தார் பாலைவனத்தில் ஆப்பிள்!
ஆப்பிள் என்றாலே காஷ்மீரும், ஊட்டியும்தான் எல்லோர் நினைவுகளிலும் நிழலாடும். ஆனால், ராஜஸ்தான் ஆப்பிள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
 இது கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட தோன்றலாம். ஏனெனில், சுட்டெரிக்கும் தார் பாலைவன தேசத்தில் எப்படி ஆப்பிள் விளையும், அதற்கான தட்பவெப்பம் இருக்கவேண்டாமா என்கிற கேள்விகள் எழலாம்.
 ஆனால், ராஜஸ்தானின் சிகார் மற்றும் ஜுன்ஜுனு மாவட்டங்களின் விவசாயிகள் ஆப்பிள் விளைவித்து வருவதுதான் ஹைலைட். சிகார் மாவட்டத்தின் பேரி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயியான சந்தோஷ் தேவி கேதர்தான் இதற்கு மூல காரணகர்த்தா. அவர்தான் அங்கு ஆப்பிள் தோட்டத்தை முதல்முறையாகக் கொண்டு வந்தவர்.

கடந்த 2015ம் ஆண்டு அவருக்கு குஜராத்திலுள்ள நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் எனப்படும் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனத்தால் ஒரு ஆப்பிள் மரக்கன்று வழங்கப்பட்டது. அதுவே இன்று ஒவ்வொரு பருவத்திலும் 6 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான ஆப்பிள் பழங்களை விளைவிக்கும் ஒரு செழிப்பான பண்ணையாக மாறிவிட்டது.
சந்தோஷ் தேவி கேதரின் குடும்பம் ஒண்ணேகால் ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை, கொய்யா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை நீண்டகாலமாக பயிரிட்டு வந்தது. அதனால், ஒரு ஆப்பிள் மரம் என்பது அவர்களுக்குக் கற்பனையாகத் தோன்றியது. ‘‘ஆரம்பத்தில் எங்களுக்கு சந்தேகமாகவே இருந்தது. குளிர்ந்த காலநிலையில் விளையும் ஆப்பிள் எப்படி தகதகக்கும் பூமியில் வளரும் என்று? இருந்தும் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனம் மரக்கன்று தந்ததால் நாங்கள் செடிக்குத் தண்ணீர் பாய்ச்சி தேவைகேற்ப இயற்கை உரங்களைப் பயன்படுத்தினோம். குறிப்பாக ஆர்கானிக் முறையில் பயிரிட்டோம். பின்னர் ஓராண்டு கழித்து அதில் ஆப்பிள்கள் வளர்வதைக் கண்டபோது எங்களால் நம்பவே முடியவில்லை...’’ என ஆச்சரியம்பொங்கச் சொல்கிறார் சந்தோஷ் தேவி கேதர்.
அதுமட்டுமல்ல. முதலில் சந்தோஷ் தேவி கேதரின் அண்டை வீட்டார்கள், அவர் ஆப்பிள் மரக்கன்று வைத்துள்ளதைப் பார்த்து சிரித்தனர். சிலர் ஆப்பிளா... இங்கேயா... எனக்கேலிகூட செய்தனர். அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை சந்தோஷ் தேவி கேதர்.தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் இன்னும் நிறைய மரக்கன்றுகள் நட்டார்.
அவை கிட்டத்தட்ட 40 கிலோஆப்பிள் பழங்களைத் தந்தன. இந்த ஆப்பிள் மரக்கன்று HRMN-99 வகையைச் சேர்ந்தது. இது தீவிர வெப்பநிலையைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதாவது 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பநிலையைத் தாங்கி வறண்ட பகுதிகளில் வளரக்கூடியது.
இதன்பின்னர் சந்தோஷ் தேவி கேதருடன், விவசாயம் படித்துவிட்டு வந்த மகன் ராகுலும் இணைந்தார். அவர்கள் பழத்தோட்டத்தை நூறு மரங்களாக விரிவுபடுத்தினர். இதற்கு ஒட்டுரக நுட்பங்களைப் பயன்படுத்தினர். இதனால் கூடுதல் தண்ணீரும் மரங்களுக்குத் தேவைப்படவில்லை.
‘‘பொதுவாக ஆப்பிள் மரங்கள் முதிர்வாக வளர்ந்தவுடன் அதற்கு குறைவான நீர் போதுமானது. ஐந்து ஆண்டுகளான மரங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிப்ரவரியில் பூக்கள்விடும் மரங்கள், பின்னர் ஜூனில் பழங்களைக் கொடுக்கும்...’’ என்கிறார் ராகுல். தற்போது சந்தோஷ் தேவி கேதர் ராஜஸ்தானின் ஆர்கானிக் நிறுவன விவசாயச் சான்றிதழ் வைத்திருப்பதால் இமாச்சல் மற்றும் காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள்களின் சந்தைவிலையைகூட கூடுதலான விலைக்கு இந்த ஆர்கானிக் ஆப்பிள்களை விற்பனை செய்கிறார். அதாவது காஷ்மீர், இமாச்சல் ஆப்பிள்களின் விலை கிலோ 100 ரூபாயாக இருந்தால் இவர் 150 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகச் சொல்கிறார். காஷ்மீர் மற்றும் இமாச்சல் ஆப்பிள்களைப் போல அதே சுவையுடனும் தரத்துடனும் இவை இருப்பதால் தன்னுடைய ஆப்பிள்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
இந்நிலையில் ஒருகாலத்தில் சந்தோஷ் தேவி கேதரை கேலி செய்தவர்கள் இப்போது அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். தற்போது அருகிலுள்ள கத்ரதல் கிராம விவசாயி மோஹித் என்பவர் 50 ஆப்பிள் மரங்களைப் பயிரிட்டுள்ளார்.
இதேபோல அருகிலுள்ள மாவட்ட விவசாயிகளும் ஆப்பிள் மரங்களைப் பயிரிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, பல்வேறு மாவட்ட, மாநில விவசாயிகள் இந்த ஆப்பிள் முறையை ஆச்சரியமாகப் பார்வையிட்டு சந்தோஷ் தேவி கேதரிடம் ஆலோசனைகளும் கேட்டுச் செல்கின்றனர்.
இன்று சந்தோஷ் தேவி கேதர், கணவர் ராம்கரண் கேதர், மகன் ராகுல், மருமகள் என அனைவருமே இந்த ஆர்கானிக் ஆப்பிள் தோட்டத்தில் வேலை செய்கின்றனர். இதன்மூலம் இவர்கள் ஆண்டுக்கு சுமார் 38 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர்.
அதனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ராஜஸ்தான் பகுதிகளில் ஆப்பிள் விவசாயம் சிறப்புடன் வளரக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அங்குள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள். இதனால் விரைவில் இந்தியா எங்கும் காஷ்மீர், ஊட்டி ஆப்பிள்கள் போல் ராஜஸ்தான் ஆப்பிள்களும் சந்தைகளில் ருசிக்கும்.
பேராச்சி கண்ணன்
|