மினி கேரளா!
மாங்கனி மணக்கும் சேலத்தில் மாசற்ற பசுமையால் மனங்களைக் கொத்திக் கொள்ளும் அழகியலின் உச்சமே பூலாம்பட்டி. நஞ்சையும், புஞ்சையும் செழித்து நிற்க, வஞ்சகமில்லாமல் இயற்கை அன்னை தன் அழகையெல்லாம் வாரி இறைத்துள்ள இறைவனின் சொர்க்கம் இந்த பூமி.  கடல்போல் பரந்து விரிந்து கண்களை நிறைக்கும் காவிரி, கதவணை நீர்த்தேக்கத்தில் துள்ளி விளையாடும் வண்ண மீன்கள், ஓசையிடும் ஆற்றில் சீறிப் பாயும் விசைப்படகுகள், நீர்ப்பரப்பில் சிறகடித்து, வானத்தை வட்டமிடும் கானப்பறவைகள், கிழக்குக் கரையெல்லாம் தென்னஞ்சோலைகள், மேற்குக் கரையில் கம்பீரத்துடன் அரணாக நிற்கும் பாலமலைகள்... என்று காணும் காட்சிகள் யாவும், நமது சிந்தனைகளில் களம் அமைத்து அப்படியே தங்கிவிடுகின்றன.  தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பாசனத்திற்கு நீர்வார்க்கும் மேட்டூர் அணை இங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், பல்வேறு ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறை என்னும் பவானி 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. மேட்டூர் கிழக்குக் கரை கால்வாய் பகுதியானது பூலாம்பட்டியில் தொடங்கி, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொய்வில்லாத நீரோட்டத்தைக் கொண்டிருப்பதும் இயற்கையின் வரம்.

இதனால் எப்போதும் வற்றாத நீர்வளம், வளமான மண்வளத்துடன் இதயத்திற்கு இதமளிக்கும் இந்த ஊர், கடவுளின் தேசமாகக் கருதப்படும் கேரளத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. இதனால் பூலாம்பட்டி சமீபகாலமாக ‘குட்டி கேரளா’ என்ற பெருமைமிகு மகுடத்தைச் சுமந்து நிற்கிறது.  உள்ளூர் மக்களின் சொர்க்கமான பூலாம்பட்டி தற்போது மாநிலம் கடந்தும் மனங்களை ஈர்க்கும் பகுதியாக உருவெடுத்துள்ளது. வாரவிடுமுறை நாட்களில் அளவுக்கதிகமான மக்கள் குவியும் சுற்றுலாத்தலமாகக் காட்சியளிக்கிறது. படகில் பயணித்து, பண்போடு கலந்துரையாடி, வறுத்த மீன்களை ருசித்து, இயற்கையின் ஜாலங்களை ரசிப்பதும், செல்ஃபி எடுப்பதும் மட்டற்ற மகிழ்ச்சியைப் பரப்பி வருகிறது.
‘‘ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று எத்தனையோ சுற்றுலாத் தலங்களுக்கு நாங்கள் சென்றுள்ளோம். இயற்கையின் அழகை முழுமையாக ரசிக்கிறோம். மனதைக் கவரும் பல்வேறு பகுதிகள் அங்கே இருந்தாலும் நகரமயமாக்கலின் சுவடுகளைக் கண்கூடாகக் காணலாம்.
ஆனால், பூலாம்பட்டியைப் பொறுத்தவரை பசுமையான வயல்வெளிகள், விண்ணை முட்டும் மலைகள், தென்றலின் தீண்டுதலால் தலையாட்டும் மரங்கள் என்று நூறு சதவீதம் மாசற்ற அழகைக் கண்டு மகிழ்கிறோம். இது மனதிற்கு அத்தனை இதமாக உள்ளது. அதோடு அகன்று விரிந்த காவிரியில் அற்புதமான படகுப்பயணம், கமகமக்கும் மீன் குழம்போடு அருமையான உணவு என்று இந்த அனுபவமே தனித்துவம் வாய்ந்தது.
ஒப்பனை இல்லாத உண்மையான இயற்கையின் சீதனம்தான் பூலாம்பட்டி. இதனை கடவுளின் தேசமான கேரளாவுடன் ஒப்பிட்டு குட்டி கேரளா என்று நாங்கள் அழைப்பதும் நூறு சதவீதம் பொருத்தமானது...’’ என்பது சுற்றுலாப் பயணிகள் வெளிப் படுத்தும் மகிழ்வின் எதிரொலி.இது மட்டுமன்றி இன்றைய காலகட்டத்தில் எந்த சுற்றுலாத்தலத்திற்குச் சென்றாலும் கையைக் கடிக்கும் பட்ஜெட் நமது மகிழ்ச்சிக்கு உலை வைத்து விடுகிறது.
ஆனால், பூலாம்பட்டி குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இங்கே படகு சவாரி, மீன் உணவு என்று உள்ளம் மகிழவும், உண்டு மகிழவும் செலவிடும் பணமும் சொற்பம்தான். அதிகபட்சமாக ஒரு குடும்பம் ஐநூறு ரூபாய் செலவு செய்தாலே, அது வாழ்வில் மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்ற நெகிழ்வும் மக்களிடம் நிலவுகிறது. மருத்துவ குணம் நிறைந்த பூலாம்பூக்கள் செழித்து வளர்ந்த சிற்றூர் இது. இதனால் பூலாம்பூக்களூர்பட்டி என்று அழைக்கப்பட்டு, காலத்தின் சுழற்சியால் பூலாம்பட்டியாக மருவி நிற்கிறது. சேலத்தின் எல்லையாக ஒரு புறம் பூலாம்பட்டியும், ஈரோட்டின் எல்லையாக மறுபுறம் நெரிஞ்சிப்பேட்டையும் நின்று காவிரி கதவணை வழியாக கரம் சேர்ப்பது எங்கள் மண்ணின் பெருமைக்கு மற்றொரு சான்று.
வற்றாத காவிரிக்கரையோரத்தில் உள்ள எங்கள் ஊரின் தனித்துவமே விவசாயம்தான். நெல், கரும்பு, வாழை, தென்னை என்று அனைத்து பயிர்களும் முப்போகம் விளைகிறது. உழைப்புதான் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் மூலதனம்.
அதோடு காவிரித்தாயின் கருணையும், குலம் காக்கும் தெய்வங்களின் அருளும் இந்தபூமிக்கு ஏராளமாக உள்ளது. அதனால் எத்தனை யுகங்கள் கடந்தாலும் எங்கள் ஊர் எப்போதும் இயற்கை எழில் கொஞ்சும் குட்டி கேரளாவாகவே இருக்கும் என்பது மண்ணின் மைந்தர்களின் பெருமிதம். கரும்புக்கு மட்டுமல்ல இரும்புக்கும் ‘ஃபேமஸ்’
‘‘பொங்கல் கரும்புக்கு பிரசித்தி பெற்ற இடமாகவும் பூலாம்பட்டி திகழ்கிறது. இங்கு பயிரிடப்படும் செங் கரும்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இங்குள்ள மண்வளமும், காவிரியின் நீர்வளமும் கரும்பை செழித்து வளரச்செய்கிறது. இதுவே இங்கு சாகுபடியாகும் கரும்புகளின் ஈடற்ற சுவைக்கும் காரணமாகிறது.
இதனால் பூலாம்பட்டி கரும்புகள் என்பது பல்வேறு பகுதிகளில் பிரசித்தி பெற்று நிற்கிறது. கரும்பைப் போல் ஒரு காலத்தில் இரும்புக்கும் பிரசித்தி பெற்ற ஊர் பூலாம்பட்டி. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிருந்து இரும்பைக் காய்ச்சி, பூம்புகார் வழியாக கடல்மார்க்கத்தில் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அந்த இரும்பைக் கொண்டு அங்கே ஒரு பாலம் அமைத்துள்ளனர். அந்த பாலத்தில் பூலாம்பட்டி இரும்பால் கட்டப்பட்ட பாலம் என்ற பதிவும் உள்ளது... என வரலாற்று ஆர்வலர்கள் வெளியிடும் வியத்தகு தகவல் ஆச்சர்யப்பட வைக்கிறது.
வெள்ளித்திரைகளில் ஜொலித்த இடமிது வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டிய பல திரைப்படங்களின் படப்பிடிப்புத் தளமாகவும் பூலாம்பட்டி இருந்துள்ளது. இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கைவண்ணத்தில் உருவான ‘பவுனு பவுனுதான்’ படத்தின் கதைக்களமே பூலாம்பட்டிதான்.
இத்திரைப்படம் முழுவதும் பூலாம்பட்டியைச் சுற்றியே உருவானது. உள்ளூர் மக்கள் பலரும் கலைஞர்களாக முகம் காட்டினர். இதை நினைவுபடுத்தும் வகையில் பூலாம்பட்டி ஆற்றில் ‘பவுனு பவுனுதான்’ என்று பெயரிட்டு ஒரு படகு இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதேபோல் அருண்பாண்டியன் நடித்த ‘முற்றுகை’, ராம்கி நடித்த ‘மருதுபாண்டி’, கரண் நடித்த ‘இரண்டு முகம்’ என்று பல வெற்றித்திரைப்படங்களின் காட்சிகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தின் கிளைமாக்சில் வரும் படகுப் பயணக் காட்சியும் பூலாம்பட்டி காவிரிக்கரையில்தான் படமானது என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
வாடிய முகம் வெளிச்சமாகும்
‘‘என்னதான் மனசு நிறைய கஷ்டத்தோட வந்தாலும், இதயத்தை லேசாக்கி விடும் இடம்தான் பூலாம்பட்டி. நான் தினமும் பல்வேறு பிரச்னைகளோடதான், வீட்டிலிருந்து இங்கு வேலைக்கு வருகிறேன். ஆனால், இந்த இடத்தில் வந்து நின்றவுடன் வீசும் காற்றும், ஆற்றின் அழகும் அப்படியே நம்மை மாற்றிவிடும்.
இங்கு வரும் மக்களும் அப்படித்தான். ரொம்பபேர், முகத்தில் ஒரு கவலையோடுதான் இங்கே வருவாங்க. ஆனால், போகும் போது அவங்க முகத்தில் அவ்வளவு பிரகாசம் இருக்கும். ஒருமுறை இங்கு வந்தவங்க தொடர்ச்சியாக வந்துகிட்டேதான் இருக்காங்க. இப்படி வரும் பலபேருக்கு சிறந்த நட்புவட்டாரமும் உருவாகி வருகிறது...’’ என்று உவகை கொள்கிறார் படகுத்துறை பணியாளர் வள்ளி.
மீனுக்கு எப்பவுமே தனி மவுசுதாங்க...
‘‘நீங்க ஆத்துமீனை எத்தனையோ இடத்தில டேஸ்ட் பாத்திருப்பீங்க. ஆனா, பூலாம்பட்டியில் கிடைக்கும் மீனோட டேஸ்ட்டே தனிதான். ரோகு, கட்லா, பாறை, ஆரா, ஜிலேபி, அரஞ்சான், சொறா, விலாங்கு, அவுரி என்று ஆற்றில் துள்ளிக்குதிக்கும் பலரக மீன்களை வலையில பிடிக்கிறோம். அதில் கலப்படம் இல்லாத கமகமக்கும் மசாலாவைத் தடவி எண்ணெயில் வறுக்கிறோம்.
இதை சனங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் ₹20 முதல் அதிகப்படியாக ₹100 என்ற விலையில் விற்கிறோம். இப்படி விலையைக் குறைத்து தரத்தை நிரந்தரமாகக் கொண்ட மீன்களுக்கு எப்போதும் தனிமவுசுதான். காவிரி ஆற்றின் தூய்மையான நீரோட்டமும் மீன்களின் சுவைக்கு ஒரு முக்கிய காரணம்...’’ என்று சிலாகிக்கிறார் மீன் விற்பனையாளர் போட் மணி.
மிகப்பெரும் இணைப்புத் தலமாக மாற்ற பாலம்
பூலாம்பட்டியை ஒட்டிய 50 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மேட்டூர், பவானி, மாதேஸ்வரன் மலை என்று பிரசித்தி பெற்ற பல இடங்கள் இருக்கின்றன. மைசூர், சத்தியமங்கலம் செல்வதற்கும் இணைப்புப் பாதையாக உள்ளது. ஈரோட்டின் மிகப்பெரிய வேளாண் விற்பனை நிலையமும் இந்த தூர எல்லைக்குள் உள்ளது.
இந்தப் பகுதிகளுக்கும் பூலாம்பட்டிக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் இது மிகப்பெரிய சுற்றுலா இணைப்புத் தலமாக மாறவும் வாய்ப்புள்ளது. இதற்காக பூலாம்பட்டி காவிரியாற்றின் குறுக்கே இரண்டு கிலோமீட்டருக்கு பாலம் ஒன்று அமைக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்கள் மட்டுமன்றி விவசாயிகளின் கோரிக்கையாகவும் உள்ளது. இப்போது ஈரோடு பூதப்பாடிக்கு செல்ல, 25 கிலோ மீட்டர் சுற்ற வேண்டியுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டால் இந்ததூரம் பாதியாகக் குறையும். எனவே, அரசு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் சங்கப் பிரதிநிதியான எம்.ஆர்.நடேசன் வைக்கும் கோரிக்கை.
சுற்றுச்சூழல் மாசு இல்லாத மேம்பாடு
‘‘சேலம் மாவட்டத்தின் ஒரு சிறிய பேரூராட்சியான பூலாம்பட்டியை குட்டி கேரளா என்று மக்கள் புகழ்ந்து, இங்கே திரண்டு வருவது, மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மிகவும் பெருமையாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு பூலாம்பட்டியை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு பணிகளை அரசு சார்பில் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இங்கு ஆற்றோரத்தில் அழகு மிளிரும் கைலாசநாதர் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. படகு இல்ல விரிவாக்கம், சிறுவர்களுக்கான படகு சவாரி, தனியார் பங்களிப்புடன் சுற்றுலாப் பயணிகள் தங்கி மகிழ்வதற்கான விடுதி என்று பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தூய்மையான இயற்கையே பூலாம்பட்டியின் தனிச்சிறப்பு. இதைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்யஉள்ளோம்...’’ என்கிறார் பூலாம்பட்டி பேரூராட்சித் தலைவர் அழகுதுரை.
ஜி.காந்தி, டி.ஆர்.எஸ்.சண்முகசுந்தரம்
கே.ஜெகன்
|