காமெடி பட்டையை கிளப்பியிருக்கு!
ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ‘கேங்கர்ஸ்’ பார்த்த இசையமைப்பாளர் சி.சத்யா
ஒன்றல்ல இரண்டல்ல... 15 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு - சுந்தர்.சி காம்பினேஷன் இணைந்துள்ள படம் ‘கேங்கர்ஸ்’. ரெஜினா, முனீஸ்காந்த், மைம் கோபி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சி.சத்யா இசையமைத்துள்ளார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை 3’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர். டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் சி.சத்யாவை அவருடைய ஸ்டூடியோவில் சந்தித்தோம்.
 மூன்றாவது முறையாக சுந்தர்.சி.யுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?
‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் முதன் முதலாக சுந்தர்.சி சாருடன் வேலை செய்ய ஆரம்பிச்சேன். அடுத்து ‘அரண்மனை 3’. இப்போது ‘கேங்கர்ஸ்’. அவருடன் வேலை செய்த படங்களில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ மறக்க முடியாத படம். அவருடன் முதல் படம் என்பதால் கொஞ்சம் பயம் இருந்துச்சு. ஏனெனில். சுந்தர்.சி சார் வேகமாக வேலை செய்யக்கூடியவர் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

அந்தப் படம் பண்ணும்போதுதான் அவருக்கேற்ற மாதிரி வேலை செய்யணும் என என்னை நானே டியூன் பண்ணிக்கொண்டேன். அடுத்தடுத்த படங்களில் ஃப்ரெண்ட்லியாக வேலை செய்ய முடிஞ்சது.பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணும்போது பக்கத்திலேயே இருந்து தேவையான இன்புட்ஸ் கொடுத்து கதைக்கான இசையை கேட்டு வாங்குவார்.  பல வருஷமாக சினிமாவில் இருக்கும் அவருடைய டெடிகேஷனை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும்.பொதுவாக வெற்றி பெற்றவர்கள் ஒரு கட்டத்தில் போதும், பரவாயில்லை, சமரசம் என்ற மனநிலையில் இருப்பார்கள். அவர் அப்படியல்ல.
ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் எடிட்டிங் என பிசியாக இருந்தாலும் முழு நாள் ஸ்டுடியோவில் இருந்து கரெக்ஷன் இருந்தால் சொல்வார். நடுராத்திரி 2 மணியைக் கடந்தாலும் வேலையை முடிச்சுட்டுதான் வீட்டுக்குப் போவார்.
மறுநாள் 6 மணிக்கு ஷூட்டிங் கிளம்பிடுவார். பல வெற்றிகளை சுவைத்திருந்தபோதும் இப்பவும் முதல் படம் டைரக்ட் பண்ற மாதிரிதான் ஒவ்வொரு படத்துக்கும் வேலை பார்க்கறார். பெஸ்ட் கொடுக்கணும்... பெஸ்ட் கொடுத்துகிட்டே இருக்கணும்னு அவர் மெனக்கெடுவது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. இன்ஸ்பிரேஷனா இருக்கு. சுந்தர்.சி - வடிவேலு காம்பினேஷன்ல காமெடி எப்படி வந்துள்ளது?
இதுக்கு நான் என்ன சொல்லணும்னு நினைக்கறீங்க! இப்பவும் டிரெண்டிங்ல இருப்பது இந்த காம்பினேஷன்ல வந்த காமெடிதான். டிவில இப்ப ‘வின்னர்’ டெலிகாஸ்ட் செய்தாலும் நல்ல டிஆர்பி வருது. காமெடி சேனல்ல இப்பவும் நாள்தோறும் இவங்க ஜோடிதான் பட்டையை கிளப்பிட்டு இருக்கு.
யூடியூப்ல அதிகளவு பார்க்கப்படுவது இந்த காம்பினேஷன்தான். ரீல்ஸ் முதல் மீம்ஸ் வரை ஆல் ஏரியா இவங்க கலாட்டாதான். அப்படிப்பட்ட ஜோடி 15 வருஷங்களுக்கு அப்புறம் திரும்பவும் கைகோர்த்திருக்குனா எவ்வளவு எக்சைட்மெண்ட் ஆக இருக்கும்! ரசிகர்களைப் போலவே எனக்கும் இருந்துச்சு. ஏன்னா, அடிப்படைல நானும் இந்த காம்பினேஷனுக்கு ஃபேன்.
படத்துல சுந்தர்.சி சாரும், வடிவேலுவும் பிடி மாஸ்டர்ஸ். இருவருக்குமிடையே யார் பெரியவர் என்ற போட்டி நடக்கும். அதுல யார் ஜெயிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன், காமெடி, லவ் கலந்து சொல்வதுதான் படத்தோட கதை.
வடிவேலு சார் காமெடி பேசப்படுமளவுக்கு வந்திருக்கு. நிஜமாகவே எக்ஸ்ட்ராடினரி. ‘வின்னர்’, ‘கிரி’ போன்ற படங்களில் பார்த்த வடிவேலுவை இதில் பார்க்கலாம். இன்னும் அழகா, இன்னும் மெருகா. அந்த வகைல வடிவேலு சாருக்கு மட்டுமல்ல எனக்கும் இது கம் பேக் படமாக இருக்கும். சில நிமிடங்கள் இடம்பெறும் விளம்பரங்களையே ஸ்கிப் செய்யும் நிலையில் நீங்கள் எந்த தைரியத்தில் 8 பாடல்கள் வைத்துள்ளீர்கள்? பாடல்கள் எல்லாமே கதையோடு கலந்திருக்கும் என்பதால் ரசிகர்களுக்கு களைப்பு தராது. பாடல்கள் எல்லாமே டிரெண்டிங்கில் இருப்பதே அதற்கு சாட்சி.
உங்களுடைய கிரியேட்டிவ் பிராசஸ் பற்றி சொல்லுங்களேன்?
கதை சொல்லும்போது எந்த மாதிரி சவுண்ட் கொடுக்கலாம், எந்த மாதிரி பாடல்கள் தரலாம், பின்னணி இசை எப்படித் தரலாம் என்ற விஷன் கிடைக்கும். ‘இன்டியூஷன்’ன்னு சொல்லலாம். அதைவெச்சுதான் ஒரு படத்துக்கான பாடல்கள் உருவாகும். முதல் முறை தோன்றும் சிந்தனை 100 சதவீதம் ஒர்க் அவுட்டாகும். நவீன இசை, டெக்னோ என்ற பெயரில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாத வகையில் இசையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளதே?
இப்போதுள்ள ஜெனரேஷன் சவுண்ட் அடிக்ஷன்ல இருக்கிறார்கள். அதை வைப் என்று சொல்கிறோம். சவுண்டும் சேர்ந்ததுதான் ‘வைப்’. பாடல் வரிகளிலும் ‘வைப்’ கலந்திருக்கும். இசை சேரும்போது அது பேசப்படும்.
இப்போது புரியாதளவுக்கு பாடல்கள் வெளிவருகிறது என்று சொல்லமுடியாது. ராப் மியூசிக்கை பொறுத்தவரை ஸ்பீடாக இருக்கும். அதுதான் பேட்டர்ன், அதுதான் ஸ்டைல் ஆஃப் மியூசிக். மெலடி பாடல்கள் புரியவில்லை என்று சொன்னால் அது கவனத்துக்குரியது என்று சொல்லலாம். சில வருடங்களுக்கு முன் பாடல்களில் தொகையறா, பல்லவி, அனுபல்லவி, இரண்டு அல்லது மூன்று சரணங்கள் இடம்பெற்ற நிலையில் இப்போதுள்ள பாடல்கள் துண்டுப் பாடல்களாக மாறியதற்கு காரணம் என்ன?
வெஸ்டர்ன் கல்ச்சருக்கு என்று கட்டமைப்பு உண்டு. இன்ட்ரோ, வெர்ஸ்-1, பிரிட்ஜ், கோரஸ்-1, மீண்டும் இன்ட்ரோ-2, வெர்ஸ்-2 என்று ரிப்பீட் ஆகும். இது பாப் மியூசிக் கட்டமைப்பு. இதுதான் இப்போது தமிழில் வந்திருக்கு. பல்லவி மாதிரி ஆரம்பிச்சு மெயின் கோரஸாக மாறும். கோரஸ் முடிஞ்சதும் மீண்டும் பல்லவி ஆரம்பிக்கும்.
இதில் மியூசிக் அல்லது வார்த்தைகளில் மாற்றங்கள் இருக்கும். இந்த ஸ்டைலில் எது பல்லவி, எது சரணம் என்று தெரியாது. ஒரே மாதிரியான இசையை உச்சத்துக்கு கொண்டுபோய் மீண்டும் ரிப்பீட் பண்ணுவதுதான் இப்போதைய இசையில் நடக்கிறது. இது பாப் மியூசிக் ஸ்டைல். அந்த ஸ்டைலில்தான் தமிழில் பல பாடல்கள் வெளிவருகின்றன.
பாகவதர் காலத்தில் சினி மியூசிக் என்பது கர்நாடக ஸ்டைலில் இருக்கும். அப்போதுள்ள பாடல்களில் பல்லவி, அனுபல்லவி என்று கர்நாடக கட்டமைப்பில் பாடல்கள் வந்தன. அதுதான் சினிமாவில் இடம் பெற்றது. அதை ஜி.ராமநாதன், ஃபிலிம் ஸ்டைலுக்கு மாற்றினார். டியூன் கர்நாடக ஸ்டைலில் இருக்கும். ஆனால், கட்டமைப்பு மாறியிருக்கும். எம்.எஸ்.வி.சார் அதை எளிமைப்படுத்தி மெல்லிசையாகக் கொடுத்தார். இளையராஜா சார் காலத்திலும் மூன்று சரணங்கள் இடம் பெற்ற பாடல்கள் வந்துள்ளன. இப்போது பாப் ஸ்டைலில் ஒரு சரணம்தான் இடம் பெறுகிறது.கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி போன்ற பிரபல இயக்குநர்களுடன் வேலை செய்யும்போது சவால்கள் இருக்குமா?
பிரபல இயக்குநர்கள் எல்லோருமே பல லெஜெண்ட் இசையமைப்பாளர்களிடம் வேலைபார்த்தவர்கள். புதியவர்களிடம் வேலை செய்யும்போது ஆரம்ப கட்டத்திலேயே இசையமைப்பாளரின் திறமையை அவர்களால் ஜட்ஜ் பண்ண முடியும்.
‘ஹிட் லிஸ்ட்’ படத்துக்காக கொடுத்த டியூனை முதல் முறை கேட்ட உடனே கே.எஸ்.ரவிக்குமார் சார் ஓகே சொன்னார். ‘பெரிய இசைமைப்பாளர்களிடம் டியூன் பிடிக்கவில்லை என்றால் கேட்டு வாங்கிவிடுவார். ஆனால், உங்கள் டியூனை முதல் தடவை கேட்கும்போதே ஓகே சொல்லியிருப்பது பெரிய ஆச்சர்யம்’ என்று அதன் இயக்குநர் சொன்னார். சுந்தர்.சி சாரைப் பொறுத்தவரை மெலடி பாடல்கள் பண்ணும்போது உங்க ஸ்டைலுக்கு விட்டுடுறேன்னு சொல்லி முழு சுதந்திரம் தருவார். கமர்ஷியல் பாடல்களை மட்டும் அவருடைய ஸ்டைலுக்கு கேட்டு வாங்குவார். அதை நேரிடையாக சொல்லாமல் சின்ன பசங்களுக்கு கதை சொல்லி புரிய வைப்பதுபோல் ஒரு ஸ்டோரியை சொல்லி எதுக்காக இந்த ஸ்டோரி என்று புரியவைப்பார்.
நவீன இசையில் இசையமைப்பாளர்கள் தங்கள் தனித்துவத்தை தக்க வைக்க முடிகிறதா?
டிரெண்டிங்,சவுண்ட் என்பது டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டது. டியூன் எப்போதும் ஒரே மாதிரிதான். அது மாறாது. வெற்றி பெற்ற இசையமைப்பாளர்களின் கம்போஸிங் எப்போதும் பேசப்படும்.
டெக்னிக்கல் அம்சங்கள், சவுண்ட் ஜானர் மாறலாம். டியூன் வேல்யூ மாறாது. டியூன், வரிகள் சேர்ந்து வரும்போதுதான் பாடல் ஹிட்டாகும். சவுண்டை மட்டும் வெச்சு ரொம்ப நேரம் ரசிக்க முடியாது. சவுண்டுடன் ஹியூமன் குரல் சேர்ந்தால்தான் அந்தப் பாடல் பேசப்படும்.
எஸ்.ராஜா
|