ட்ரை சைக்கிளில் பிசினஸ் செய்யும் ஐடி இளைஞர்கள்!
தூங்கா நகரம் என்றாலே அது மதுரைதான். ஆனால், இப்போது அந்தப் பெயர் சென்னை அண்ணா நகருக்கும் பொருந்தும். ஏனெனில் மிட் நைட் டீ, மிட் நைட் பிரியாணி, மிட் நைட் ஸ்நாக்ஸ், மிட் நைட் பரோட்டா, மிட் நைட் தோசை, மிட் நைட் ஐஸ்கிரீம் என இரவு பத்து மணிக்கு மேல் நூற்றுக்கணக்கான உணவகங்களுடனும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடனும் பகல் போல் பரபரத்துக் கிடக்கிறது சென்னை அண்ணா நகர்.  அந்த இரவு நேரத்து உணவகங்களில் ஒன்றாக இருக்கிறது, ‘ஆலங்குடி ஆச்சி பிரியாணி’. அண்ணா நகர் சாந்தி காலனியின் 5வது அவின்யூவில் இருக்கும் இந்த உணவகத்தை, ஒரு கடையென நினைத்து நீங்கள் தேடினால் ஏமாற்றமே மிஞ்சும். 
ஏனெனில், ட்ரை சைக்கிளே பிரியாணி கடையாக ஜொலிப்பதுதான் இதற்குக் காரணம். பிரியாணி காலியானதும் இந்த ட்ரைசைக்கிள் உணவகம் அங்கிருந்து மறைந்துவிடும். ஆனால், மணக்கும் ஆச்சி பிரியாணியின் சுவையோ மனதிலிருந்து என்றும் மறையாது. அந்தளவுக்கு இதன் சுவை வாடிக்கையாளர்களை மயக்கிவிட்டது.
இந்த இரவு உணவகத்தை நான்கு ஐடி இளைஞர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். பதினைந்து ஆண்டுகால நண்பர்களான இவர்கள், ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே தங்கி, ஒன்றாகவே சாப்பிட்டு, தற்போது ஒன்றாகவே ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டு, இந்தப் பிரியாணி கடையை உற்சாகமாக நடத்துகின்றனர். ஓர் இரவு நேரத்தில் ஆலங்குடி ஆச்சி பிரியாணியை ருசித்தபடியே மணிகண்டனிடம் பேசினோம். இவர்தான் இந்தக் கடைக்கான ஐடியாவை விதைத்தவர். ‘‘நாங்கள் அனைவருமே திருச்சியைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள். எனக்கு புதுக்கோட்டை ஆலங்குடி. நான், சண்முகம், வடிவேலு அப்புறம் இன்னொரு மணிகண்டன் எல்லோருமே திருச்சி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒன்றாக படித்தோம்.
அங்கிருந்து எங்கள் நட்பு தொடங்கியது. கல்லூரி ஹாஸ்டலில்கூட நாங்கள் ஒன்றாகவே தங்கியிருந்தோம். படிக்க, விளையாட, தூங்க, ஊர் சுற்ற என அனைத்தையும் ஒன்றாகவே செய்தோம்.
பிறகு கல்லூரிப் படிப்பு முடிந்ததும் நான்கு பேரும் ஒன்றாகவே சென்னைக்கு வேலை தேடி வந்தோம். இங்கும் ஒன்றாகவே தங்கினோம். சென்னை ஒரகடம் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஒன்றாகவே வேலையும் பார்த்தோம்.
வேலை செய்து கொண்டிருக்கும்போதே மேற்படிப்பிற்காக தனியார் கல்லூரியில் சேர்ந்து பி.டெக்கும் முடித்தோம்.பின்னர் எனக்கு ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. நான் எனது நண்பர்களையும் அதே கம்பெனியில் வேலையில் சேர்ப்பதற்கு உதவினேன். இப்போது ஐடி கம்பெனியில் பத்து ஆண்டுகளாக ஒன்றாகவே வேலை செய்து வருகிறோம்...’’ என பிரியாணியை விற்பனை செய்தபடியே பேசும் மணிகண்டன், கடை உருவான கதையைப் பகிர்ந்தார்.
‘‘இந்தப் பிரியாணி கடைதொடங்குவதற்கு முழுக் காரணம் நான்தான். எனக்கு பிரியாணி என்றால் உயிர். ஆலங்குடியில் பள்ளியில் படிக்கும்போது நான் காலையில் பேப்பர் போடுவதும், மாலையில் ஃபைனான்ஸ் பணம் வசூலிப்பதுமாக தினமும் இரண்டு வேலைகள் செய்து வந்தேன்.இந்த இரண்டு வேலைகளிலும் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு வேலையின் சம்பளம் மட்டுமே என் வீட்டிற்குக் கொடுப்பேன். மற்றொரு சம்பளம் பிரியாணி கடைக்குத்தான் போகும். அந்தளவிற்கு, நான் பிரியாணி அடிக்ட்!
சென்னையில் வேலை பார்த்து சம்பளம் வாங்கும்போதும்கூட பிரியாணிக்கென்று தனித் தொகையை ஒதுக்கினேன். என்னோடு சேர்ந்து எனது நண்பர்களும் பிரியாணி சாப்பிடுவார்கள். ரூமில் எல்லோரும் சேர்ந்திருந்தால் அன்று பிரியாணிதான். அதை நானே செய்வேன். ஐடியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பெரும்பாலும் எங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்தான் இருந்தது.
வீட்டில் இருந்து அலுவலக வேலையை முடிப்பதால் நிறைய நேரம் சும்மாவே இருக்கும்படி ஆனது. வேலை இல்லாத நேரங்களை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என யோசித்தேன். அப்போதுதான் என் சின்ன வயசு ஆசையான பிரியாணி கடை வைப்பது பற்றிய யோசனை வந்தது.
பகலில் அலுவலக வேலை; இரவில் பிரியாணி கடை என யோசித்து நண்பர்களிடம் சொன்னேன். அவர்களும் மகிழ்ச்சியோடு சம்மதித்தார்கள். அப்படி உருவானதுதான் இந்த ஆலங்குடி ஆச்சி பிரியாணிக் கடை...’’ என்கிற மணிகண்டன், கூட்டாளிகளைப் பார்த்து புன்னகைத்தபடி தொடர்ந்தார்.
‘‘ இதற்காக குறைந்த செலவில் ட்ரை சைக்கிள் ஒன்றை வாங்கி அதை கடைபோல் தனித்துவமாக வடிவமைத்து அதிலிருந்தபடியே பிரியாணியை விற்பனை செய்யலாம் என முடிவெடுத்தோம்.
தற்போது நாங்கள் சீரக சம்பா தம் பிரியாணி கொடுக்கிறோம். இந்த பிரியாணியின் சுவையை எங்களிடம் தவிர்த்து வேறு எங்கிலுமே நீங்கள் சுவைத்திருக்க முடியாது. காரணம் இந்த பிரியாணியை உருவாக்கியதே நாங்கள்தான்.
வாடிக்கையாளர்களுக்கு சூடாக பிரியாணி கொடுக்க வேண்டும் என்பதால் பிரியாணி விற்பனை செய்யும் இடத்திற்கு அருகே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அங்கு பிரியாணியைத் தயாரிக்கிறோம். அதேபோல், எங்கள் பிரியாணியில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களுமே முதல்தர பொருட்கள்தான். தேனியில் இருந்து மசாலா பொருட்களை எங்கள் வீட்டிற்கு அனுப்பி, அங்கு மசாலா தயார் செய்யப்பட்டு, பிறகு அந்த மசாலாவை சென்னைக்கு வரவழைக்கிறோம்.
தவிர, சுத்தமான நெய்யை நேரடியாக தயாரிக்கும் இடத்தில் இருந்தே வாங்குகிறோம். காய்கறிகளையும் நேரடியாக கொள்முதல் செய்கிறோம். மட்டன் பிரியாணிக்கு, 8 முதல் 9 கிலோ எடையிலான ஆடுகளைத்தான் பயன்படுத்துகிறோம். அப்போதே இளங்கறியாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
பிரியாணி செய்யத் தொடங்கும்போதுதான் மட்டனும் வெட்டப்படும். சரியாக வெங்காயம், தக்காளி வதங்குவதற்குள் மட்டன் வெட்டப்பட்டு எங்கள் இடத்திற்கு வந்துவிடும். அதாவது, மட்டனை வெட்டி அடுத்த அரை மணி நேரத்திற்குள் பிரியாணிக்குத் தயாராகிவிடும். இதனை நாங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களிலும் இரவு 8 மணி தொடங்கி 12 மணி வரை மட்டுமே செய்து வருகிறோம். விரைவில் எல்லா நாட்களும் பிரியாணி கொடுக்கலாமென முடிவெடுத்திருக்கிறோம்...’’ என மனநிறைவுடன் மணிகண்டன் சொல்ல தம்ஸ்அப் காட்டி சிரிக்கின்றனர் நண்பர்கள்.
செய்தி: ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|