சிறுகதை - சர்ப்ரைஸ்
சேக்கிழார் வீதி வழியாக இரண்டு பேர், இரு வழிகளில் இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றினர். ஐந்து நிமிடத்தில் ஐந்து முறை சென்றிருப்பர். கடைசியாக கார்த்திக் வீட்டிற்கு எதிரில் நின்றனர்.
வாசலில் கார் கழுவிக் கொண்டிருந்த கார்த்திக் இதைக் கவனித்தான்.  ‘பாவம் யாரோ வழி தெரியாமல் சுற்றுகிறார்கள். யார் வீட்டைத் தேடுகிறார்கள் என்று கேட்டால்தானே பதில் சொல்ல முடியும்? திமிராகச் சுற்றினால் சுற்றட்டுமே! இவர்களோடு பேச வேண்டுமென்றால் ஓடும் எஃப்.எம்.ஐ ஆஃப் செய்ய வேண்டும். நல்ல பாட்டு ஓடுகிறது. ஓடட்டும்’ என்று கூடவே பாடிக்கொண்டு கார் கழுவினான் கார்த்திக். சனி ஞாயிறு விடுமுறைக்கு கார் ஏற்காடு போகப் போகிறது. மனைவி சுதா இங்கே போக வேண்டும் அங்கே போக வேண்டும் என்று கேட்க மாட்டாள். ஆனால், மகள் நைனி அப்படி அல்ல. எப்போதும் ஊர் சுற்ற நினைப்பாள். ‘‘நான் எத்தனை வருஷமா ஏற்காடு கேட்கிறேன். மூனு பேருக்கும் கொரானா வந்ததே அப்பவே மர்கயா ஆயிருந்தாக்கூட ஆவியா ஏற்காட்டை சுத்திப் பார்த்திருப்போம். இதுவரைக்கும் அழைச்சுட்டு போகல...” என்று சொன்ன பிறகு கார்த்திக்கால் அதற்கு மேல் பயணத்தை தள்ளிப்போட முடியவில்லை.
இருவரும் மாலை வரட்டும், சப்ரைஸாக சொல்லிக்கொள்ளலாம் என ஆயத்த வேலையில் ஈடுபட்டிருந்தான் கார்த்திக். இரண்டு நாளைக்குத் தேவையான ஸ்நாக்ஸ், தண்ணீர் கேன் எல்லாம் வாங்கி வைத்துவிட்டான். பயணத்திற்குத் தயாராகத்தான் இன்று விடுப்பெடுத்தான். சுதா காலையில் ‘‘நீங்க வேலைக்குப் போகலையா? சொல்லியிருந்தால் சாப்பாடு கட்டியிருக்க மாட்டேன்ல?’’ என்று திட்டினாள்.
நைனி சர்ப்ரைஸ் விரும்பி! ஒரு சந்தோசத்தை சர்ப்ரைஸாக சொல்லும் போது அது இரட்டிப்பாகும். இத்தனை வருடமாகத் தள்ளிப்போட்ட திட்டத்திற்கு இந்த அளவிற்காவது திடீரென சொன்னால்தான் மகிழ்வாள். அதற்காக சுதாவிடம் பொய் சொன்னான்.‘‘பர்மிஷன் போட்ருக்கேன். நகராட்சி போய் கரண்ட் பில் கட்டணும்...’’ ‘‘என்னது?’’‘‘ஸாரி! வீட்டு வரி, தண்ணி வரி கட்டணும். பதினொரு மணிக்கு ஆஃபீஸ் போயிடுவேன்...’’ என்று சொன்னான்.சுதா புறப்பட்டாள்.
கார்த்திக் செய்த வாட்டர் சர்வீஸில் கார் பளபளவென மின்னியது. காலையிலிருந்து செய்த அதிகப்படியான வேலையால் நன்றாகப் பசித்தது. அவனுக்காகக் கட்டி வைத்த சாப்பாட்டைத் திறந்தான். வெண்டைக்காய் மோர் குழம்பும், சேனைக்கிழங்கு வறுவலும் வைத்திருந்தாள்.
இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டுக்கொண்டு வந்து சாப்பிட்டான். வயிறு நிறையவும் செய்த வேலையின் அசதி படுக்கச் சொன்னது. ஓடிக்கொண்டிருந்த எஃப்.எம். தாலாட்டுப் பாடியது. இரண்டு நாட்களுக்கு கார் ஓட்டும் வேலை இருப்பதால் நேரம் கிடைக்கும்போது தூங்கிக்கொள்வோம் என்று தூங்கிவிட்டான் கார்த்திக்.
நோட்டமிட்ட இரண்டு வண்டியர்களில் ஒருவன் சுவரேறிக் குதித்தான். கார்த்திக் வீட்டின் மதில் சுவர் உயரம் அதிகம். பக்கத்து வீட்டின் சுவர் உயரம் அதில் பாதிதான்.
அது என்ன தொழில் தர்மமோ? சின்ன சுவரை எளிதாகத் தாண்டாமல் பெரிய ரிஸ்க் எடுத்து இந்த பெரிய சுவரில்ஏறி க் குதித்து பக்கத்து வீட்டிற்குச் சென்றான்.
அதுதான் ஆளில்லாத வீடு. பின் கதவை உடைத்தான். கதவிற்கு முன் இரும்பு கேட்டும் போடப்பட்டிருந்ததால் அவ்வளவு எளிதாக உடைக்க முடியாது எனப் புரிந்தது. ஒரே ஜம்ப்பில் சுவரைத் தாண்டி மீண்டும் கார்த்திக் வீட்டிற்கே வந்தான். கார்த்திக்கின் அம்மா, அப்பா, உறவினர்கள் வந்தால் தங்குவதற்காக வீட்டின் பின்புறம் தனியாக ஓர் அறை போட்டிருந்தான். திருட வந்தவனுக்கு ஏடிஎம் சென்டர் போல் தெரிந்திருக்கிறது. வெறுங்கையோடு போக விருப்பமில்லை. அந்த வீட்டை உடைப்பதற்குத் தயாரானான். எஃப்.எம். ஓடுகிறது. வீட்டில் ஆள் இருக்கிறான். பூட்டை உடைத்தால் சத்தம் கேட்கும். என்ன செய்வது என்று திருடனுக்குப் புரியவில்லை.
சந்து வழியாகச் சென்று ஜன்னலில் எட்டிப்பார்த்தான். கார் கழுவிய அசதியில் கார்த்திக் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். அருமையான சந்தர்ப்பம் என்று தொழில் பர
பரக்க மீண்டும் தோட்டத்திற்கு வந்தான். மர பேட்டை எடுத்து பூட்டை உடைத்தான். அந்த பேட்டால்தான் மிதியடிகளை துவைப்பாள் சுதா.
அகமதாபாத்திலிருந்து சொந்த ஊருக்கு வாழ திரும்பியவர்கள் சுதாவிற்கு பேட்டிங் செய்து துணி துவைக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டனர். அது திருடனுக்கு பூட்டை அடித்து உடைக்கப் பயன்படும் என்று தெரிந்திருந்தால் பழகாமல் இருந்திருப்பாள்.
அவுட் ஆகாமல் எத்தனை ஓவர் அடித்தானோ? கட்டை தனியாகவும் பிடி தனியாகவும் கழண்டு விழுந்த போது பூட்டும் பறந்துகொண்டு பௌண்டரி ஓடியது.கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவனுக்கு வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு ரன் எடுக்கத் தோன்றவில்லை. வேறு எதையோ தேடினான்.
இன்னொரு கதவைத் திறந்து அந்த அறையையும் சோதிக்க நினைத்தான். மரக்கட்டை இருந்த இடத்தில் உடைக்கும் உபகரணத்தைத் தேடினான்.
வழக்கம்போல் சுதாதான் அதற்கும் ஆயுதம் சப்ளை செய்தாள். வீட்டிற்குள் தலை சீவினால் முடி கொட்டும் என்று அந்த இடத்தில் நின்றுதான் சீவுவாள். முந்தைய நாள் பூ சொருகிய ஹேர்பின்னை அங்கே கழற்றி வைப்பாள். உள்ளே சென்று பூ வைக்கும்போது திரும்ப வந்து இதை எடுக்க மாட்டாள். புதிதாக வேறொன்றை எடுத்துக் குத்திக்கொள்வாள்.
பாத்ரூம் கதவில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி வைப்பதைப் போல் அங்கு ஹேர் பின்களாக இருந்தன. அதில் பத்தைக் கொண்டுபோய் அந்த சாவித் துவாரத்தில் போட்டான். அதற்கு மேல் போட இடமில்லை என்று தெரிந்த பிறகு திறந்தான். திறந்துகொண்டது. ஏனெனில் அதைக் கட்டியதிலிருந்து அறையைப் பூட்டும் வழக்கம் அவர்களுக்குக் கிடையாது. கேட்டை மட்டும்தான் பூட்டுவார்கள்.
வெற்றிகரமாக கதவைத் திறந்தவனுக்கு முதலில் கண்ணில் பட்டது அண்டாதான். சுதாவிற்கு 14 கிலோவில் கட்டிய பலகார அண்டா அது. வீட்டிற்குள் இடத்தை அடைத்த தேவையில்லாத பொருட்களை அண்டாவில் நிரப்பி அந்த அறையில் வைத்திருந்தாள்.
அண்டாவைப் பார்த்த குஷியில் அதற்குள் இருந்த பொருட்களை அறை முழுவதும் விசிறி அடித்துவிட்டு அதை மட்டும் தூக்கிக் கொண்டான். சில திருடர்கள் எவ்வளவு விலை உயர்ந்த பொருள் கண்ணில் பட்டாலும் திருடமாட்டார்கள். பாத்திரங்களைத் திருடி அன்றாட குடி தேவையை நிறைவு செய்துகொள்வார்கள். வெளியே வந்தவனுக்கு கடப்பாரை, திருப்புளி, ஸ்பேனர்செட் அடங்கிய பை கண்ணில் பட்டது. அண்டாவை வாஷிங்மெஷின் மீது வைத்துவிட்டு அந்த உபகரணங்களை எடுத்துக்கொண்டான்.
மீண்டும் மதில் ஏறிக் குதித்தான். அடுத்த வீட்டில் எதைத் திருட வந்தானோ! விதவிதமான திருப்புளிகளைப் பயன்படுத்தி இரும்பு கேட்டைத் திறந்துவிட்டான்.
அதற்கு பின்னால் இருந்த கதவைத் திறக்க முடியவில்லை. உபகரணப்பை கைவிடவே கடப்பாரையைக் கையிலெடுத்தான். இரண்டு குத்து குத்தினான். மூன்றாவது குத்தில் கடப்பாரை பக்கவாட்டில் திறந்திருந்த இரும்பு கேட்டில் மோதி டணால் என சத்தமிட்டது. ஏற்கனவே சத்தத்தைக் கவனித்துக் கொண்டிருந்த தோட்டத்து வீட்டு அம்மணி ‘‘யார் நீங்க? என்ன பண்றிங்க..?’’ என்று கேட்டார்.‘‘ஒன்னும் பண்ணலியே, அவங்கதான் வரசொன்னாங்க...’’ என்று பதறாமல் மிக மிக இயல்பாக பதில் சொன்னான்.உண்மைதானென்று நம்பினாள்.அலட்டிக்கொள்ளாமல் போட்டது போட்டபடி அவள் பார்வையிலிருந்து நகர்ந்தான். கார்த்திக் வீட்டின் மதில் சுவரைத் தாண்டிக் குதிக்கும் சத்தம் கேட்ட பிறகுதான் சத்தம் போட ஆரம்பித்தாள் அந்த அம்மணி.
எத்தனை காம்பௌண்ட் எகிறிக் குதித்தானோ? தயாராக தெருமுனையில் ஸ்டார்ட் செய்து வைத்திருந்த வண்டியில் ஏறிப் பறந்துவிட்டான்.கத்திக் கத்திப் பார்த்த அந்தப் பெண், சுற்றி வந்து இந்தத் தெருவிற்கு செய்தி சொல்வற்குள் ஐந்து நிமிடமாகிவிட்டது. தெருகூடி உடைந்த வீட்டை பார்த்தது. உரியவருக்கு தகவல் சொன்னது.
அதன் பிறகு கார்த்திக் வீட்டின் அழைப்பு மணியை அடித்தனர்.பொருள் எதுவும் களவு போகவில்லை என்றாலும் காவல்துறைக்கு செய்தி சென்றது. இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள். தெருக்காரர்களும் கார்த்திக் வீட்டில் கூடிவிட்டார்கள். வாஷிங் மெஷின் மீதிருந்த அண்டாவைப் பார்த்தார்கள்.
‘‘திருடறதுக்குதான், அண்டாவை எடுத்திருக்கான், ஆளுங்கள பாத்ததும், அப்படியே வெச்சிட்டு போயிட்டான்...’’ என்றார் போலீஸ்காரர்.‘‘நல்லா பாத்துக்குங்க... யார் வீட்லயும் வேற எதுவும் போகலயே..?’’ என்றார் இன்னொரு போலீஸ்காரர்.‘‘பூட்டையும், பேட்டையும்தான் சார் உடைச்சு வெச்சிட்டான்...’’ என்றான் கார்த்திக்.‘‘உடைஞ்சத சொல்லாதீங்க... திருடு போனதை சொல்லுங்க...’’‘‘எதுவும் இல்லை சார்...’’
இன்னொரு முறை சம்பவ இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர். அதன் பிறகே கார்த்திக் பக்கத்து வீட்டில் கிடந்த பொருட்களை தன் வீட்டிற்குக் கொண்டுவந்தான். ஒரு ஹேர்பின்கூட களவு போகவில்லை என்பதில் கார்த்திக்கிற்கு அவ்வளவு மகிழ்ச்சி.ஆனாலும் தன் வீட்டில் இவ்வளவு நடந்தது தெரியாமல் தூங்கி இருக்கிறோம் என்று வருத்தப்பட்டான்.
நைனியும், சுதாவும் பள்ளி விட்டு வந்தார்கள் கார்த்திக் காஃபி போட்டுக் கொண்டு வந்தான். ‘‘என்னப்பா தெருவுல ஒரே கூட்டமா இருந்தது?’’ ‘‘சொல்றேன் வாங்க. காஃபி குடிச்சிட்டே பேசலாம்...’’
திருடன் வந்த கதையை ஒன்று விடாமல் சொன்னான். நைனி பயத்தோடு கேட்டாள். சுதா முகத்தில் எந்தவித மாற்றத்தையும் காட்டவில்லை. எதுவும் பேசவில்லை. அமைதியாக எழுந்து சம்பவம் நடந்த அறையைப் பார்க்கச் சென்றாள்.‘‘ஏ... அப்பா, அந்த அண்டாவத் தூக்கி கீழ வெக்கிலையா? இன்னும் வாஷிங் மெஷின் மேலதான் இருக்குனா நீ செத்த. அம்மா நீ தூங்குனதெல்லாம் விட்ருவா.
வாஷிங் மெஷின் வீணாயிடும்னு கத்த ஆரம்பிச்சுடுவா. நீ வாங்கி வர்ற ஸ்நாக்ஸ்ஸ பிரிண்டர் மேல வெச்சா என்னா கத்து கத்துவா? மறந்துட்டியா? ஒரு கிலோ வாழைப்பழத்த ஃபிரிட்ஜ் மேல வெச்சா ஃபிரிட்ஜே வீணாயிடுச்சுனு குதிப்பா? 14 கிலோ அண்டா... வாஷிங் மெஷின்... செத்தப்பா நீ. ஏற்காடு கூட்டிட்டு போகலல்ல, அனுபவிடி நீ...’’தோட்டத்தில் அண்டாவின் வெங்கல ஒலியோடு சுதாவின் குரலும் சேர்ந்தே ஒலித்தது.
‘‘இதுக்குத் திருடன் அந்த அண்டாவ தூக்கிட்டு போயிருந்திருக்கலாம். சுதா இங்க வா. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்...”‘‘மீ... சீக்கிரம் வா. அப்பா சர்ப்ரைஸ் தராராம்...”சுதா கத்திக் கொண்டே வந்தாள்.‘‘நியாயமா நான்தான் உங்கம்மாவ திட்டணும். 2000 ரூபாய் கிரிக்கெட் பேட்டாலதான் துணி துவைப்பா.
ஹேர்பின்ன கண்ட இடத்துல கழற்றி வைப்பா...”‘‘போதும் நிறுத்துங்க. உங்களுக்கு வண்டிய நிறுத்தினா வண்டி சாவிய எடுக்கற பழக்கம் இல்லல்ல? அப்படித்தான் எனக்கும்...”‘‘போதும் போதும் சண்டைய நிறுத்திட்டு சர்ப்ரைஸுக்கு வாங்க ஃபர்ஸ்ட்டு...”‘‘கார் ஷெட்டுக்கு வாங்க. காட்றேன். காரு பளபளன்னு மின்னும், வைரம் மாதிரி ஜொலிக்கும். ஏன்னா நாம ஏற்காடு போகப்போறோம்...” என்று சொல்லிக்கொண்டே காரைக் காட்டினான்.கார் அங்கு இல்லை.
- ஸ்ரீதேவி கண்ணன்
|