சுகர் பேபி காதலா..? ஒப்பந்தமா..?
எதையும் அட்வான்சாக யோசிப்பவர் இயக்குநர் மணிரத்னம். விவாகரத்து கேட்கும் மனைவி, பாலியல் தொழிலாளியை திருமணம் செய்து கொள்ளும் ஹீரோ, இரண்டு மனைவி எந்த ஒளிவு மறைவுமின்றி வாழ்க்கை, திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் எவ்வித சலனமும் இல்லாமல் இருந்துகொள்வது, லிவிங் டு கெதர் வாழ்க்கை , திருமணத்திற்கு முன்பே குழந்தை, பிறகு கல்யாணம் என காலத்துக்கு ஏற்றார் போல் டிரெண்டிங்கில் எப்போதும் கதை சொல்பவர்.
இப்போது இன்னும் அடுத்த ஸ்டெப் எடுத்து வைத்து மறைமுகமாக பரவி வரும் சுகர் பேபி கலாசாரத்தை வைத்து ஒரு பாடலே உருவாக்கி ‘தக் லைஃப்’ படத்தில் வைத்திருக்கிறார். உண்மையிலேயே இன்று இளம் பெண்கள், ஆண்களில் பலரும் இந்த சுகர் பேபி உறவு முறையை அதிகம் விரும்புகிறார்கள்.
‘‘என் சக வயது பசங்க கூட டேட்டிங் சாட்டிங்ன்னு இருந்தா ஒரு கட்டத்துல அவன் சந்தேகப்படுவான். ஈகோ, சண்டைன்னு அவனால நிம்மதியே இல்லாம போயிடும். அதான் என்னை இடைஞ்சல் செய்யாத சுகர் பேபி ரிலேஷன்ஷிப். அவர் என்னுடைய சோசியல் மீடியா எல்லாம் நோண்ட மாட்டார், கேள்வி கேட்க மாட்டார்...’’‘‘படிக்கணும், வீட்ல கஷ்டம்... எனக்கும் பணம் வேணும். யாரையும் துன்புறுத்தக் கூடாது.  அதே சமயம் தவறான தொழிலும் கூடாது. அதான் சுகர் பேபி. அவருக்கு என் மூலமா பாதுகாப்பான ரிலேஷன்ஷிப். எனக்குத் தேவைக்கு ஸ்பான்சர்...’’-இது,சுகர் பேபி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த கல்லூரி மற்றும் இளம் பெண்களின் வார்த்தைகள்.  இது கற்பனைக் கதையல்ல. டிஜிட்டல் உலகம் உண்மையாக விரிந்தபோது, உறவுகளும் பரிணாமம் அடைந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது தனிமனிதர்களுக்கு தங்கள் வசதிக்கேற்ப ஃபிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் துவங்கி, பெஞ்சிங், ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட்... எனப் பல பெயர்களில் உறவு கொள்கின்றனர். அதில் சமீபகாலத்தில் அதிகம் பேசப்படும் வார்த்தை ‘சுகர் பேபி’.
யார் இந்த சுகர் பேபி?
சுருக்கமாகச் சொன்னால், இளம் வயதுடைய ஆண் அல்லது பெண் ஒருவர், அவரைவிட வயதிலும் பணத்திலும் மேன்மை வாய்ந்த நபரிடமிருந்து (அவர்கள் ‘சுகர் டாடி’ அல்லது ‘சுகர் மம்மி’) பொருளாதார ஆதரவு பெறுகிறார்கள்.
அதற்குப் பதிலாக அவர்கள் டேட்டிங், சாட்டிங், மீட்டிங், மேட்டிங் வரை கம்பெனி கொடுப்பர். ஆனால், அத்தனையும் மிதமான ஒப்பந்தத்துடன் நிகழும். அதாவது ‘உன்னை நான் எந்த வகையிலும் இடையூறு செய்ய மாட்டேன். அதேபோல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உன் தலையீடு இருக்கக் கூடாது’ உள்ளிட்ட அனைத்தும் இதில் பேசி நிகழும். அப்படி இவர்கள் என்ன பெறுகிறார்கள்?
மாதம் ஒரு நிரந்தர ஊதியம் போல் பணம். புதிதாக லேப்டாப், கைபேசி, மேக்கப் கிட்டுகள், டிரெஸ்கள், சில சமயங்களில் வீட்டு வாடகை, கல்லூரிக் கட்டணம், மிகப் பெரியதாக, ‘லூசானா ஹாலிடே’ மாதிரியான வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்!இவை எல்லாம் ஒரு சாதாரண காதல் உறவிலேயே கிடைக்குமே எனச் சிலர் கேட்கலாம்.
ஆனால், உடன் எதிர்கால கமிட்மெண்ட், திருமணத் திட்டங்கள், இவைகளும் சேர்ந்தே வருமே... ‘சுகர் ரிலேஷன்ஷிப்’பில் அந்தப் பிரச்னைகள கிடையாது. அனைத்தும் முன்கூட்டியே பேச்சு வார்த்தை போட்டு தீர்மானிக்கப்படும். ஒருவருக்கொருவர் அவரவர் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டார்கள். தேவையற்ற சந்தேகங்கள், சண்டைகள் கிடையாது. ‘உனக்குத் தேவைப்பட்டதை நான் தருகிறேன், எனக்குத் தேவைப்பட்டதை நீ கொடு’ அவ்வளவுதான் இங்கே ஒப்பந்தம். எந்த வயதினர் ‘சுகர் டாடி’, ‘சுகர் மம்மி’?
40 வயதுக்கு மேல் உள்ள பணக்காரத் தொழிலதிபர்கள் அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் நபர்கள், அரசியல்வாதிகள் தங்களது தனிமையைப் போக்க அல்லது இளமை உறவின் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்பும் மனநிலையோடு இருப்பவர்களே சுகர் டாடி, சுகர் மம்மி. இவர்களின் இளமைக் காலம் முழுக்க பணம் சம்பாதிப்பதிலேயே போயிருக்கும்.
காதல் வாழ்க்கை இவையெல்லாம் இல்லாமல் வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கிட்டத்தட்ட சமூகத்துக்காக மட்டுமே குடும்ப வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் ரகசியமாக தங்களைவிட வயதில் அதிகம் குறைந்த இளமையானவர்களுடன் உறவில் இருப்பர். பெரும்பாலும் இந்த உறவுகள் டேட்டிங் செயலிகளில், பப் போன்ற இடங்களில் உருவாகும்.
ஒருசில வகையில் இதற்கென தனி குழுக்களே உள்ளன. அதாவது ‘உன்னிடம் இருக்கும் சுகர் பேபிகளை எனக்குக் கொடு, உனக்கு என்னிடம் இருப்பவர்கள் வருவார்கள்’ பாணியும் நிகழ்கிறது.
இது உறவா, வணிகமா?
ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் இந்திய கலாசார விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த உறவு மிகப்பெரிய வில்லன்தான். காதலாக இல்லாமல் பரஸ்பர நலனுக்காக ஏற்படும் உறவுகள், உறவுகள்தானா? அல்லது ஒரு வணிக ஒப்பந்தமா? இதில் எப்படி உண்மை இருக்கும்? யாரும் யாருடனும் இருக்கலாம் என்கிற நிலை உருவாகுமே போன்ற சர்ச்சைகளும் உள்ளன.
இது காதலல்ல; ஆனால், இருவரும் உறுதியாக ஒப்புக்கொண்ட உறவு. இது திருமணம் அல்ல; ஆனால், திருமணத்தில் கூட நிறைவேறாத உடல் தேவை இங்கே நிறைவேறும். திருமணத்தில் உள்ள சங்கடங்கள், பொறுப்புகள் இங்கே கிடையாது.
இது போதுமான சுதந்திரம் தரும் உறவு; ஆனால், மகனே / மகளே நீ ஒரு நாள் மாட்டுவடா / டி பாணி உறவுதான். எப்போதும் இருட்டில் வாழும் நிலை, வெளிப்படையான செயல்
முறைகள் இருக்காது. அனைத்தும் ரகசியம்தான்.மிக அதிகமான ஆபத்துகள் இதில் உள்ளன என்கிறார்கள்.
ஏனெனில் உண்மையான காதல் இல்லாத நிலையில் எமோஷனல் சப்போர்ட் இதில் கிடைப்பது அரிது.சமூக விமர்சனம், தவறான பார்வை, தவறான புரிதல்கள் இவை மற்றவர்களிடம் வரும். ஒருவேளை சுகர் டாடி, மம்மி மிகப்பெரிய புள்ளி எனில் இன்னும் கவனம் தேவை. காரணம், எந்நேரமும் தலைக்கு மேல் கத்தி நிலைதான். அதிலும் இதில் அதிக பாதிப்பு பெண் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சமூகத்தில் சுகர் மம்மிகளுடன் உறவில் இருக்கும் ஆண் அந்த மம்மிகளை வெறும் பணமாகவே பார்ப்பர்.
ஆய்வுகள் தரும் முடிவுகள் என்ன ?
அமெரிக்காவின் பிரபல ஆய்வுக்குழுவான psypost.org நடத்திய ஆய்வில், அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து 77 நபர்கள் (45 பெண்கள், 31 ஆண்கள் மற்றும் ஒரு நான்பைனரி நபர்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சமீபத்திய அல்லது நடப்பு சுகர் டேட்டிங் உறவில் இருப்பவர்கள். பங்கேற்பாளர்களின் வயது, பாலினம், கல்வி மற்றும் வேலை நிலை போன்ற விவரங்கள் இதில் சேகரிக்கப்பட்டன. மேலும், உறவுகளில் அதிகார சமநிலை, பாலினக் கோட்பாடுகள் மற்றும் சமூக அவமதிப்பு போன்ற அம்சங்களை மதிப்பீடு செய்துள்ளனர். இந்த ஆய்வில், சுகர் பேபிகள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் நபர்கள் இடையே குறிப்பிடத்தக்க வயது வேறுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. பங்கேற்றவர்களின் வயது 18 முதல் 74 வரை. சராசரியாக, சுகர் டாடிகள், மம்மிகளை விட சுகர் பேபிகள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் துவங்கி அதிகமாக 30 வருடங்கள் வயது வித்தியாசப்படுவதாக ஆராய்ச்சி சொல்கிறது.
அரிதாக 40+ வருடங்களும் இருக்கின்றன. ‘சுகர் சன் / டாட்டர்’களின் சராசரி வயது 28.76 ஆகவும், அதே சமயம் சராசரி சுகர் டாடி / மம்மிகளின் வயது 48.15 ஆகவும் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. சுகர் பேபிகள் தங்கள் வாழ்நாளில் சுமார் நான்கு சுகர் டேட்டிங் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பெரிய வருமானம், ஸ்பான்சர், பந்தாவான வாழ்க்கை இதில் உண்டு. மட்டுமல்ல; ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் கணிசமானவர்கள் ஒரே சமயத்தில் நால்வருடன் உறவில் இருக்கிறார்களாம்.
போலவே சுகர் டாடிகளில் சிலர் ஒரேசமயத்தில் அதிகமாக இரண்டு சுகர் பேபிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், சுகர் மம்மிகளின் பாடுதான் இதில் பெரும்பாலும் திண்டாட்டமாம். பெரும்பாலான பெண்கள் உணர்வு ரீதியாக தங்களது சுகர் சன்களுடன் உறவை மேற்கொள்கிறார்கள்.
ஆனால், சுகர் சன் அந்த உறவை வெறும் வணிகமாகவே பார்க்கிறார். இந்நிலையில் மன நிம்மதிக்காக உறவை ஏற்கும் சுகர் மம்மிகள் பெரும்பாலும் இந்த உறவாலேயே மன அழுத்தத்திற்கும் செல்கிறார்கள். ஒருகட்டத்தில் சுகர் சன் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கையில் சுகர் மம்மிகளுடனான உறவு பிரச்னைக்குரிய சூழலாக மாறிவிடுகிறது.
இந்த சுகர் ரிலேஷன்ஷிப்பில் உறவு முறிவு, தோல்வி என்றால் நண்பர்களிடம் சொல்லி அழுது ஆறுதல் கூட பெற முடியாத சமூக சிக்கல் இருப்பதால் மனதுக்குள்ளேயே புழுங்கி, அழுத்தமாகி நிம்மதி இழக்கும் நிலையும் ஏற்படும். இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் திருமணம், உறவு இவை எல்லாம் புனிதமாக பார்க்கப்படுவதால் சுகர் உறவுகள் கள்ளக்காதலாக மட்டுமே கருதப்படுகின்றன. எனவே துரோகம் என நினைத்து உயிர்ச் சேதம் வரை கூட நிகழ்கிறது.
போலவே இதில் பெரும் பணம் இருப்பதால் ஒரு சுகர் பேபி இன்னொரு சுகர் பேபி வருவதை விரும்பாத சூழலும் இருக்கும். பழிக்குப் பழி என்பது இங்கே பணத்துடன் நிகழும் என்பதால் சுகர் உறவு இருமுனை கொண்ட கத்திதான் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்.
ஷாலினி நியூட்டன்
|