இதில் உங்கள் கணவர் எந்த வகை?



பொழுதுபோகாத பொம்மு செய்த செயல்தான் இது!

வேறொன்றுமில்லை. திருமணமான ஆண்கள் - அதாவது மனைவியுடன் குடும்பமாக வாழும் ஆண்களை சோடாபுட்டி கண்ணாடி அணிந்த விஞ்ஞானிகள் அல்லது ஆய்வாளர்கள் அல்லது சமூகவியலாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.அந்த ஆய்வின் முடிவில் ஒட்டுமொத்த கணவன்மார்களையும் பத்து வகைகளில் அடக்கியிருக்கிறார்கள்.

இதெல்லாம் உண்மையா?

யாருக்குத் தெரியும்! ஆராய்ச்சி முடிவு என சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். சும்மா ஜாலியாக திருமணமான பெண்கள், உங்கள் இணையர் இதில் எந்த வகை என பாருங்கள்.
ம்ஹும். மைக்ரோஸ்கோப்பை வைத்து ஆராய்ந்து பார்க்கும் தேவை ஏற்படாது. ஜஸ்ட் ஒரே பார்வையிலேயே ‘உங்களுக்கு வாய்த்தது’ இவ்வளவுதான் என சொல்லிவிட மாட்டீர்களா என்ன?!

1. பேச்சிலர் கணவர்

மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காரியங்களைச் செய்பவர். மனைவியை விட தன் நண்பர்களுடன் அதிகம் பழகுவார். திருமண வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரமாட்டார். சாப்பிட, உறங்க மட்டுமே வீட்டுக்கு வருவார் அல்லது இதற்காக மட்டுமே வீட்டில் இருப்பார்.

2. அமிலக் கணவர்

எப்பொழுதும் அமிலம் போல் கொதித்துக்கொண்டே இருப்பவர். அதாவது எப்போதும் கோபமாக இருப்பவர். வன்முறை மனநிலை, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். எனவே ஆபத்தானவர் என்கிறது ஆய்வு. ஸோ, எந்நேரமும் அலர்ட் ஆக இவர்களிடமிருந்து இரண்டடி தள்ளியே குடும்பத்தினர் இருப்பார்கள்.

3. அடிமை கணவர்

ராஜாவைப் போல, தான் நடத்தப்பட வேண்டும் என நினைப்பவர். ஆனால் மனைவியை அடிமையாக நடத்துகிறவர். பழைய பஞ்சாங்கத்தில் ஊறிப்போனவர். எதற்கெடுத்தாலும் ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாளில்லை’ என பாடம் எடுப்பவர். சாஸ்திர, சம்பிரதாயங்களை மனைவி கடைப்பிடிக்க வேண்டும் என கையில் வெப்பனுடன் ஆர்டர் போடுபவர்.

4. சராசரி கணவர்

பெரும்பாலான பெண்களுக்கு இப்படிப்பட்ட கணவர்தான் அமைவர். மனைவியை விட தோழிகளை அதிகம் நேசிப்பவர். அவர்கள் மேல் ஆர்வம் காட்டுபவர். பெண் தோழிகளுக்கு செலவு செய்வது பிடிக்கும். பெண் நண்பர்களும் இவர்களுக்கு அதிகம். தோழிக்குப் பிறகுதான் மனைவி என்ற எண்ணம் இவர்களிடம் உண்டு. பகிரங்கமாக வெளிப்படுத்தாவிட்டாலும் செயலும் நடவடிக்கையும் அப்படித்தான் இருக்கும்.

5. உலர் கணவர்

மிகவும் உலர்ந்த மனநிலை கொண்டவர். கஞ்சத்தனம் மிக்கவர். மனைவியின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாதவர். உறவை சுவாரஸ்யமாக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார். இதனால் மனைவியுடன் ஊடல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாதவர்.

6. சந்தர்ப்ப கணவர்

மனைவியை பிரச்சனை தீர்ப்பவராகப் பயன்படுத்துபவர். ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே மனைவியை நேசிப்பவர். குறிப்பாக சொல்வதென்றால் மனைவி மூலம் காரியம் நடக்கும் என்றால் மட்டுமே இணையரிடம் சிரித்துப் பேசுபவர். புத்திசாலி மனைவியின் பலவீனங்களை அறிந்தவர். மனைவியிடமிருந்து வேண்டியதை பெற மனைவியின் பலவீனங்களை பயன்படுத்த தயங்காதவர்.

7. ஒட்டுண்ணி கணவர்

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் சோம்பேறி. பணத்திற்காக மட்டுமே மனைவியை நேசிப்பவர். மனைவியின் பணத்தை காதலிகளுக்கு அல்லது மனம் கவர்ந்த பெண்களுக்கு செலவிடுபவர். எந்த ஆக்கபூர்வமான முன்முயற்சியும் இல்லாதவர். வீட்டுப் பொறுப்புகளில் பங்கேற்காதவர். மனைவிக்கு எந்தவிதத்திலும் உதவாதவர்.

8. குழந்தை கணவர்

பொறுப்பற்றவர். குழந்தைத்தனமானவர். தனது தாய், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களை கேட்காமல் ஒரு முடிவையும் சொந்தமாக எடுக்காதவர். மனைவியை எப்பொழுதும் உறவினர்களுடன் ஒப்பிட்டு பேசுபவர். மனைவி ஏதாவது தவறு செய்தால் அதைச் சொல்ல உடனடியாக தன் பெற்றோரையோ உறவினர்களையோ தேடி ஓடுபவர்.

9. வருகைப் பதிவேடு கணவர்

பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். பார்வையாளர் போல வருவார், போவார். குடும்பத்திற்கு அனைத்து பொருள்களையும் வழங்குவார். ஆனால், பொறுப்பேற்க மாட்டார்; குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க மாட்டார்.

10. அக்கறையுள்ள கணவர்

அக்கறையும் அன்பும் கொண்டவர். மனைவியின் உணர்ச்சிகளை சரியாக கையாள்பவர். பிசியாக இருந்தாலும் குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குபவர். குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர். மிகவும் பொறுப்பானவர். மனைவியை துணையாகவும், உதவியாளராகவும் கருதுபவர்.

காம்ஸ் பாப்பா