அந்த தனியார் மருத்துவமனை பரபரவென இருந்தது. பணம் படைத்தவர்கள் மட்டுமே வந்து போகக்கூடிய மருத்துவமனை. ஆறு மாடிகளும், நான்கு தானியங்கி மின்தூக்கிகளும் சதா இயங்கிக்கொண்டே இருக்கும். நோயாளிகளைக் காண வருபவர்களின் கூட்டம் குறைவுதான். ஆனால், வருபவர்கள் ஒரு கிலோவுக்குக் குறையாத ஆரஞ்சும் ஆப்பிளும் வாங்கி வருவார்கள்.
டீலக்ஸ் வார்டில் நர்ஸாக இருக்கிறாள் தனலட்சுமி என்ற தனம். கறுப்பு நிறம்; ஆனாலும் களையான முகம். அவள் ஒன்றும் பம்பரம் மாதிரி சுழன்று நோயாளிகளின் தேவைகளை கவனிக்கும் சினிமா நர்ஸ் அல்ல. ‘வேறு வழியில்லை... இந்தத் துறைக்கு வந்தாயிற்று’ என்ற நினைப்புடன் வேலை செய்பவள். பணிவிடைகளை சரியாகச் செய்வாள். வேளை பார்த்து மாத்திரை கொடுப்பாள். எல்லாம் டூட்டி நேரத்தில்தான். மற்ற நேரங்களில் அவசரம் என்றால்கூட போக மாட்டாள்.
தனம் அங்கு சேர்ந்து மூன்று வருடம் முடிந்து விட்டது. அவளுக்கு இதுவரை நல்ல பெயரும் இல்லை; கெட்ட பெயரும் இல்லை. அவள் ஒரு மனுஷி. சூழ்நிலையால் நர்ஸ் வேலை பார்க்கிறாள். அதற்காக 24 மணி நேரமும் அவளை நர்ஸாகவே பார்த்தால் எப்படி? அவளுக்கு என்ன வேறு முகங்களா இல்லை? உதாரணமாக, தனம் மிக நன்றாகக் கோலம் போடுவாள். படம் வரைவாள். அதையெல்லாம் யார் பார்க்கிறார்கள்..! எப்போது பார்த்தாலும் நோயாளிகளோடு மாரடிப்பது எரிச்சலாக இருந்தது. இன்னும் நல்ல வேலைக்குப் போயிருக்கலாம் என்ற எண்ணம் உருண்டு கொண்டே இருந்தது.
ஒரு அம்மாவை டீலக்ஸ் வார்டில் சேர்த்தார்கள். கருப்பை நீக்கும் அறுவைசிகிச்சை. அந்த அம்மாவுக்கு வேறு எந்தத் தொந்தரவும் இல்லை என்பதால் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. அவர் மகள் தினமும் வருவாள். செய்து வைத்த சிலை போல, மெழுகு பொம்மை போலவே இருப்பாள். தூக்கி போடப்பட்ட கொண்டையும் மேக்கப்பும் அந்தப் பெண்ணை ஏர் ஹோஸ்டஸ் என்று சொல்லாமல் சொல்லியது.
தனத்துக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது. அவள் விரல்கள் சாத்துக்குடி ஜூஸ் பிழிவதே ஒரு நளினம். அவள் பேச்சு, நடை எல்லாமே ஓர் அழகு. ‘வேலை பார்த்தால் ஏர் ஹோஸ்டஸாக வேலை பார்க்க வேண்டும். மரியாதைக்கு மரியாதை, காசும் அதிகம்’ & இப்படி எண்ணம் ஓடியது அவளுள். அந்தப் பெண்ணின் பெயர் ஷில்பாவோ என்னவோ சொன்னார்கள். இப்படியெல்லாம் பெயர் இருந்தால்தான் அதுபோன்ற வேலைக்குச் செல்ல முடியும் போலிருக்கிறது. தனலட்சுமி என்று பெயர் வைத்த அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது.
ஷில்பாவின் தோழிகளும் சில நேரம் அந்த அம்மாவைப் பார்க்க வருவார்கள். அவர்கள் கடந்துபோகும்போதே வாசனை கமகமக்கும். அவர்கள் பேச்சும் சிரிப்பும் எல்லாமே ஆங்கிலத்தில்தான். தனத்தின் ஏக்கம் அதிகமாயிற்று. யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லி அந்த ஏர் ஹோஸ்டஸ் வேலைக்கு மனுப் போடலாமா என்று கூட யோசித்தாள். ம்ஹும்... அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஒருவருக்கும் இது குறித்த விவரங்கள் தெரியாததோடு, தனத்தை கேலி வேறு செய்தனர்.
‘ஆயிற்று... இன்னும் இரண்டொரு நாளில் அந்த அம்மாவை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். அதன்பிறகு விவரம் தெரியாமலே போய்விடும்’ என்று பதற்றமானாள் தனம். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஷில்பாவிடம் கேட்டே விட்டாள். ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற ஷில்பாவின் கண்களில் தெரிந்தது பரிதாபமா... ஏளனமா என்ற முடிவுக்கு தனத்தால் வர முடியவில்லை.
‘‘எப்பவுமே இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படாதீங்க. இப்போ நீங்க பாக்கற வேலை எவ்ளோ மரியாதையானது... கௌரவமானது. ஏன் ஏர் ஹோஸ்டஸ் வேலைக்குப் போக ஆசைப்படறீங்க?’’ என்று கேட்டுவிட்டு, தனத்தின் பதிலுக்குக்கூட காத்திராமல் போய்விட்டாள் ஷில்பா.
ஆத்திரம் பொங்கியது தனத்துக்கு. ‘‘இவ மட்டும் என்ன ஒசத்தியா? ஏன்... என்னால அந்த வேலையைச் செய்ய முடியாதா? எப்டி பதில் சொல்லிட்டுப் போறா பாரு. எல்லாம் காசு இருக்கிற திமிரு. தான்தான் சிவப்பா இருக்கோம்ங்கற மமதை...’’ மனதில் பட்டதையெல்லாம் கொட்டித் தீர்த்தாள் ராணியக்காவிடம்.
மாதங்கள் மூன்று ஓடிவிட்டன. தனத்தின் ஆழ்மனதில் இருந்த ஆசை மட்டும் அகலவே இல்லை. அப்போதுதான் அவளுக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்தது. ஒரு வயதான பெண்மணி. காசு பணத்துக்குக் குறைச்சல் இல்லை. பிள்ளைகள் மூவரில் இருவர் அமெரிக்காவிலும், ஒரு மகன் டெல்லியிலும் வாசம். அந்தப் பெண்மணிக்கு திடீரென உடல்நலம் குன்றி, அவரை தனம் வேலை பார்த்து வந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள் உறவினர்கள்.
சிகிச்சைகள் அளித்து உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று ஆனதும், அம்மாவை விமானத்தில் டெல்லிக்கு வரவழைத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து, தானே பார்த்துக்கொள்வதாக அவர் மகன் போனில் தெரிவித்தான். தன்னால் வந்து அழைத்துப்போக முடியாதென்றும், உதவியாளர் யாராவது கூட வந்தால் அவர்களுக்கும் சேர்த்து தானே விமான டிக்கெட் எடுத்துத் தருவதாகவும் தெரிவித்தான்.
அந்தப் பெண்மணியோடு விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு, ஓரளவு ஹிந்தி தெரியும் என்ற காரணத்தால் தனத்துக்கு அடித்தது. தனத்தின் கால்கள் தரையில் பாவவில்லை. தன் விமானப் பயணம் பற்றியே சிந்தித்தாள். பேசினாள். ஏன், தூக்கத்தில் கூட அந்தக் கனவுதான். ஏர் ஹோஸ்டஸ்களை இன்னும் கிட்டத்திலிருந்து பார்க்கலாம். அவர்கள் வேலை செய்யும் அழகை ரசிக்கலாம். அவர்களில் யாரிடமாவது கேட்டு விவரம் அறிந்து, தானும் அந்த வேலைக்கு மனுப் போடலாம் என்றெல்லாம் யோசித்து யோசித்து சந்தோஷப்பட்டாள்.
அந்த நாளும் வந்தது. தன்னிடம் இருப்பதிலேயே சிறந்த சுடிதாரை அயர்ன் செய்து அணிந்து கொண்டாள். அந்தப் பெண்மணியை வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டாள். மற்றவர்களிடம் ஏற்கனவே விசாரித்து வைத்திருந்தபடி போர்டிங் பாஸ், செக்யூரிட்டி செக் எல்லாவற்றையும் முறைப்படி செய்தாள். ஏற்கனவே பலமுறை விமானத்தில் பயணம் செய்தவர் என்பதால் அந்த அம்மாள் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினார். அது மிகவும் உதவியாக இருந்தது தனத்துக்கு.மிகப்பெரிதாக இருந்த சென்னை விமான நிலையத்தையும் பல்வேறு வகை மனிதர்களையும் வேடிக்கை பார்த்தபடியே இருந்ததில் நேரம் போவதே தெரியவில்லை. நடுவில் அந்தப் பெண்மணி காபி கேட்கவே வாங்கித் தந்துவிட்டு, தானும் வாங்கிக் கொண்டாள். விதவிதமான தின்பண்டங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவை என்ன? அவற்றின் பெயர் என்ன என்று தெரியவில்லை. அவளுக்கு வெட்கமாக இருந்தது.
ஒருவழியாக ‘போர்டிங்’ அறிவிப்பு வந்தது. தடதடக்கும் நெஞ்சோடு வீல் சேரைத் தள்ளியபடி விரைந்தாள். விமான ஊழியர்கள் மிகவும் அனுசரணையாக இருந்து அந்தப் பெண்மணியை மேலே ஏற்றினார்கள். வாசலில் நின்று கொண்டு ஏர்ஹோஸ்டஸ்கள் புன்னகைத்தபடி ‘வெல்கம்’ சொல்லி வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். தனம் பதிலுக்குச் சிரித்தாள். சிலர் அந்த ஏர் ஹோஸ்டஸ்களைக் கண்டுகொள்ளாமல் போனாலும் அவர்கள் எல்லோரையும் பார்த்து சிரித்து வைத்தார்கள்.
முதல் முறையாக சுருக்கென்றது தனத்துக்கு. அந்தப் பெண்மணியை சவுகரியமாக உட்கார வைத்து விட்டு பக்கத்தில் தானும் அமர்ந்தாள். ஒரு நிமிடம் கூட இடைவிடாமல் பேசியபடியே சுற்றி வந்து கொண்டிருந்த ஏர் ஹோஸ்டஸ்களை அவதானித்துக் கொண்டிருந்தாள். சீட் பெல்ட் போட்டுக் கொள்ளும்படிக் கெஞ்சி, சாக்லெட், தண்ணீர் வினியோகித்து, பாதுகாப்பு விதிமுறைகளை செய்து காட்டி ... என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
விமானம் உயரே எழும்பி ஒரு நிலையை அடைந்ததும், மீண்டும் அவர்கள் நடமாட ஆரம்பித்தனர். தனத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு வாந்தி வந்து விட்டது போலும். அவர் மணியை அடித்து ஏர் ஹோஸ்டஸை விளித்தார். அவர்களும் ஓடினர். ஒரு கனத்த பேப்பர் பையைக் கொடுத்து, அந்த நபர் வாந்தி எடுத்து முடித்ததும் அவர்களே அதை எடுத்துச் சென்றனர். இடையில் மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகள், டம்ளர் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். நடுநடுவே கூப்பிட்டவர்களிடம் சென்று அவர்கள் கேட்டதை செய்துகொடுத்தனர்.
தனத்துக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. அவள் கற்பனைக்கும் நிஜத்துக்கும் சம்பந்தமே இல்லை. விமானம் கிளம்பியதுமே அந்தப் பெண்மணி தூங்கிவிட்டதால் வேறு வேலை ஒன்றும் இல்லை தனத்துக்கு. அவள் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பின்னால்தான் ஏர்ஹோஸ்டஸ்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் பேசிக்கொள்வது தெளிவாகக் காதில் விழுந்தது.
குடித்து விட்டு ஒருவர் வாந்தி எடுத்ததை, அருவருப்பை முகத்தில் காட்டாமல் தூக்கிப் போட வேண்டியிருந்ததைப் பற்றி ஒரு பெண் சொன்னாள். ‘சீ... பாவம்’ என்று நினைத்துக்கொண்டாள் தனம். பத்தாம் எண் இருக்கையில் அமர்ந்திருக்கும் அரைக்கிழவன் ஒருவன் வேண்டுமென்றே சீட் பெல்ட் அணியத் தெரியாதது போல நடித்து, தொடக்கூடாத இடங்களில் தொட்டதையும், பலமுறை தேவையில்லாமல் அழைத்து வழிவதையும் மற்றொரு பெண் கோபத்தோடு சொன்னாள். அவள் கோபத்தில் கண்ணீரும் கலந்திருந்தது போல தனத்துக்குத் தோன்றியது.
தன்னுள் சிந்தனையில் ஆழ்ந்தாள் தனம்... ‘சீ, என்ன பிழைப்பு இது? கண்டவன்களின் எச்சிலையும் வாந்தியையும் எடுத்துப் போட்டுக்கொண்டு, அசிங்கமாக நடப்பவர்களைச் சகித்துக்கொண்டு உழைக்க வேண்டுமா? மற்றவர்களும் இவர்களை மதிப்பதாகத் தெரியவில்லையே?’
மனம் தன்னுடைய வேலையைப் பற்றி நினைத்தது. தானும் சுத்தம் செய்யும் பொறுப்பு உள்ளவள்தான். ஆனால், தான் செய்வது உடல்நலமில்லாதவர்களுக்கு செய்யும் சேவை அல்லவா?
தனக்குக் கிடைக்கும் மரியாதைகளை மனம் அசை போட்டது... ‘சிஸ்டர், இந்த ஸ்வீட் ஒண்ணே ஒண்ணு சாப்பிடுறேனே’ என்று இவள் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கும் மனிதர்கள். நலமாகி வீடு திரும்பும்போது நன்றியோடு சேர்த்துப் பணமும் கொடுக்கும் மனிதர்கள். ‘சிஸ்டர் கைராசி எனக்கு நல்லா ஆகி வீடு திரும்புறேன்’ என்று நன்றி பாராட்டும் மனிதர்கள். ‘எனக்குப் பேரன் பொறந்த வேளை உனக்குச் சீக்கிரமே கல்யாணம் ஆகும்மா’ என்று உரிமையோடு வாழ்த்திய மனிதர்கள்... இப்படி ஆஸ்பத்திரி மனிதர்கள் வரிசையாக வந்து போனார்கள்.
கண்களில் நீர் சுரந்தது. இனி எத்தனை ஷில்பாக்கள் வந்தாலும் தனத்தை சலனப்படுத்த முடியாது. அவளுக்கு வைரத்துக்கும் காக்கைப்பொன்னுக்கும் வித்தியாசம் தெரிந்துவிட்டது.
அவள் இப்போது விமானப் பணிப்பெண்களைப் பார்த்த பார்வையில் வியப்பு இல்லை. மாறாக ஒரு புரிதலும் இரக்கமும் இருந்தது.