Must Watch
 சோரி 2
நான்கு வருடங்களுக்கு முன்பு ‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, நல்ல விமர்சனங்களைப் பெற்றது, ‘சோரி’ எனும் இந்திப்படம். இதன் அடுத்த பாகம் தான், ‘சோரி 2’. இந்தப் படமும் ‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகியிருக்கிறது. பாதாளத்தில் வாழும் பழங்குடிகளால் ஏழு வயதான இசானி கடத்தப்படுகிறாள்.
எப்படியாவது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று உயிரையும் பணயம் வைக்க தயாராக இருக்கிறாள் அம்மா, சாக்ஷி. அதுவும் மூன்று நாட்களுக்குள் இசானியைக் காப்பாற்றிவிட வேண்டும். இல்லையென்றால் அவள் நரபலி கொடுக்கப்பட்டுவிடுவாள்.
இசானியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பல சவால்களையும், தீய சக்திகளையும் சாக்ஷி எதிர்கொள்ள வேண்டும். அந்த ஆபத்துகளிலிருந்து மீள வேண்டும். சாக்ஷி தனது மகளைக் காப்பாற்றினாளா என்பதை திகிலாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
திகில் படங்களை ரசிப்பவர்களுக்கு நல்ல விருந்து படைத்திருக்கிறது இந்தப் படம். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சுவாரஸ்யத்தை தக்க வைத்திருப்பது திரைக்கதையின் சிறப்பு. படத்தின் இயக்குநர் விஷால் ஃப்யூரியா. மச்சான்டே மலாகா
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளி வரும் மலையாளப் படம், ‘மச்சான்டே மலாகா’. எல்லோருடனும் ஜாலியாக பழகக்கூடியவர், சஜீவன். கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். தனது சகோதரி, மச்சான் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் மிக நெருக்கமாக இருக்கிறார். இந்நிலையில் பிஜிமோல் என்ற பயணியுடன் சிறு மோதல் ஏற்படுகிறது. நாளடைவில் அந்த மோதல் காதலாக மாறுகிறது.
பிஜிமோலின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்கிறார் சஜீவன். ஆனால், பிஜிமோலின் அம்மாவான குஞ்சுமோல் கொஞ்சம் அதிகார தோரணை கொண்டவர். எல்லோரையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று நினைப்பவர். வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் சஜீவனுக்குத் தனது பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்க முன்வருகிறார் குஞ்சுமோல்.
வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க சஜீவன் சம்மதித்தாரா? அதற்குப் பிறகு நடந்தது என்ன என்பதே மீதிக்கதை.ஓர் எளிமையான விஷயத்தை எடுத்துக்கொண்டு, நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைத்திருப்பது படத்தை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது. குடும்பத்துடன் கண்டுகளிக்க ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர், போபன் சாமுவேல்.
ஐஹாஸ்டேஜ்
‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் டச்சு மொழிப்படம் ‘ஐஹாஸ்டேஜ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. 2022ம் வருடத்தின் பிபரவரி மாதத்தில் ஒரு மாலை வேளை. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்குள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஓர் இளைஞன் நுழைகிறான்.
கடைக்குள் இருக்கும் ஒரு வாடிக்கையாளரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு, மில்லியன் கணக்கில் பிட்காயினையும், பாதுகாப்பாக தப்பிப்பதற்கான வழிவகையையும் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். கடைக்குள் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்காக ஆங்காங்கே ஒளிந்து கொள்கின்றனர். இந்தச் சம்பவம் ஆம்ஸ்டர்டாம் முழுவதும் தீயாகப் பரவுகிறது. ஆப்பிள் ஸ்டோரைச் சுற்றிலும் காவல்துறை முற்றுகை இடுகிறது. ஆப்பிள் ஸ்டோரை கொள்ளை அடிக்க வந்த கொள்ளையன் மாட்டிக்கொண்டானா அல்லது அவனது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு தப்பித்தானா என்பதே இப்படத்தின் திரைக்கதை.
உண்மையில் நடந்த நிகழ்வை அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாபி போயர்மேன்ஸ். ஆப்பிள் ஸ்டோருக்கு அருகில்தான் பாபியின் வீடு இருக்கிறது. அந்தச் சம்பவம் நடந்தபோது கடைக்கு அருகில்தான் பாபி இருந்திருக்கிறார். அப்போது நிலவிய பதற்றத்தைத்தான் படமாக்கியிருக்கிறார்.
கோர்ட் - ஸ்டேட் Vs ஏ நோபடி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த தெலுங்குப்படம், ‘கோர்ட் - ஸ்டேட் Vs நோபடி’. இப்போது தமிழ் டப்பிங்கில் ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது.
ஜூனியர் வழக்கறிஞராக இருக்கிறார், சூர்யா.
தனியாக நின்று ஒரு பெரிய வழக்கை ஜெயித்து, தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், சந்து. அவனுக்கு 17 வயதான ஜாபில்லியின் அறிமுகம் கிடைக்கிறது. ஜாபில்லி நல்ல வசதி படைத்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள். விரைவில் இருவருக்குமிடையில் காதல் மலர்கிறது. ஜாபில்லியின் மாமாவுக்குக் குடும்ப கௌரவம்தான் முக்கியம். அதற்காக எதையும் செய்யக் கூடியவர். சந்துவுக்கும், ஜாபில்லிக்கும் இடையிலான காதல் அவருக்குத் தெரிய வருகிறது. சந்துவின் மீது போக்ஸோவழக்குத் தொடுக்கப்பட, அந்த வழக்கு சூர்யாவுக்கு வர சூடுபிடிக்கிறது திரைக்கதை.எப்படியெல்லாம் தவறான வழிகளில் போக்ஸோ வழக்கு பயன்படுத்தப்படலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இந்தப் படம். இதன் இயக்குநர் ராம் ஜெகதீஷ்.
தொகுப்பு:த.சக்திேவல்
|