இரண்டு தர்மகர்த்தாக்கள் ஒரு பேட்டையில் இருந்தார்கள். வசதியான பணக்காரர்கள். அந்த செல்வத்துக்குரிய கர்வத்திலும் போட்டி பொறாமையிலும் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள்.
அவர்களுக்கு வசதியாக இரண்டு கோயில்கள் அவர்களுடைய நிர்வாகத்தில் மாட்டிக்கொண்டு தவித்தன. ஒன்று அம்மன் கோயில், மற்றது கிருஷ்ணன் கோயில். திருவிழாக்கள் வரும்போது இரண்டு பணக்காரர்களும் போட்டி போட்டிக்கொண்டு செலவு செய்வார்கள்.
ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றினார் ஒருத்தர். அதில் முந்திரி, பாதாம் பருப்புகள், திராட்சை கலந்திருந்தது விசேஷம்.
அடுத்து வந்த ஆவணியில் கிருஷ்ணன் கோயில் கைங்கர்ய பணக்காரர், ‘தானும் சளைத்தவர் அல்ல’ என்று கோகுலாஷ்டமிக்கு பேட்டையிலிருந்த அத்தனை பேருக்கும் முறுக்கு, சீடை, இனிப்புகள் பெரிய பெரிய பாக்கெட்கள் போட்டு விநியோகித்தார்.
அம்மனுக்கு கரகாட்டப் பெண்கள் சிவகாசியிலிருந்து வரவழைக்கப்பட்டார்கள் என்றால், கிருஷ்ணன் கோயில் தர்மகர்த்தா கோலாட்டத்துக்கு பெங்களூரிலிருந்து கோலாட்ட கோஷ்டி வரவழைத்தார்.
அவர் தாம் என்றால் இவர் தூம். அவர் தூம் என்றால் இவர் தூம்... தூம்... தூம்... தூம்...
இரண்டு கோயில்களின் உற்சவ உற்சாகங்களினால் அந்தப் பேட்டைவாசிகளுக்கு அடிக்கடி அருமையான கச்சேரிகளும் கை நிறைந்த பிரசாதங்களும் கிடைத்து வந்ததை மறுப்பதற்கு இல்லை.
போட்டி என்று எந்த விஷயத்தில் ஏற்பட்டாலும் ஒரு கலகம் நிச்சயம் ஏற்படத்தான் செய்யும்.
அதே மாதிரி அம்மன், கிருஷ்ணன் கோயில்கள் இருந்த பேட்டையிலும் ஒரு விழாவின்போது கலகம் வெடித்தது.
வீதி ஊர்வலத்துக்கு அம்மன் புறப்பாடு ஆன பிறகுதான் கிருஷ்ணன் புறப்பாடு ஆகவேண்டும் என்று அம்மன் பிரமுகர் ஒரு பிரச்னை கிளப்பினார்.
முதலில் வருகிற தெய்வத்துக்கே அதிக மவுசு இருக்கும். அடுத்து வருவதற்கு இரண்டாம் பட்ச வரவேற்புதான் இருக்கும் என்பது அந்தக் கட்சியின் எண்ணம்.
இரண்டு தரப்பினருக்கும் விழாக் காலத்தில் மோதல்களும் அடிதடிகளும் போலீஸ் மத்தியஸ்தங்களும் நடப்பது சகஜமாகி விட்டது.
கோகுலாஷ்டமி தினம். கிருஷ்ணன் புறப்பாடு தாமதமாகிக் கொண்டிருந்தது. பக்தர்களுக்குள் பரபரப்பு.
‘‘ஏன் புறப்பாடு லேட்?’’
‘‘அம்மன் ஊர்வலம் போய் வந்த பிறகுதான் கிருஷ்ணன் புறப்பாடு’’ என்று கிருஷ்ணன் கோயில் அர்ச்சகர் சொன்னார். சம்பந்தப்பட்ட பிரமுகருக்கு ரொம்பக் கோபம் வந்தது. அர்ச்சகரை தனது மோதிரக் கையால் ஓர் அறையே அறைந்துவிட்டார். ‘‘இங்கே பூஜை செய்யற உனக்கு அங்கு இருக்கிற அம்மன் உசத்தியாப் போச்சோ? புறப்பாடு நடக்கட்டும்’’ என்று கட்டளையிட்டார்.
இன்னொரு அறை வாங்கினாலும் பரவாயில்லை என்று அந்த அர்ச்சகர், ‘‘புறப்பட முடியாது பிள்ளைவாள். அம்மன் வந்து இறங்கின பிறகுதான் நம்ம கிருஷ்ணன் புறப்பாடு’’ என்றார்.
அர்ச்சகருக்கு மேலும் சில அர்ச்சனைகளை பிரமுகர் செய்தார். பிளட் பிரஷர் கூடி மயக்கம் வராத குறை. நல்ல காலம்... விபரீதம் ஏதும் நேரவில்லை.
அவரை சாந்தப்படுத்தி உட்கார்த்தி வைத்திருந்தனர்.
அறை வாங்கிய முதிய அர்ச்சகர், ‘‘பிள்ளைவாள், தங்களுக்கு ஒரு ரகசியம் தெரியாததால் இத்தனை படபடப்பாகிவிட்டீர்கள்’’ என்றார்.
தர்மகர்த்தா, ‘‘அதென்னய்யா வெங்காய ரகசியம்’’ என்று சீறினார்.
அர்ச்சகர் கூறினார்... ‘‘அம்மன் முகம் வந்துதான் நம்ம கிருஷ்ணன் முகம் தயாராகும்.’’
‘‘என்ன சொல்கிறீர்... புரியலை’’ என்று வெகுண்டார் பிரமுகர்.
அர்ச்சகர் அமைதியாகக் கூறினார். ‘‘அம்மனுடைய முகமே தான் நம்ம கிருஷ்ணனுக்கும். நம்ம கிருஷ்ணனுடைய முகம் தங்கப்பூச்சுக்காக நகைக்கடைக்குப் போனது இன்னும் நமக்கு வந்து சேரவில்லை. அதற்காக அம்மன் முகத்தைக் கேட்டிருக்கிறோம். அவர்களும் அம்மன் ஊர்வலம் முடிந்ததும் தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
அம்மனோ, கிருஷ்ணனோ, முருகனோ எந்தத் தெய்வ முகங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் வார்க்கப்பட்டிருக்கும். நாங்கள் அவற்றுக்குச் செய்கிற அலங்காரத்தை வைத்து அது அம்மன், இது கிருஷ்ணன், அது முருகன் என்று தோற்றம் அளிக்கிறது. அம்மன் முகத்துக்குக் கையில் ஒரு புல்லாங் குழலை வைத்து தலையில் மயில்பீலியை வைத்தால் அது கிருஷ்ணன். கையில் சூலத்தைத் தந்தால் அம்பாள். நாங்கள்தானே அலங்காரம் செய்கிறோம். எங்களைப் பொறுத்த வரையில் அம்மனும் கிருஷ்ணனும் ஒண்ணு. அறியாமல் அடித்துக்கொள்பவர்கள்தான் மண்ணு...’’
பிரமுகர், ‘நாங்கள்தான் சரியான மண்ணு’ என்று முணுமுணுத்துக்கொண்டார்!
(சிந்திப்போம்)
பாக்கியம் ராமசாமி