உலகின் மிக காஸ்ட்லியான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ‘ஃபார்முலா ஒன்’ கார் ரேஸ் இப்போது இந்தியாவிலும்! டெல்லியை அடுத்த நொய்டாவில் உருவாகி இருக்கும் ‘புத்தா சர்வதேச பந்தய டிராக்’கில் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் ரேஸ் நடந்திருக்கிறது. சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தொடர்ந்து ஆசியாவில் இந்தப் பெருமையைப் பெறும் ஏழாவது நாடு இந்தியா.
5.14 கி.மீ. தூரம் இருக்கும் இந்த டிராக்தான் இத்தாலியில் இருக்கும் மோன்ஸா டிராக்குக்கு அடுத்தபடி அதிவேகமானது. ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது இந்த டிராக். போட்டியை நடத்துவதற்கு ‘ஃபார்முலா ஒன்’ நிர்வாகத்துக்கு வருஷத்துக்கு 175 கோடி ரூபாய் லைசென்ஸ் தொகை செலுத்த வேண்டும். 1 லட்சத்துக்கு 20 ஆயிரம் பேர் போட்டியை ரசிக்கலாம். டிக்கெட் விலை 2 ஆயிரத்து 500 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை.
தொழில் வளர்ச்சிக்காக என்று விவசாயிகளிடமிருந்து கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் இந்த டிராக் உருவானது. அக்கம்பக்கத்து விவசாயிகள் வருஷம் முழுக்க உழைத்தால்கூட ஒரு டிக்கெட்டுக்கான தொகையை சம்பாதிக்க முடியாது என்பது இந்தியாவில் மட்டுமே நீடிக்கும் இனிய முரண்!