நடிகர்களின் கோயில் உலா!



கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அப்படி எல்லோரும் கோயில்களுக்குச் செல்கிறார்கள். ஆனால், நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோயில்களுக்குச் செல்லும்போது அது பெரும் பேசுபொருளாக மாறும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
சினிமாவில் பணம், புகழ், செல்வாக்கு கிடைத்த பிறகு இவர்கள் மறக்காமல் செல்லும் இடம் ஆலயம். படத்தின் வெற்றிக்கான வேண்டுதல், நேர்த்திக்கடன் என ஆதாயத்துக்காக செல்கிறவர்களாக இல்லாமல் இறைவன் மீது பக்தி கொண்டவர்களாக பலமுறை தங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பொதுவெளியில் எது நடந்தாலும் அது டிரெண்ட்டாகி வரும் சூழ்நிலையில் நடிகர், நடிகைகளின் சாமி தரிசனம் எனும்போது அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனம் பெறுகிறது.

நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீகப் பயணங்களுக்குப் புகழ்பெற்றவர். வட இந்தியாவிலுள்ள இமயமலை பாபாஜி குகை, பத்ரிநாத், கேதார்நாத், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீராகவேந்திரர், கொல்லூர் முகாம்பிகை ஆகியன ரஜினிகாந்த்தின் பயணத்தால் அறியப்பட்டவை என்று சொன்னால் மிகையாகாது.ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் சூப்பர்ஸ்டார் என்று அவரை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மன அமைதிக்காக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டவர்; மேற்கொள்பவர்.

எப்படியிருந்தாலும் தமிழின் முன்னணி நாயகனாக விளங்கும் ரஜினிகாந்த்தும் ஆன்மீகமும் பின்னிப்பிணைந்தது என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், உலகநாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசனின் ஆன்மீகம் முற்றிலும் வேறானது. 

தன்னைப் பகுத்தறிவாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர், செய்யும் தொழிலே தெய்வம் என்கிற கொள்கை கொண்டவர். மற்றவர்கள் கோயில்களுக்குப் போவார்கள். இவரோ திரைத்துறையில் அறிமுகமாகும் புதுமைகளைத் தேடி உலகம் முழுக்கப் பயணித்துக் கொண்டேயிருக்கிறார்.

இந்த வயதிலும் ஏஐ தொழில்நுட்பம் கற்கிறேன் என்று அமெரிக்கா போய் ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தங்கியிருந்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.தமிழின் முன்னணி நடிகரான விஜய், தன் படங்கள் வெளியாகும் நாளுக்கு முந்தைய நாள் வேளாங்கண்ணி சென்று பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். 

பெரும் புகழ்பெற்று ரசிகர்கள் கூட்டம் அதிகரித்த பிறகு அந்தப் பயணங்கள் ரகசியமாக்கப்பட்டன. பின்னாட்களில் அவர் சார்பாக அவர் தந்தை, தாய் உள்ளிட்ட யாராவது அந்த பிரார்த்தனைப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னொரு முன்னணி நடிகரான அஜீத்தின் பக்தியும் அது தொடர்பான பயணங்களும் வெளிப்படையானவை. ஆனால், அவர் கோயில்களுக்குச் செல்வதைக் காட்டிலும் அவருடைய படங்களின் பெயர்கள், அந்தப் பெயர்களின் முதலெழுத்து மற்றும் எழுத்துகளின் எண்ணிக்கை, படங்கள் தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகள், பாடல்கள், டிரெய்லர், படம் ரிலீஸாகும் வியாழக்கிழமை என்ற ஆன்மீக நாள், படத்தின் முதல் காட்சி வெளியாகும் நேரத்தின் எண் தனக்கு ராசியான எண்ணாக இருப்பதாகப் பார்த்துக் கொள்வது... ஆகியனவற்றில் வெளிப்படையாகவே இது வெளிப்படுகிறது.

அவர் சாய்பாபாவின் தீவிர பக்தர் என்பதால் இந்த வியாழக்கிழமை சென்டிமென்ட் என்பது உலகத்துக்கே தெரிந்த ரகசியம்.நடிகர் சூர்யா, பக்தி என்பதும் ஆன்மீகம் என்பதும் அடுத்தவர்களுக்கு உதவுவது என்கிற எண்ணம் கொண்டவர். அதனால் அவருடைய அகரம் அமைப்பு அதன்மூலம் நடக்கும் நற்செயல்கள் ஆகியன உலகறிந்தவை.

அவருடைய ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டின்போது, அவர் மனைவி ஜோதிகா மதம் சார்ந்து கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அதற்கு முன்பாக ஒரு நிகழ்வில் அவர் கோயில் உண்டியல்களில் காசு போடுவதற்குப் பதிலாக மருத்துவமனைகளை மேம்படுத்த உதவுங்கள் என்று சொன்னதே இந்த சர்ச்சைக்குக் காரணம்.

அதன்விளைவு, அந்தப் பட வெளியீட்டுக்குப் பின் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில்களுக்கு சூர்யா-ஜோதிகா ஆகிய இருவரும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்ட நிகழ்வுகள் பெரிதாகப் பேசப்பட்டன.

அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் புகழ்பெற்ற மகாலட்சுமி கோயில், அசாமில் புகழ்பெற்ற காமாக்யா கோயிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு ஜோதிகா தனது நெற்றியில் குங்குமப் பொட்டுடன், கழுத்தில் மாலை அணிந்து கோயிலின் கொடிக் கம்பத்தில் மணி ஒன்றைக் கட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மற்றொரு புகைப்படத்தில், அவர் நெய் விளக்கேற்றுகையில் சூர்யா அருகில் நிற்கிறார். மேலும், கோயிலின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜோதிகா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.இத்தனைக்கும் சூர்யா கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர் இல்லை. அவர் எல்லாக் கோயில்களுக்கும் செல்லக்கூடியவர்தான். தமிழ்ப் பண்பாட்டு மரபின் தொடர்ச்சியான குலதெய்வ வழிபாடு உள்ளிட்டு அவருடைய பக்திப் பயணங்கள் அவ்வப்போது நடக்கும்.

ஆனால், ‘கங்குவா’ படத்துக்குப் பின்னர் அவருடைய பக்திப் பயணங்கள் பெரிய செய்திகளாகின்றன. அவை திட்டமிட்டு செய்திகளாக்கப் படுகின்றன என்று சொல்வோரும் உண்டு.

நடிகர்கள் தவிர நயன்தாரா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகள் அம்மன் வேடமேற்கும் போது, விரதம் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை அறிவித்துவிட்டே செய்கிறார்கள். அவற்றில் அவர்களின் பக்தி மட்டுமின்றி படங்களுக்கான பிரார்த்தனையும் அடக்கம் என்றும் சொல்கிறார்கள்.

அண்மையில், நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்றது ஊடகங்களில் செய்தியாக வெளியானது. ஏற்கெனவே மலையாள நடிகர் ஜெயராமுடன் ரவிமோகன் அந்தக் கோயிலுக்குச் சென்று வந்திருக்கிறார். அப்போது அது வெளியில் தெரியவில்லை. இப்போது கார்த்தியையும் அழைத்துக் கொண்டு அவர் சென்றது எல்லோருக்கும் தெரியும்படி நடந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நடிகை சிநேகா தன் கணவர் பிரசன்னாவுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்தார். அப்போது அங்கிருந்த திருநங்கைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது நினைவிருக்கலாம். ‘கே.ஜி.எப்.’ படத்தின் வழியாக தமிழ்நாட்டிலும் புகழ் பெற்ற கன்னட நடிகர் யாஷின் அண்மைச் செய்தி அவருடைய ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.

பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இராமாயணக் கதை திரைப்படமாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் அந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக, யாஷ் நடிக்கிறார். அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. ராவணனாக யாஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

அதற்கு முன்னதாக உஜ்ஜைனியில் உள்ள மஹாகாளேஸ்வர் கோயிலில் நடிகர் யாஷ், சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி
வருகிறது.வழிபாட்டுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிவபெருமானின் ஆசி வேண்டும் என்பதால் இந்தக் கோயிலுக்கு வந்தேன். நான் தீவிர சிவபக்தன். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நலத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன்...” என்றார்.

அவருடைய இந்தப் பேட்டியில் அவர் சிவபக்தர் என்பதை அனைவருக்கும் அறிவித்திருக்கிறார்.‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது‘ரெட்ரோ’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் வெற்றிக்காக குடும்பம் சகிதமாக அவர் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்துள்ள புகைப்படங்கள் வைராகியுள்ளன.

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் சமந்தா எப்போதும் சமூக தளங்களில்  தொடர்பு எல்லைக்குள் இருப்பவர். அந்த வகையில் நடிப்பு, படத் தயாரிப்பு என பிசி ஷெட்யூலுக்கு நடுவே தன் தோழிகளுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததோடு அங்கிருந்தவர்களுடன் இன்முகத்துடன் புகைப்படமும் எடுத்து பக்திப் பரவச
மடைந்துள்ளார்.

பெரும் பணம் புழங்கும் தொழில் என்பதோடு வெற்றி தோல்விகளுக்கு எவ்வித அளவுகோல்களும் இல்லாத கலைப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட தொழில் திரைப்படத் தொழில்.எவ்வளவு நம்பிக்கையாக ஒருவர் இறங்கினாலும் இதில் செய்யப்படும் அளவுக்கதிகமான முதலீடுகள் சம்பந்தப்பட்ட அனைவரையும் அச்சத்துக்கு ஆளாக்குகிறது.

அந்த அச்சத்திலிருந்து முதலில் தாங்கள் மீளவும் அதைத் தொடர்ந்து அதில் பங்காற்றும் அனைவருக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக திரைப்பட நடிகர்களின் ஆன்மீகம் அமைந்திருக்கின்றன என்கிற விமர்சனங்கள் உண்டென்றாலும் அவற்றைத் தாண்டி முன்னணி நடிகர்களின் பக்திப் பயணங்கள் சமுதாயத்தை நல்வழிப்படுத்த பயன்படுகின்றன என்கிற ஆதரவுக் குரல்களும் உண்டு.

எஸ்.ராஜா