உலகின் முதல் விந்தணு ரேஸ்!
தலைப்பே கொஞ்சம் கோல்மாலாகத் தோன்றலாம். ஆனால், உண்மை அதுவே. அமெரிக்காவின் ஹாலிவுட் நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் ஏப்ரல் 25ம் தேதியன்று நடக்க இருக்கிறது இந்த விந்தணு ரேஸ். இதனை ஸ்பெர்ம் ரேஸிங் என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று நடத்துகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் பல்லேடியம் நிகழ்ச்சி அரங்கில் இந்தப் பரபர போட்டி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

இதற்காக இந்நிறுவனம் சமீபத்தில் ஒரு மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் ஆகும். இதனை பார்வையிட ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.  இந்த ஐடியாவிற்குப் பின்னால் தோர் வென்சூர் கேபிட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் எரிக் ஜூ உள்ளிட்ட நான்கு பேர் தம்ஸ்அப் காட்டி நிற்கின்றனர். இவர்கள் உருவாக்கிய ஸ்பெர்ம் ரேஸிங் நிறுவன வெப்சைட்டில் இரண்டு லெஜெண்ட்ஸ், ஒரு மைக்ரோஸ்கோபிக் ரேஸ் டிராக் என பெரிய எழுத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது இந்தப் போட்டி எப்படி நடக்கும் என்பதற்கான குறியீடாக இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காகவே மைக்ரோஸ்கோபிக் ரேஸ் டிராக் ஒன்றை வடிவமைத்துள்ளதாகவும் கூறுகின்றனர் இவர்கள்.
இதில் விளையாட்டு வீரர்களாக விந்தணுக்களும், ஓடுபாதையாக மைக்ரோஸ்கோபிக் டிராக்கும் இருக்கும். இதனுள் இரண்டு பேர்களின் விந்தணுக்கள் செலுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். எல்லைக் கோட்டைக் கடக்கும் முதல் விந்தணு, மேம்பட்ட இமேஜிங் மூலம் சரிபார்க்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
மைக்ரோஸ்கோபிக் டிராக்கினை கண்காணிக்க அதிநுட்ப கேமிராவும் இதில் பொருத்தப்படுகிறது. அதுமட்டுமல்ல, நேரடி ஒளிபரப்பும், வர்ணனையும்கூட செய்யப்பட இருப்பதாக பெருமையாகச் சொல்கிறது ஸ்பெர்ம் ரேஸிங் நிறுவனம்.
சரி எதற்காக இப்படியொரு கோல்மால் போட்டியை நடத்துகிறது இந்நிறுவனம்? காரணம் உலக அளவில் ஆண்களிடையே கருத்தரிக்க வைக்கும் திறன் குறைந்து வருவதுதான். கடந்த 50 ஆண்டுகளில் உலக அளவில் ஆண்களிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டி வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக 1973ம் ஆண்டின் கணக்குப்படி உலக அளவில் சராசரியாக ஒரு ஆணின் மில்லிலிட்டர் அளவு விந்துவில், 101 மில்லியன் என்ற வகையில் விந்தணுக்களின் எண்ணிக்கை இருந்தது. இது 2018ம் ஆண்டு 49 மில்லியன் விந்தணுக்களாகக் குறைந்துள்ளது. அதனால் இதுகுறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படியொரு ரேஸிற்கு அறைகூவல் விடுத்துள்ளதாகச் சொல்கிறது இந்நிறுவனம். தாங்கள் ஆரோக்கியத்தை ஒரு விளையாட்டாக மாற்றியுள்ளோம் என்கிறது.
‘‘இதனால் இனி ஆண்கள் தங்கள் விந்தணுக்களைப் பற்றி கவலைப்படத் தொடங்குவார்கள். தவிர, கருவுறுதல் பிரச்னைகளைத் தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுக்கு மாறவும் இது வழிவகுக்கும். பொதுவாக மன அழுத்தம், மோசமான உணவுத் தேர்வுகள், மது மற்றும் புகைபிடித்தல் அனைத்தும் விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.
அதனால் இதுபோல விசித்திரமான அல்லது எல்லோரும் கிண்டலடிக்கும் வகையிலான ஒரு போட்டியை நடத்துவதன் மூலம் ஆண்கள் தங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்து வார்கள்’’ என நம்பிக்கை தெரிவிக்கிறது ஸ்பெர்ம் ரேஸிங் நிறுவனம்.
ஹரிகுகன்
|