அழியப் போகிறதா இந்திய மிடில் க்ளாஸ்?
ஆம். அப்படித்தான் பொருளாதார ஆய்வாளர்களும் மேலாண்மை வித்தகர்களும் சொல்கிறார்கள். இந்தியாவின் நடுத்தர வர்க்கக் கதை முடிவுக்கு வரப்போகிறது. இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளதுதான் இதற்குக் காரணம்.  யெஸ். மாத சம்பளத்தை வைத்து பட்ஜெட்டில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.  என்ன சொல்கிறார்?
அடுத்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நடக்கப் போகின்றன. சம்பளத்தை அடிப்படையாக வைத்து - அதாவது மாத வருமானத்தைக் கொண்டு வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படப் போகிறார்கள். படிப்பு, கடின உழைப்பு, மாத பட்ஜெட்டை மட்டும் நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். எனவே மிடில் க்ளாஸ் மக்களின் எண்ணிக்கை குறையும் அல்லது அழியும்.

முந்தைய தலைமுறையினர் ஒரு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி அதன்பின் ஓய்வுபெற்றார்கள். இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பிய அந்த பழைய முறை இனி தொடராது.
ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து, சம்பள உயர்வை குறிவைத்து பணியாற்றி, வரும் வருமானத்தில் சிலவற்றை சேமித்து வாழ்க்கை நடத்தும் காலம் இனி இருக்காது. இப்படிப்பட்ட எண்ணப்போக்குள்ள பிரிவினர் வெகுவாக குறைவார்கள். முக்கியமாக கடின உழைப்பாளிகள் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக ஒயிட் காலர் தொழிலாளர்கள் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவற்றை இப்போது AI செய்கின்றன; செய்ய ஆரம்பித்துள்ளன. கூகுள் அதன் கோடிங்கில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே AI மூலம் செய்யப்படுவதாக இப்பொழுதே சொல்கிறது. இது இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையையே மாற்றப் போகிறது. இந்த துறையை நம்பி இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட ப் போகிறார்கள்.
எனவே இனி தொழில் தொடங்குவதுதான் எதிர்காலம். பலரும் அதை நோக்கி நகருவார்கள். இதனால் ஏழைகள் - பணக்காரர்கள் இடையே வேறுபாடு அதிகரிக்கும். ஒன்று ஏழைகள் அதிகம் இருப்பார்கள். இல்லை பணக்காரர்கள் அதிகம் இருப்பார்கள். இரண்டுக்கும் நடுவில் மிடில் கிளாஸ் என்ற இனம் இருக்காது... எனறு எச்சரிக்கிறார் சவுரப் முகர்ஜி.
முன்பு கணினி வந்தபோது இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டன. கணினி மூலம் பலர் வேலை இழக்கப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இக்கூற்றுக்கு மாறாக கணினி மூலம் பலர் வேலை பெற்றனர். ஐடி துறை உட்பட பல துறைகள் தொடங்கப்பட்டன. அதேபோல் ஏஐ பார்த்து நாம் அச்சப்பட்டாலும் இது மிடில் கிளாசுக்கு எதிராக இருந்தாலும் இதுவும் பல துறைகளை உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளன என சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
அதேநேரம் பொருளாதாரமே சரியும்... சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ‘ரிச் டாட் புவர் டாட்’ புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்கப் போவதாக முன்பு எச்சரித்ததை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறார்கள்.
2025ம் ஆண்டு உலக வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சி நடைபெறும் என கணித்திருந்தார். முதலீட்டாளர்களை எச்சரித்த அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பும் இதுதான் என்றும் அவர் கூறினார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைக்கிறார்கள்.
இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்கப் போகிறது என்று ராபர்ட் கியோசாகி எச்சரித்தது போலவே இந்த ஆண்டு தொடக்கத்தில் - குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டாரிஃப் கொள்கையால் அனைத்து நாடுகளின் பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. போலவே ராபர்ட் கியோசாகி குறிப்பிட்டதைப் போல் தங்கம், வெள்ளியில் செய்யப்படும் முதலீடுகள் எவ்வித சேதாரமும் இன்றி சக்கைப்போடு போட்டு வருகின்றன.
இதையெல்லாம் வைத்துதான் இனிவரும் காலங்களில் இந்தியாவில் மிடில் கிளாஸ் என்ற பிரிவினரே இருக்க மாட்டார்கள்... அப்படி இருப்பவர்கள் ஒன்று ஏழைகளாவார்கள் அல்லது பணக்காரர்களாவார்கள் என்கிறார்கள்.என்னமா பீதியைக் கிளப்பறாங்க!
என்.ஆனந்தி
|