
வெற்றியின் பாதையில்
தங்களை
திருப்பிவிட்ட
தருணங்களை,
ஜெயித்தவர்கள் அடையாளம்
காட்டும்
தொடர்
பிரகாஷ்ராஜ்
ஒரு பொது நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினராக பிரகாஷ்ராஜ். பேசி முடித்த பிறகு, பார்வையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்கிறார்கள். ‘சார், உங்க இளமையோட ரகசியம் என்ன’ என்பது அதில் ஒரு கேள்வி. கொஞ்சமும் யோசிக்காமல், ‘‘என் இளமையின் ரகசியம் உங்க அறியாமைதான்’’ என்று பிரகாஷ்ராஜ் பதில் சொன்னதும் சிரிப்பலையில் குலுங்கி, சிந்தனையில் ஆழ்கிறது அரங்கம்.
‘‘45 வயசு தாண்டியாச்சு. மனசு இளமையா இருந்தாலும், உடம்புக்கு வயசாகுதுன்னு இயற்கை காட்டிக்கிட்டே இருக்கு. முடி நரைக்குது. பத்து வருஷத்துக்கு முன்னால ஓடின வேகத்தில் இப்ப ஓட முடியலை. ‘சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க, தூங்குங்க’ன்னு அறிவுரையை மருந்தா தர்றார் டாக்டர். என் பெரிய பொண்ணுக்கு 16 வயசாச்சு. ‘உங்க இளமையின் ரகசியம் என்ன’ன்னு இப்ப கேட்டா, அது உங்க அறியாமைதானே செல்லம்’’ என்று பேசும்போது எழுகிற கைதட்டலில், மாயைகள் உடைகிற சத்தம் கேட்கிறது. பிம்பங்களுக்குள் சிறைபடாத பக்குவம் பிரகாஷ்ராஜின் பலம்.
‘‘பெரிய மனிதர்களோட வீரம், பெருமை, இளமை, சாதனை, புகழ்... இப்படி எல்லாவற்றிலும் பெரும்பான்மை மக்களின் அறியாமையே காரணமா இருக்கும். பல நேரங்களில் அந்த பெரிய மனிதர்களும் அதே அறியாமையில் இருந்துடறாங்க. ‘சலிக்கும் வரை ஒருத்தரை தூக்குவதும், வலிக்கும் வரை ஒருத்தரைத் தாக்குவதும்’ இந்த அறியாமையில்தான் நடக்குது. பிறர் கொண்டாடும்போது சரியா பார்க்காம, அதை அப்படியே நம்பிடுறதுக்கும் அதே அறியாமைதான் காரணம். ஜெயிக்கிறதுக்கு காரணமா இருந்த வேர்களை மறந்துட்டு, அன்னிக்குப் பூத்து அன்னிக்கே உதிர்ந்து போகிற பூக்களை நிரந்தரம்னு நம்பினா முடிவு நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.
இசை, நடனம் என்கிற இரண்டு கலைகளை ஃப்யூஷனாக்கி உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த கலைஞன் மைக்கேல் ஜாக்சன். இறந்த பிறகும் அவர் இறந்ததுக்கான மர்மம் இன்னும் சாகாம இருக்கு. அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தவனுக்கு சென்னையில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்துற அளவு புகழின் உச்சிக்குப் போன அந்தக் கலைஞன், ‘மாயை’ எல்லாத்தையும் நிஜம்னு நம்பினான். நதியின் அழகு கரையை மீறாத வரைக்கும்தான். அறியாமையில் மூழ்கி மூச்சுத் திணறிடக்கூடாதுங்கிறதுதான் எனக்குள்ள நான் வெச்சுக்கிற அலாரம்.
நிறத்தீண்டாமையை எதிர்த்து உலகம் முழுவதும் விடுதலைப் போராட்டங்கள் நடந்துக்கிட்டிருந்தபோது ஜாக்சன் என்கிற சிறுவனின் இசைப் பயணம் ஆரம்பிக்குது. உலக சாதனை படைக்கிற இசை ஆல்பங்களை தந்தபோது, திடீர்னு ஆகாயத்தில் ஒரு நட்சத்திரமானார் அவர். அந்த நட்சத்திரத்தோட வெளிச்சத்துல இசை நிறுவனங்கள், மீடியா, ‘பப்’கள் எல்லாம் அசுரத்தனமா வளர்ந்தன.
பிரபலமா இருக்கிறவன் பலவீனமானா என்ன நடக்குமோ, அது ஜாக்சனோட வாழ்க்கையில் நடந்துச்சு. குழப்பத்துல அதிகமா தண்ணியடிச்ச ஒருத்தன் மறுநாள் முழுவதும் ஹேங் ஓவர்ல இருக்கிற மாதிரியே மைக்கேல் ஜாக்சனோட கடைசி காலம் இருந்துச்சு. அவன் இருமலையும், தும்மலையும் இசைன்னு உலகம் கொண்டாடினபோது மனசுல ஒரு அலாரம் அடிச்சிருந்தா, ஜாக்சனுக்கு மரணம் துன்பமா மாறியிருக்காது. அஞ்சு வருஷம் கழிச்சு இசை நிகழ்ச்சி நடத்த ஜாக்சன் தேதி கொடுத்தா, பணத்தைக் கொட்டிக் கொடுக்க நிறைய பேர் காத்திருந்தாங்க. 2500 ஏக்கரில் வீடு மட்டும் வைத்திருக்கிற ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த ஒருவன், அடைக்க முடியாத கடன்களை வைத்துவிட்டுப் போன சோகத்தை ஜீரணிப்பதே கஷ்டம்.

எனர்ஜிதான் ஒவ்வொரு கலைஞனுக்கும் ஆதாரம். அதைவச்சுதான் வண்டி எவ்வளவு காலம் ஓடும்ங்கிறதை சொல்ல முடியும். இசைக்கலைஞர்கள் உலகம் முழுவதும் இருந்தாங்க. உடலின் ஒட்டுமொத்த சக்தியை ஒன்று திரட்டி ஜாக்சன் ஆடுகிற நடனம் அவரை வித்தியாசப்படுத்திக் காட்டுச்சு. தன்கிட்ட இருந்த அசாத்தியமான எனர்ஜியை, இசையால் எல்லாருக்குள்ளேயும் ஏத்தின அற்புதத்தை ஜாக்சன் செய்து காட்டினார். மொழி, நாடு, கலாசாரம் போன்ற எல்லைகளைக் கடந்து அவர் கொண்டாடப்பட்டதுக்கு அந்த எனர்ஜிதான் காரணம். தனக்குள்ள இருக்கிற சக்தியை ஒன்றுதிரட்டி ஒரு விஷயத்தை கவனத்தோடு செய்கிற எல்லாரும் அசாத்தியமான வெற்றி அடையறதை எல்லாத் துறைகளிலும் பார்க்க முடியும். கொண்டாட்டங்களில் தொலைஞ்சு போகாம பார்த்துக்கத் தெரிஞ்சவங்களாலதான் வெற்றியைத் தக்க வச்சுக்க முடியும்.
கறுப்பினத்தின் கலை நட்சத்திரமா வளர்ந்த ஜாக்சன், தன்னை வெள்ளை நிறமா காட்டிக்கிறதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோதே வீழ்ச்சி தொடங்கிடுச்சு. போதை ஊசிகளால் துளைத்தெடுக்கப்பட்ட உடம்பையும் மனசையும் வச்சிருந்த ஜாக்சனை முதன்முதலில் பாதிச்சது வெற்றி போதைதான். ‘பாப் இசையின் அரசன்’ என்று கொண்டாடப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்க்கை, என்னை மாதிரி முதல் தலைமுறையா ஜெயிச்சு வர்றவங்களுக்குக் கண்ணாடி. அதில் நாம எங்கேயாவது தெரிகிறோமான்னு பார்த்துக்கிற எச்சரிக்கை உணர்வு எப்பவும் என்கிட்டே இருக்கும். நம்ம தகுதியை யார் யாரோ தீர்மானிக்க அனுமதிக்காம, நாமளே தீர்மானிச்சுட்டா நல்லது. ‘எல்லாம் தெரியும்’ என்கிற சிந்தனை வராம, ‘இன்னும் நல்லா பண்ணணுமே’ன்னு யோசிக்கிற மாதிரி ஏதாவது ஒன்றை புதுசா செய்ய ஆரம்பிச்சுடுவேன். அனுபவம் ஆசிரியரானால், புதுசா ஒன்றைத் தேடி மாணவனா மாறிடுவேன். அதனால வெற்றி தலைக்கு ஏறாம இருக்கு.
நல்லா நடிச்சிட்டிருக்கும்போது நான் தயாரிப்பாளனாகி, படங்கள் எடுத்தேன். 10 கோடி கடன் வரைக்கும் போயிருக்கேன். என்கிட்டே வேலை செய்கிற 20 வயசு பையன்கிட்டே சில லட்சம் சேமிப்பு பேங்க்ல இருக்கும். நான் கடன்காரனா இருப்பேன். அப்பல்லாம் அடுத்தவங்க பார்வையில் பைத்தியக்காரனாவே பட்டிருக்கேன். நல்ல படங்களை எடுக்கணும் என்பது எனக்கு நானே போட்டுக்கிட்ட கோடு. அதை எப்பவும் தாண்டக்கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கிறதால காசுக்கு நஷ்டம் வந்திருக்கு. அது தற்காலிகமானதுதான். ‘எடுறா வண்டிய’ன்னு ஒரு நடிகனா எல்லாப் படத்துலேயும் வில்லனா வசனம் பேசினா கோடிக்கணக்குல சம்பளம் தர்றாங்க. நல்ல படம் எடுத்தா கோடிக்கணக்குல நஷ்டம். இது சுவாரஸ்யமான ஆட்டமா இருக்கு. ஆட்டத்தை ரசிக்காம, வெற்றி & தோல்வி கணக்குல மாட்டிக்கிட்டா... அப்புறம் விளையாடவே முடியாது.
இப்போ நான் இயக்குனர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியில ஒரு படத்தை இயக்கிட்டு இருக்கேன். பல கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பான கிரிக்கெட் உலகக்கோப்பையை தலைமையேற்று வாங்கித் தந்த ‘தோனி’ பேர்தான் படத்துக்கு டைட்டில். இன்னொருத்தரோட கனவுக்கு வடிவம் கொடுக்கிற கலை, நடிப்பு. கனவு என்னுடையதா இருக்காது. ஒரு இயக்குனரோட கனவில் நானும் ஒரு பாத்திரமா இருப்பேன். என் கனவில் நானே பாத்திரமா இருந்து பார்க்கிற த்ரில் இப்போ எனக்குள்ள ஆக்கிரமிச்சிருக்கு.
16 வருஷமா, பல நாள் இரவு பகல் தெரியாம வேலை பார்த்திருக்கேன். காலையில் சென்னை, மாலையில் ஹைதராபாத், இரவு பாங்காக்னு ஒரே நாள்ல உள்ளூர், வெளியூர், வெளிநாடு பறந்து பறந்து நடிச்சிருக்கேன். எல்லா மொழி ஹீரோக்கள்கிட்டேயும் அடி வாங்கியிருக்கேன். ஒரு படத்தில் த்ரிஷாவை காதலிப்பேன். இன்னொரு படத்தில் த்ரிஷாவோட அப்பாவா நடிப்பேன். ஜெயம் ரவிக்கு அப்பாவா ஒரு படத்தில் நடிப்பேன். வேறொரு படத்தில் தொடை தட்டி சவால் விடுற வில்லனா இருப்பேன். ‘எது பண்ணாலும் நல்லா பண்ணுடா’ன்னு மக்கள் நடிகனா எனக்கு ஒரு லைசென்ஸ் கொடுத்துட்டாங்க. அதனால எல்லாமே ஈஸியா தெரிய ஆரம்பிச்சுடுது. ‘யாரோ பணம் போடுறாங்க, யாரோ கதைகளை உருவாக்கி இயக்குறாங்க, நாம போய் ஒரு கேரக்டர் நடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டா ரிஸ்க் இல்லை’ என்கிற நினைப்பு என்னை சோம்பேறி ஆக்கிடும்.
இப்போ இயக்குனரா இருக்கும்போது, மனசு படபடன்னு அடிச்சுக்குது. எவ்ளோ வேலை செய்தாலும், ‘ஐயோ... பத்தவே இல்லையே’ன்னு தோணுது. பயம் நிழல் மாதிரி கூடவே இருக்கு. சினிமாதான் தொழில்னு ஆனபிறகு, இந்தியாவின் முக்கியமான இயக்குனர்களில் இருந்து, அறிமுக இயக்குனர்கள் வரை எல்லோரோடவும் வேலை பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. பெரிய பிரம்மாக்கள் தங்கள் கனவுக்கு வடிவம் கொடுக்கிறதை நேர்ல பார்த்திருக்கேன். நானும் சில நேரம் அவங்க கனவின் வடிவமாகி இருக்கேன். என் கனவுக்கு இன்னொருத்தரை வடிவமாக்கிற வேலைக்கு நான் புதுசு. கனவைத் துரத்தி, பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, வாடகையை ஏத்திட்டாங்கன்னு யதார்த்தத்தில் நசுங்கி முழி பிதுங்கி நிக்கிற ‘மிடில் க்ளாஸ்’ வாழ்க்கையைப் படமாக்கிட்டு இருக்கேன். இந்தப் போராட்டம் என்னை திரும்ப மாணவனா நிக்க வைக்குது. ‘தோனி’ படத்தில் ஒரு பாட்டு வரும்...
‘விளையாடும் மைதானம் - அங்குபலமாய் கரகோஷம்...வெறும் பந்தாய் தானிருந்தால்பல கால்கள் விளையாடும்’னு இளையராஜா உருகி பாடியிருக்கார்.
பாராட்டுக்கும், முகஸ்துதிக்கும் வித்தியாசம் பார்க்கத் தெரிஞ்சவன்கிட்ட வெற்றி காலடியில்தான் இருக்கு. பார்க்கத் தெரியாதவன் பலருடைய கால்களுக்கு நடுவில் மாட்டின பந்துதான். ‘டை’ அடிக்கிறதை ‘இளமை’ன்னு யாரோ சொன்னா, அதை அப்படியே நாம ஏத்துக்கிட்டா, இதுவரைக்கும் ஏறிவந்த ஏணி அப்பவே பாம்பா மாறிடும்’’ என்கிற பிரகாஷ்ராஜ் ரசிக்க வைக்கிற கலைஞன் மட்டும் இல்லை...
வியப்பூட்டுகிற கலைஞனும்கூட!
(திருப்பங்கள் தொடரும்...)
த.செ.ஞானவேல்