முகமூடி அணிந்து, கைகளில் துப்பாக்கியைப் பிடித்தபடிதான் வங்கிக்கொள்ளையர்கள் வருவார்கள் என்று செய்திகளில் படித்திருக்கிறோம்; படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் டெக்னாலஜி யுகத்தில் வங்கிக் கொள்ளையர்களும் வடிவம் மாறிவிட்டார்கள். உங்கள் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்தை, உங்களுக்கே தெரியாமல் அந்நிய தேசத்திலிருந்தபடி கொள்ளையடிக்கிறார்கள் இவர்கள். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கானவர்களின் பணம் இப்படி கொள்ளை போயிருக்கிறது.
கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி என குறிப்பிட்ட சில வங்கிகளின் சென்னை கிளைகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் கணக்கிலிருந்துதான் பணம் கொள்ளை போயிருக்கிறது. இதேபோல கூரியரில் வந்த டெபிட் கார்டுகளை, கூரியர் ஊழியர்களை கரெக்ட் செய்து வாங்கி, போலிகளை உருவாக்கி கொள்ளையடித்த கும்பலும் பிடிபட்டிருக்கிறது.
‘‘வங்கிகளின் கம்ப்யூட்டர் சார்ந்த பரிவர்த்தனைகளில் மோசடிகள் பெருகி விட்டன’’ என்கிறார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ராஜேந்திரன். கம்ப்யூட்டர் சார்ந்த குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்பும் ‘சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ அமைப்பின் துணைத்தலைவராக இருக்கும் ராஜேந்திரன், 56 வயதில் பிஹெச்.டி. ஆய்வுக்கு எடுத்திருக்கும் தலைப்பு & வங்கிகளில் கம்ப்யூட்டர் குற்றங்கள்!

‘‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில 30 வருஷ அனுபவம். கடைசி 10 வருஷம் ‘டேட்டா செக்யூரிட்டி’ பிரிவுல இருந்தேன். ‘டெபிட் கார்டு திருடு போச்சு’, ‘ஆன்லைன் பரிவர்த்தனையில மோசடி’, ‘ஏ.டி.எம். பிரச்னை’ன்னு தினமும் புகார்கள் வந்திட்டே இருக்கும். அப்பத்தான் கம்ப்யூட்டர் சார்ந்து வங்கிகள்ல நடக்கிற மோசடிகள் பத்தி விரிவா தெரிய வந்துச்சு. செல்போனைத் தொலைச்ச ஒரு பெண் உடனடியா கணவனுக்கு விஷயத்தைச் சொல்லலை. செல்லை எடுத்தவன், கிடைச்ச கேப்ல அந்தப் பெண் மாதிரியே பேசி, கணவர்கிட்ட இருந்தே மெசேஜ் மூலம் ஏ.டி.எம். பின் நம்பரை வாங்கி, பணத்தை எடுத்துட்டான். இப்படி கதை கதையா சொன்னாங்க பாதிக்கப்பட்டவங்க. இதுபோன்ற குற்றங்கள் வேற எதுவும் இருக்கான்னும் தேட ஆரம்பிச்சேன். ‘பிஹெச்.டி. பண்ணலாமே’ங்கிற எண்ணமும் அப்படி வந்ததுதான்’’ என்கிற ராஜேந்திரன் வகைப்படுத்தும் வங்கிகளின் முக்கிய கம்ப்யூட்டர் குற்றங்கள் இதோ...
கார்டுல கை வைக்கலாம்!கிரெடிட், டெபிட் கார்டுகள்ல இப்ப போலிகள் வந்திடுச்சு. ஒரிஜினல் கார்டுகள்ல ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’னு ஒரு இடம் இருக்கும். ‘பின் நம்பர்’ தவிர்த்த ரகசிய தகவல்கள் இந்த இடத்துலதான் இருக்கும். ‘ஸ்கிம்மர்’னு ஒரு மெஷின். கொரியாவுல இருந்து இறக்குமதியாகுது. அதை வச்சு எளிதா ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ தகவல்களைத் திருட முடியும். அந்தத் தகவல்களைத் திருடிட்டு, கார்டுல முன்பக்கத்துல உள்ள விவரங்களை அப்படியே பிரின்ட் பண்ணிடலாம். ஸ்கிம்மர் மூலம் ரகசியங்கள் கிடைச்சிடுச்சுன்னா, அடுத்து தேவைப்படறது பின் நம்பர் மட்டும்தான். நெட் ஒர்க்கா இருந்து மோசடிகளைச் செய்ற கும்பல் எல்லாத்துக்கும் தனித்தனி ஆள் வச்சிருக்கும். ரகசிய தகவல்களும் பின் நம்பரும் கிடைச்சிடுச்சுன்னா, போலி கார்டை எங்க இருந்தும் ஆபரேட் பண்ணலாம். சென்னைவாசியோட பணம் சிங்கப்பூர் ஏ.டி.எம்&ல எடுக்கப்படலாம். அதனால ஹோட்டல், பெட்ரோல் பங்க் என எங்கும் நம்ம கார்டை வாங்கித் தேய்க்கிறபோது கூடவே இருந்து கவனிக்கறது நல்லது.
எனி டைம் மோசடி!ஆளில்லாத ஏ.டி.எம்கள்ல நாம பின் நம்பரை டைப் பண்ற கீ போர்டுக்கு மேல துல்லியமான கேமராக்கள் பொருத்தி வேவு பாக்கறாங்க. பணம் எடுக்கப் போற மாதிரியே போய் இந்த வேலைகளைச் செய்றதுக்குன்னே இருக்கு கும்பல். சமீபத்துல நாலு ஏ.டி.எம்கள்ல இந்த மோசடி நடந்திருக்கு. சில வங்கிகள்ல ஏ.டி.எம். கருவிகளுக்கான சாஃப்ட்வேர் தனியார் நிறுவனங்கள்கிட்ட இருந்து வாங்கப்படுது. அந்த நிறுவனங்கள்ல கார்டுகளோட ரகசியக் குறியீடுகள் பாதுகாப்பா வைக்கப்படுறதில்ல. அதனாலயும் நம்ம கார்டு பத்தின தகவல்கள் கசிஞ்சிடுது. ஏ.டி.எம். மெஷின்கள்ல பாதுகாப்புக்கான சாஃப்ட்வேர் பொருத்துனா ஓரளவு இந்த மோசடிகளைத் தடுக்கலாம். ஆனா, செலவைக் காரணம் காட்டி அதைப் பண்ண மாட்டேங்குறாங்க.
பணத்தை எடுத்துட்டு கார்டை மறந்து போறவங்களும் இருக்காங்க. இவங்களுக்காகவே காத்துட்டு இருக்கற கும்பல் உண்டு. செக்யூரிட்டி இல்லாத, ஆளரவமில்லாத ஏ.டி.எம்&களைப் பயன்படுத்தாம இருக்கிறது நல்லது.
ஆன்லைனில் ஆபத்து!ஆன்லைன் பேங்கிங் எனப்படும் இன்டர்நெட் பேங்கிங்ல எச்சரிக்கையா இல்லாட்டி பணம் பறந்துடும். பயனாளர் பெயரும் பாஸ்வேர்டும்தான் இதுல முக்கியம். இதை கீ போர்டுல தட்டி டைப் பண்ணி பணப் பரிவர்த்தனை பண்ணுவோம். கம்ப்யூட்டர்கள்ல பயன்படுத்தப்படற ‘கீ லாக்கர் சாஃப்ட்வேர்’ நாம டைப் பண்ணியதை அப்படியே ஸ்டோர் பண்ணி வச்சிருக்கலாம். நமக்குப் பிறகு வர்றவங்க அந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி அந்தத் தகவல்களை எடுத்தா சுலபமா பாஸ்வேர்டு திருடி பணத்தை மாத்திடலாம். அதனால பிரவுசிங் சென்டர் போன்ற பொது இடங்கள்ல பரிவர்த்தனை பண்ணாம இருக்கிறது நல்லது. இந்த மோசடியைத் தடுக்க இப்ப சில வங்கிகள், கீபோர்டை அப்படியே ஸ்கிரீன்லயே காண்பிச்சிடுற வசதியைக் கொண்டு வந்திடுச்சு. டைப் பண்ணாம மவுஸ் வச்சு அதுல கிளிக் பண்ணி ஆபரேட் பண்றது சேஃப்டி!
‘செல்’லிலும் தொல்லை!நிறைய பேர் இப்ப செல்போன்ல பின் நம்பர்களை குறிச்சி வைக்கிறாங்க. இது ரொம்பவே ஆபத்தானது. பின் நம்பர் மொபைல்ல இருக்குங்கிற விஷயம் எப்பவுமே நம்ம ஞாபகத்துல இருக்காது. பலபேர் கிட்ட செல்லைத் தருவோம். அந்த வேளைல அது எளிதா மத்தவங்களுக்குப் போயிடுது. ‘மொபைல் பேங்கிங்’ வசதி செய்யப்பட்ட செல்போன்கள்ல இந்தத் தகவல்கள் காப்பியடிக்கப்பட்டுச்சுன்னா உடனடியா பணப் பரிவர்த்தனை பண்ணக்கூடிய அபாயமும் இருக்கு.’’
சரி... இதற்கெல்லாம் வங்கிகள் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காதா?
‘‘ரிசர்வ் வங்கியோட உத்தரவுப்படி எல்லா வங்கிகளுமே நடவடிக்கை எடுத்திட்டுதான் இருக்கு. என் ஆராய்ச்சியோட நோக்கம், இதுமாதிரியெல்லாம் ஆபத்து இருக்குங்கிறதால இந்த இடங்கள்ல எச்சரிக்கையா இருக்கணும்கிறதை உணர்த்துவதுதான்’’ என்கிறார் விரைவில் டாக்டராகப் போகிற ராஜேந்திரன்!
அய்யனார் ராஜன்
படம்: புதூர் சரவணன்