ரிட்டர்ன் வந்திடுச்சு!
‘ஓட்டுக்காக பணமோ, அன்பளிப்போ தரக் கூடாது’ என்ற விதிமுறை வெறும் ஏட்டளவில்தான். வார்டு உறுப்பினர் பதவிக்குக்கூட லட்சங்களில் செலவு செய்யும் காலம் இது. ஜெயித்தால் வட்டியும் முதலுமாக எடுத்து விடலாம் என்ற தைரியம். தோற்றால்... ‘தேள் கொட்டிய’ கதைதான். ஆனால், அதிலும் சில ‘கில்லிகள்’ இருக்கவே செய்கிறார்கள்... வீடு வீடாகப் போய் கொடுத்த பணத்தை வசூல் செய்து விடுகிறார்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் கார்கோணம் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு புடவை, மூக்குத்தி, 500 ரூபாய் பணம் ஆகியவற்றை வழங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு 2வது இடமே கிடைத்தது. கடுப்பான அவர், ‘இனிமேல் நானோ, என் குடும்பத்தினரோ தேர்தலில் நிற்கவே மாட்டோம். தயவுசெய்து நான் கொடுத்த பணத்தையும் பொருட்களையும் திரும்பக் கொடுங்கள்’ என்று வீடு வீடாகப் போய்க் கேட்டு மன்றாடி வசூல் செய்துவிட்டார். பலர் எஸ்ஸாகி விட்டார்கள்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட துக்கியாம்பாளையம் ஊராட்சித்தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரும் இதே டெக்னிக்கை பயன்படுத்தி கொடுத்ததை வசூல் செய்துவிட்டார்!
எரிந்த வேட்டி சேலைகள்
இந்தக்கூத்து நடந்தது சிதம்பரம் நகராட்சியில். 28வது வார்டுக்குப் போட்டியிட்ட ஒரு பெண் வேட்பாளர், வேட்டி & சேலை வழங்கி வாக்குச் சேகரித்துள்ளார். கிடைத்ததென்னவோ தோல்விதான். விரக்தி அடைந்த அவர் தெருவில் நின்றபடி வேட்டி & சேலை வாங்கிக்கொண்டு ஓட்டை மாற்றிப்போட்ட வாக்காளர்களை ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதனால் வெகுண்டெழுந்த மக்கள் வேட்டி & சேலைகளை எடுத்துச் சென்று அந்த வேட்பாளர் வீட்டு முன்னால் போட்டு எரிக்க, போலீஸ் வந்து நெருப்பை அணைக்க வேண்டியதாயிற்று!
அப்பா மகள் தோல்வியும் கணவன் மனைவி வெற்றியும்
வீட்டுக்குள் ஒன்றுக்கொன்றாக இருக்கும் உறவுகள், களத்தில் காரசாரமாக மோதிக்கொள்வது தேர்தலில் சாதாரணம். நீடாமங்கலத்தில் நடந்தது சற்று வித்தியாசமான உறவுப்போர். பேரூராட்சித்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டவர் பரிமளா. அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர் அலீப் லைலா. அதே பேரூராட்சியில் 7&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் செந்தமிழ்ச்செல்வனும், திமுக சார்பில் கமாலுதீனும் போட்டியிட்டனர். செந்தமிழ்ச் செல்வனும் பரிமளாவும் கணவன்&மனைவி. கமாலுதீனும் அலீப்லைலாவும் தந்தை&மகள். இதில் கணவனும் மனைவியும் வெற்றி பெற்றார்கள். தந்தைக்கும் மகளுக்கும் கிடைத்தது இரண்டாமிடம்.
எல்லாமே கவரிங்! 
போச்சம்பள்ளி பகுதி வாக்காளர்களை ‘அடப்பாவிகளா...’ என்று வாய்பிளக்க வைத்திருக்கிறார்கள் சில வேட்பாளர்கள். தேர்தலுக்கு முதல்நாள் பணம், அரிசி, புடவை, ஜாக்கெட்டோடு தங்கத் தோடு, தங்கமூத்தியையும் வழங்கி திணறடித்தார்கள் சில வேட்பாளர்கள். தேர்தல் முடிந்த ஓரிரு நாட்களில் தோடும் மூக்குத்தியும் லேசாக நிறம் மங்க, சிலர் நகைக்கடைக்குக் கொண்டு போய் ‘மதிப்பு’ பார்த்திருக்கிறார்கள். தெரிந்துவிட்டது லட்சணம். அத்தனையும் கவரிங். ஐந்துக்கும் பத்துக்கும் பிளாட்பாரத்தில் வைத்து விற்றதை மொத்தமாக வாங்கிவந்து சப்ளை செய்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக ‘நகைகள்’ வழங்கிய வேட்பாளர்கள் தோற்றுவிட... கேள்வி கேட்க முடியாமல் தவிக்கிறார்கள் வாக்காளர்கள்!
0 வாங்கிய வேட்பாளர்கள்
‘நீதேர்தல்ல நின்னா உம் பொண்டாட்டி கூட உனக்கு ஓட்டுப்போட மாட்டா’ என்று சிலரை கேலி பேசுவதுண்டு. உண்மையிலேயே அப்படி நடந்தால்? தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிட்ட கேசவன், நாகர்கோவில் நகராட்சி 49வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ராமலட்சுமி, உதகமண்டலம் நகராட்சி 18வது வார்டு மதிமுக வேட்பாளர் அற்புத சகாயராஜ், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி 15வது வார்டில் போட்டியிட்ட சா.ஸ்டாலின் ஆகியோர் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை 0. ‘அட, குடும்பம் கிடக்கட்டும்பா... அவர்கள் ஓட்டாவது அவர்களுக்கு விழுந்திருக்குமில்லே...‘ என்கிறீர்களா? தங்கள் வார்டில் இருந்து மாறி வேறு வார்டில் போட்டியிட்டதால் அவர்கள் வாக்கைக்கூட தங்களுக்காகச் செலுத்திக் கொள்ள முடியவில்லை. என்ன கொடுமை சார் இது!
எனக்கு போடாதீங்க!
‘எனக்கு ஓட்டு போடுங்கள்’ என்று கேட்டால் நியாயம். ‘அவருக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்றால் கூட அதில் நியாயம் இருக்கிறது. ஒரு வேட்பாளர், தன் எதிர் வேட்பாளரின் சின்னத்துக்கு ஓட்டுக்கேட்டு வந்தால்? கோவை மாவட்டம், நஞ்சுண்ட புரத்தில்தான் அந்த வினோதம். ஊர்ப் பஞ்சாயத்தில் கட்டுப்பாடு விதித்து சுந்தர்ராஜ் என்பவரை பொது வேட்பாளராக நிறுத்தினார்கள். அந்த முடிவுக்குக் கட்டுப்படாமல் ஜெயக்குமார் என்பவரும் போட்டியிட்டார். சுந்தர்ராஜுக்கு கத்திரிக்கோல் சின்னமும், ஜெயக்குமாருக்கு பூட்டு சாவி சின்னமும் ஒதுக்கப்பட்டது. தனக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட ஜெயக்குமார், வாக்குக் கேட்டுச்செல்லும் இடங்களில், தனது சின்னத்துக்கு வாக்குக் கேட்காமல், ‘சுந்தர்ராஜின் கத்திரிக்கோல் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்’ என்று கேட்க... மக்கள் குழம்பிவிட்டார்கள். இதில் ஏதோ உள்குத்து இருப்பதை உணர்ந்த சுந்தர்ராஜ் போலீசில் புகார் செய்ய, ‘சும்மா தமாஷுக்குச் செஞ்சேன்’ என்று ஜெயக்குமார் வழிய, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தது போலீஸ். ஆனால், தேர்தலில் ஜெயக்குமாருக்கு பாடம் சொல்லிவிட்டார்கள் மக்கள். பதிவான 5223 வாக்குகளில் வெறும் 479 வாக்குகள் மட்டுமே அவருக்குக் கிடைத்தன.
தொகுப்பு:வெ.நீலகண்டன்