என்னுடன் காலேஜில் படிக்கிற தோழி, கண்களுக்கு விதம்விதமான கான்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொண்டு வருகிறாள். கேட்டால் 'ஃபேஷன்’ என்கிறாள். பார்வைக்கோளாறு ஒன்றும் இல்லாமல் இப்படி அழகுக்காக லென்ஸ் போட்டுக்கொள்வது தவறில்லையா? கே.சுஜிதா, சென்னை-90.
பதில் சொல்கிறார் விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.மீடியாவில் இருப்பவர்களும் நடிகைகளும் மாடல்களும் அழகுக்காக கான்டாக்ட் லென்ஸ் உபயோகிக்கிறார்கள். கல்லூரியில் படிக்கிற பெண்களுக்கு அதற்கு என்ன அவசியம் எனப் புரியவில்லை. ஏதோ வருடத்தில் ஒரு நாள், இரண்டு நாள் உபயோகிப்பதென்றால் ஓ.கே.
கான்டாக்ட் லென்ஸ் போட்டால் பார்வை கெட்டுப் போகும் என அர்த்தமில்லை. ஆனால், சில விஷயங்களை சரிவரப் பின்பற்றத் தவறினால், கண்களில் இன்ஃபெக்ஷன் உண்டாகி, அதன் காரணமாக பார்வைப் பிரச்னைகள் வரலாம். முக்கியமாக, லென்ஸை மிக ஜாக்கிரதையாக, முறையாக சுத்தப்படுத்த வேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன், கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். சரியாக சுத்தப்படுத்தாத லென்ஸினுள் தேவையற்ற புரோட்டீன் சேர்ந்து விடும். அது நல்லதல்ல. லென்ஸை அதற்கான பிரத்யேக திரவம் கொண்டே சுத்தப்படுத்த வேண்டும். சிலர் எச்சில் தொட்டு சுத்தம் செய்வதையெல்லாம் பார்த்திருக்கிறேன். அது மிகமிக ஆபத்தானது. லென்ஸை அகற்றியதும், அதற்கான பெட்டியில் பத்திரமாக வைக்க வேண்டும். கண்ட இடங்களிலும் வைக்கக்கூடாது.
மேக்கப் போடும் பழக்கமுள்ளவராக இருந்தால், முதலில் லென்ஸ் போட்டுக் கொண்டு, அதன் பிறகே மேக்கப் போட வேண்டும். லென்ஸை அகற்றி விட்டே, மேக்கப்பை நீக்க வேண்டும். வருடம் ஒரு முறையாவது கண் மருத்துவரை அணுகி, கண்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் மிக அவசியம்.
புதிதாக காபி மேக்கர் வாங்கியிருக்கிறோம். இதை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்? எஸ்.ராஜேஸ்வரி, கோயமுத்தூர்-6.
பதில் சொல்கின்றனர் பஜாஜ் சர்வீஸ் மையத்தினர்இது நீங்கள் எந்த அளவு காபி மேக்கரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் அடிப்பாகத்தில் தங்கியுள்ள மிச்சத்தைக் கொட்டிவிட்டு குழாய் தண்ணீரில் கழுவ வேண்டியது அவசியம். இல்லையெனில், அடுத்தடுத்த காபியின் சுவை மாறுபடும். அடிக்கடி பயன்படுத்துகிற பட்சத்தில் காபி ஃபில்டரை தினம் ஒருமுறை மிகச்சுத்தமாகக் கழுவி விட வேண்டும். இல்லையென்றால் அதில் அடைப்புகள் ஏற்படலாம்.
மின் இணைப்பைத் துண்டித்த பிறகே சுத்தம் செய்ய வேண்டும் என்பது பொதுவான விதி!
என் மகனுக்கு வயது 5. உணவு, பால், நொறுக்குத்தீனி என எதிலும் குறைவில்லை. ஆனாலும், எடை குறைவாகவே இருக்கிறது. எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? ஐ.ராமலட்சுமி, பாளையங்கோட்டை.
பதில் சொல்கிறார் டயட்டீஷியன் எஸ்.ஸ்டெல்லாசிலரின் உடல்வாகே அப்படி இருக்கும். எடை ஏறாமல் ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களுடைய தசைகள், திசுக்கள் உள்பட உடல் வலுவாகவே இருக்கும். சிலரது உடலமைப்பில் கொழுப்பு அணுக்களின் அளவு பெரிதாக இருக்கும். சிலருக்குச் சிறிதாக இருக்கும். இதைக் குறைபாடாக நினைத்து வருந்த வேண்டாம்.
அதேவேளையில் மன பாதிப்பு ஏதேனும் இருந்தாலும் எடை அதிகரிக்காது. டென்ஷனாகவும், எதையேனும் யோசித்துக்கொண்டே இருப்பது போலவும் உங்கள் மகன் தோன்றினால் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். சுட்டியாக இருக்கும் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!