காம்ப்ளிக்கு கைகொடுக்கும் கவாஸ்கர்..!
கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியை தெரியாதவர்களே இருக்கமுடியாது. 1990களில் இந்திய அணியில் அதிரடி பேட்டிங் மூலம் அன்றைய கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.அப்படிப்பட்டவர் இன்று உடல்நலப் பிரச்னையால் கடும் அவதிப்பட்டு வருகிறார்.  இந்நிலையில் அவருக்கு உதவிக்கரம் நீட்டி நம்பிக்கை அளித்திருக்கிறார் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். 1996ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பையின் அரையிறுதியில் இலங்கை யுடன் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து தள்ளாடியபோது ரசிகர்கள் கலவரம் செய்தனர்.  இதனால், போட்டி நிறுத்தப்பட்டு இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது களத்தில் தனியொருவனாகப் போராட தயாராக இருந்த காம்ப்ளி கண்கலங்கிபடியே வெளியேறியது இன்றும் பலரின் நினைவுகளில் நிற்கும் காட்சி.இப்படி கிரிக்கெட்டே உயிர்மூச்சாக இருந்த வினோத் காம்ப்ளி, கிரிக்கெட்டிலிருந்து தன்னைத்தானே அவுட்டாக்கிக் கொண்டது காலத்தின் விநோதம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல?
 மும்பையில் 1972ம் ஆண்டு பிறந்தவர் வினோத் காம்ப்ளி. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல. இருவரும் பள்ளி நாட்களிலிருந்தே ஒன்றாக கிரிக்கெட் ஆடியவர்கள். இருவருமே ராமகாந்த் விட்டல் அச்ரேக்கரின் பிரதான சீடர்கள். பள்ளியில் படிக்கும்போது செயிண்ட் சேவியர் பள்ளிக்கு எதிராக இருவரும் இணைந்து 664 ரன்கள் குவித்தது இன்றும்கூட ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.
இதில் வினோத் காம்ப்ளியின் கணக்கு மட்டும் 338 ரன்கள். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்கமுடியாமல் தவித்ததால் முதல் இன்னிங்ஸை அவர்களாகவே டிக்ளேரும் செய்தனர். பின்னர் 1989ம் ஆண்டு இந்தியாவில் நடந்த நேரு கோப்பைக்கு முன்பாக நடந்த வார்ம்அப் போட்டி ஒன்றில் இங்கிலாந்திற்கு எதிராக 16 வயது நிரம்பிய சச்சினும், 17 வயது நிரம்பிய காம்ப்ளியும் களம் இறங்கினர். இருவருமே அரைசதம் அடித்தனர். காம்ப்ளி இதில் 77 ரன்கள் குவித்தார்.
இதற்கடுத்த சில நாட்களிலேயே சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இந்திய அணிக்குத் தேர்வாக வினோத் காம்ப்ளி இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியிருந்தது.அவர் 1991ம் ஆண்டு வில்ஸ் டிராபியில் பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவருடனே இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் நாத்தும் அறிமுகமானார்.
இந்த சீரிஸில் சிறப்பாகவே விளையாடினார் காம்ப்ளி. பின்னர் 1993ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்டில் அறிமுகமானார். இதில் மூன்றாவது டெஸ்டில் 224 ரன்கள் எடுத்து தன் திறமையை உலகிற்கு பறைசாற்றினார். இதற்கு அடுத்த மாதமே ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்டில் 227 ரன்கள் குவித்தார்.தொடர்ந்து இலங்கையில் நடந்த அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் 125, 120 ரன்கள் குவித்தார்.
இப்படி அடுத்தடுத்து நடந்த டெஸ்ட் தொடரில் மூன்று நாடுகளுடன் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமை யைப்பெற்றார் காம்ப்ளி. ஆனால் 1995ம் ஆண்டுக்குப் பிறகு அவர் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. வெறும் இரண்டரை ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் மாஸ் காட்டிய இந்திய வீரர் என்றால் அது காம்ப்ளிதான். 21 வயதில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். 23 வயதில் அவரின்டெஸ்ட்போட்டி சகாப்தம் முடிந்தது.
மொத்தமாக அவர் 17 டெஸ்ட்களில் விளையாடி 4 சதங்கள், 3 அரைசதங்கள் என 1,084 ரன்கள் குவித்தார். இதனுடன் ஒருநாள் போட்டிகளிலும் கலக்கி வந்தார். தொடர்ந்து 9 ஆண்டுகள் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்தார்.
இதில் 1992, 1996ம் ஆண்டுகளின் உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றார். மொத்தமாக ஒருநாள் போட்டியில் 2 சதங்கள், 14 அரைசதங்கள் எடுத்தார். 2000ம் ஆண்டு ஸ்ரீலங்கா அணியுடன் விளையாடியதுதான் அவரின் கடைசி ஒருநாள் போட்டி. அப்போது காம்ப்ளிக்கு வயது ஜஸ்ட் 28. இதன்பிறகு அவர் அணியில் இடம்பெறவே இல்லை. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் ஏற்றம் கண்டதுபோல் காம்ப்ளியால் முடியவில்லை. இத்தனைக்கும் அன்று இந்திய அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களையும், இடதுகை பேட்ஸ்மேன்களையும் காண்பது மிக அரிது.இதனை காம்ப்ளி நிரப்புவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அந்த நம்பிக்கையை உயிர்ப்பிக்கும் வகையில் காம்ப்ளியும் சிறப்பாகவே களத்தில் செயல்பட்டார். ஆனாலும் ஏனோ அது நீடிக்கவில்லை.
இதன்பிறகு அவர் முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்னர் ஆண்ட்ரியா ஹெவிட் என்ற மாடலை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
இந்நிலையில்தான் சமீபத்தில் இவரும் விவாகரத்துக் கோரி மனுதாக்கல் செய்தார். காரணம் காம்ப்ளி குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தெரிவித்தார் ஆண்ட்ரியா. மதுப்பழக்கத்திலிருந்து வெளியே வர 14 முறை அவர் மறுவாழ்வு மையத்திற்குச் சென்று திரும்பியதாகக் குறிப்பிட்டார்.
இதனாலேயே அவர் விவாகரத்து கோரினார். ஆனால் யாரும் உதவியற்ற நிலையில் காம்ப்ளி இருப்பதைக் கண்டு மனம் மாறிய ஆண்ட்ரியா அந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். காம்ப்ளியின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனத்திற்கு அவருக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட காயங்கள் மட்டும் காரணமாக இருக்கவில்லை. மதுப்பழக்கமும் ஒரு காரணம் என்கின்றன செய்திகள்.
இந்நேரத்தில் இந்திய அணியில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற இளம் வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் காம்ப்ளிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. பிறகு 2011ம் ஆண்டுடன் காம்ப்ளி ஓய்வை அறிவித்தார். இதற்கிடையே பயிற்சியாளராக வும் மாறினார் காம்ப்ளி. டெண்டுல்கரின் மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.
2013ம் ஆண்டு முதல்முறையாகஅவருக்கு உடல்நலப் பிரச்னை வந்தது. ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. கடந்தாண்டு அவரின் உடல்நிலை இன்னும் பின்னடைவைச் சந்தித்த வீடியோக்கள் வெளியாகின. அதில் நடப்பதற்கே சிரமப்படும் காம்ப்ளிைய சிலர் கைத்தாங்கலாக தூக்கும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தவிர, அவர் சிறுநீரகத் தொற்று காரணமாக மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தாண்டுதொடக்கத்தில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தின் 50வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டார் காம்ப்ளி. அதில் சுனில் கவாஸ்கரும் கலந்துகொண்டார். காம்ப்ளியின் உடல்நிலையைப் பற்றிக் கவலை கொண்ட கவாஸ்கர் அவரின் மருத்துவர்களிடம் பேசினார். உடனடியாக தன்னுடைய ‘த சாம்ப்ஸ்’ பவுண்டேஷன் அமைப்பில் பேசி அவருக்கு நிதியுதவியும், மருத்துவ உதவியும் அளிக்க பரிந்துரைத்தார்.
கடந்த 1999ம் ஆண்டு சாம்ப்ஸ் (CHAMPS) பவுண்டேஷனைத் தொடங்கி நடத்தி வருகிறார் கவாஸ்கர். இதன்மூலம் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்கிறார். இந்த அமைப்பிலிருந்து காம்ப்ளிக்கு மாதம் நிதியுதவியாக 30 ஆயிரம் ரூபாயும், ஆண்டிற்கு 3 லட்சம் ரூபாய் மருத்துவச் செலவிற்கும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார் கவாஸ்கர்.
பேராச்சி கண்ணன்
|