அந்தப் பக்கம் வரலாற்று உண்மையையும், இந்தப் பக்கம் டி.என்.ஏ ஆராய்ச்சியையும் முடிச்சுப் போட்டு இருவேறு நிலைகளில் பயணப்பட்டுக் கதை சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த சிந்தனைக்கு ஒரு வந்தனம் சொல்லலாம்.
பல்லவ நாட்டிலிருந்து பல கலைகள் கற்றுத் தேர்ந்த இளவரசர் போதிதர்மன் சீனா செல்கிறார். அங்கே பரவும் ஆட்கொல்லி நோயொன்றைப் போக்குவதிலும், பகைவர்களால் வரும் ஆபத்தைத் தவிர்ப்பதிலும் உதவ, சீனர்கள் அவரை தெய்வமாகவே மதிக்கிறார்கள். அங்கேயே உயிர்துறக்கும் அவரது ஆன்மா தங்களைக் காக்கும் என்றும் நம்புகிறார்கள்.
அங்கேயிருந்து கதை தற்காலத்துக்குள் பாய... ஜெனடிக் எஞ்சினியரிங் விஞ்ஞானி ஸ்ருதி ஹாசனைக் கொல்லவும், ‘பயோ வெப்பனா’ன உயிர்க்கொல்லி கிருமியைப் பரப்பவும் சீனாவிலிருந்து சென்னைக்கு ரகசியக் கொலையாளி அனுப்பப்படுகிறான். அவனைத் தடுக்க இங்கே இருக்கும் ஒரே மனிதன், போதிதர்மனின் வழிவந்த சூர்யா. அவரது டி.என்.ஏவை கிளர்ந்தெழச் செய்து, போதிதர்மனின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரப் போராடும் ஸ்ருதி ஹாசன் அதைச் சாதிப்பது மீதிக்கதை.

போதி தர்மனாகவும், நவீன சர்க்கஸ் கலைஞ னாகவும் இரு வேறுபட்ட கால நிலைகளில் வாழும் பாத்திரங்கள் சூர்யாவுக்குக் கிடைத்த அட்சய பாத்திரங்கள். சரித்திர காலத்துக்கும், நவீன எய்ட்பேக் காலத்துக்கும் இலகுவாக அவரது உடலும், உடல்மொழியும் அமைந்து பரவசப்படுத்துகின்றன. கண்களில் கனிவும், உடலில் உறுதியும் வைத்து அவர் மேற்கொள்ளும் பயிற்சிகள் போதிதர்மனை கண்முன் கொண்டுவருகின்றன. இன்னொருபக்கம் விளையாட்டுப் பிள்ளையாக அறிமுகமாகி பண்டைய பெருமை தெரிந்து வெளிநாட்டு சக்தியை வேரறுக்க முடிவெடுக்கும் துடிப்பும், அதற்காக மெனக்கெட்டிருக்கும் அவரது உழைப்பும் அசாத்திய முயற்சி.
இளம் விஞ்ஞானியாக வரும் ஸ்ருதி ஹாசன், ஆங்கிலத்தில் பேச நேரும் அறிவியல் அரங்கத்தில் தமிழன் பற்றிய ஆராய்ச்சியைத் தமிழிலேயே பேசுவேன் என்று பிடிவாதம் காட்டுவதிலும், அதை நையாண்டி செய்பவர்களை ஏக வசனத்தில் வசை பாடுவதிலும் ‘ஸ்ருதி’ பிசகாமல் செய்திருக்கிறார். வளமான உடல்மொழியில் காதல் ரசம் காட்டுவதிலும் கவர்கிறது மீன்குஞ்சு. ஹீரோவுக்கு நிகராக அறிமுகக்காட்சியிலேயே கைதட்டல்களை அள்ளுகிறார் வில்லனாக வரும் ஜானி. காந்தப்பார்வையில் எதிர்ப்படுபவர்களை மட்டுமல்லாது, படம் பார்ப்பவர்களையும் வசப்படுத்திவிடுகிறார். அவர் பார்வை பட்ட வாகன ஓட்டிகள் சூர்யாவின் மீதும், ஸ்ருதியின் மீதும் கார், பைக்குகளை மோதும் காட்சி ஹாலிவுட்டுக்கு நிகரான அசத்தல்.
தமிழனின் பெருமை வெளிநாடுகளுக்குப் போன ஆதங்கத்தை அங்கங்கே விதைத்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் வசனங்கள் யோசிக்கவைக்கும். குறிப்பாக ‘‘அண்டை நாட்டில் ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனைக் கொன்றது வீரமல்ல, துரோகம்...’’
என்கிற வசனம் உலகத் தமிழர்களிடையே கைதட்டல் பெறும். இருந்தும் போதிதர்மன் சீனா போனதன் காரணத்தைச் சொல்லாம லேயே விட்டிருப்பதும், உயரிய அறிவியலான டி.என்.ஏ பற்றிய மேலோட்டமான ஆராய்ச்சிகளும் ரசிகர்களுக்குக் குழப்பங்களையே தரும். ‘ஷார்ட் மெமரி லாஸை’ புரிய வைத்த மெனக்கெடல் இதில் இல்லாதது குறை. முன்பாதியில் விறுவிறுப்பு இருந்திருக்கலாம். ஹாரிஸின் இசையில் ஹிப் ஹாப் ஒரு பக்கமும், கிராமிய இசை ஒரு பக்கமுமாகக் கவர்கிறது. ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும், ராஜீவனின் கலை வண்ணமும் கைகோர்த்துக் கலக்குகின்றன. பீட்டர் ஹெயினின் ஆக்ஷனுக்கும் ஒரு ‘ஓ’.
குங்குமம் விமர்சனக்குழு