில் வெறி பிடித்து ஓடத்தான் வேண்டும்.
இதுபோன்ற பகுதிகளில் வெடி வெடிக்கக்கூடாது என்று வனத்துறை எச்சரித்தாலும், காட்டை ஒட்டியுள்ள கேளிக்கை விடுதிகளில் உல்லாசமாக தீபாவளி கொண்டாடும் பெரிய மனிதர்களும், அவர்களின் பிள்ளைகளும் வெடிக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க முடிவதில்லை. காடும் விலங்குகளும் மட்டுமல்ல; அந்தப் பழங்குடிப் பெண்களும்கூட அவர்களுக்கான உல்லாச கேளிக்கைதான்.
இன்று தீபாவளி பெருமுதலாளிகளின் விளம்பரங்களாலும் வசீகரத்தாலும் பொங்கலைவிட பெரும் பண்டிகையாக நமது மூளையில் திணிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொழில் நிறுவனமும் ஒரு வருடத்துக்கென ஒதுக்கி வைக்கிற விளம்பரத் தொகையில் நாற்பத்தைந்து சதவீதப் பணத்தைத் தீபாவளி விளம்பரங்களுக்காகவே செலவு செய்கின்றது.
நகைக்கடை, ஜவுளிக்கடை, இனிப்புக்கடை, மதுக்கடை என்று கடை கடையாக ஏறி இறங்கி மனிதனைக் கடைநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிற ராஜதந்திரத்தோடு வியாபாரிகள் இந்தப் பண்டிகையைக் கூடுதலாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.
1929&ம் ஆண்டு தீபாவளியை ஒட்டி, ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் பெரியார் பேசினார்...
‘‘தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்து போகின்றது... இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாமைத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்கு மேல் செலவு செய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது & கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகிறது & பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போதலும், பட்டாசு சுடும்போது திடீரென வெடிப்பதால் உடல் கருகி ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப் பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவோ பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானங்கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார & தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.’’
பட்டுக் கோட்டையின் பாட்டுதான் என் மனசுக்குள் கேட்கிறது...
‘உன்னைக் கண்டு நான் வாடஎன்னைக் கண்டு நீ வாடகண்ணீரும் கதை சொல்லும்தீபாவளி...ஊரெங்கும் மணக்கும்ஆனந்தம் நமக்குகாணாத தூரமடா...காணாத தூரமடா!ஒற்றைக்கால் மைனாதீபாவளி வெடிச்சத்தம் ஓய்ந்த இந்த நேரத்தில் பறவைகள் திரும்பி வருவதைப் போல ஓர் ஆசுவாசத்துடன் ஒரு கவிதை நூலைப் பற்றிச் சொல்ல வேண்டும். ‘கொண்டலாத்தி’ & க்ரியா வெளியீடு. கவிதைகளும் பறவைகளைப் பற்றித்தான். பறவைகளைக் கவிதைகளில் படம்பிடித்திருப்பவர் ஆசை. காமிராவில் படம்பிடித்திருப்பவர் கே.ஞானஸ்கந்தன். இருவரும் கவிதையின் மழைக்காட்டில் சிறகடித்து நம்மைச் சிலிர்க்க வைக்கிறார்கள்.
கண்ணாடி வானம் போல விரியும் கவிதைகளில், சொற்கள் பறவைகளைப் போல இயல்பாக வந்து ஆழ்ந்த அமைதியுடன் அமர்ந்திருக்கின்றன. அபூர்வமான பறவைகளை அழகான கண்களுடன் ‘ஆசை’ நோக்குகையில் அவற்றில் பட்டுத் தெறிக்கிறது வாழ்வின் உள்ளொளி.
ஆசை, ஏழாண்டுகளாக க்ரியா பதிப்பகத்தின் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். ‘இத்தனை நாளாக எங்கே இருந்தது இந்தப் பறவை’ என்று ஆசையைப் பார்த்து எனக்குக் கேட்கத் தோன்றுகிறது. நூலில் நம் ஒவ்வொருவரின் மனசாட்சியைப் பிடித்து உலுக்குகிற ஒரு கவிதை...
தெருவோரம் நிற்கிறது
ஒற்றைக்கால் மைனா
உலகின் ஒட்டுமொத்த பலவீனங்களின்
உலகின் ஒட்டுமொத்த துயரங்களின்
உலகின் ஒட்டுமொத்த இழப்புகளின்
சின்னமாய்
நிம்மதி இழக்கிறேன் நான்
அதைக் கடந்து செல்லும் தருணம்
துப்பாக்கிக் குண்டுகளாலோ
கொத்துக் குண்டுகளாலோ
அணுகுண்டுகளாலோ
அது தன்னுடைய காலை
இழந்திருக்க வேண்டியதில்லை
மனிதனின்
சிறு முட்டாள்தனமே போதுமானது
ஒரு மைனா தன் காலை இழப்பதற்கு
எந்த முறையீட்டையும்
அது வைக்கவில்லை
யாருடைய மனசாட்சியையும்
அது குறிபார்க்கவில்லை
யாரையும் அது குற்றம்சாட்டவில்லை
பிறர் கவனத்தை தன்பால்
ஈர்க்கவும் அது முயலவில்லை
என்பதே
மேலும் குற்றவாளியாக ஆக்கிவிடுகிறது
நம்மை
மிகவும் அபத்தமானது
நமது சக உயிர்
ஒற்றைக்கால் மைனாவாக இருப்பது.
எனக்கும் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு
முதன்முதலில்
கோழிதான் கேட்டது
கஷ்டப்படுத்தவில்லை
பிறகு பிறகு
கடாய் வெட்டச் சொன்னது
குறை வைக்கவில்லை அதையும்
இப்போது
என்னையே பலியிட வேண்டும் என்கிறது
எங்கே ஒளிந்து கொள்ள?
விக்ரமாதித்யன்
(சலசலக்கும்...)
பழநிபாரதி