நடப்புல எலி... கண்ணி வெடியை கண்டறிவதில் புலி!
மக்கள் மத்தியில் எலிகளுக்கு நல்ல பெயர் கிடையாது. எலிகள் என்றாலே தொல்லை என்பதுதான் பொதுவாக நிலவும் ஒரு கருத்து. இந்நிலையில் ரோனின் என்று அழைக்கப்படும் எலிக்கு நாலாப் பக்கமிருந்தும் புகழும், நற்பெயரும் கிடைத்து வருகிறது.
 அப்படி ரோனின் என்ன செய்துவிட்டது என்கிறீர்களா?
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான நாடு, டான்சானியா. அடர்ந்த வனப் பகுதிகளுக்காகவும், வன விலங்குகளுக்காகவும் பெயர் பெற்ற நாடு இது.ஐந்து வருடங்களுக்கு முன்பு இங்கேதான் பிறந்தது, ரோனின். வழக்கமான எலிகளை விட பெரியது இது. ரோனின் நீளம் இரண்டு அடிக்கும் அதிகம். எடை 1.25 கிலோ.உலகமெங்கும் போர்கள் நடந்த இடங்களில் இருக்கும் முக்கிய பிரச்னை, நிலத்துக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிதான்.
 முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடந்த காலங்களில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளில், பாதிக்கும் மேல் அதே இடத்தில் இன்றும் இருக்கின்றன. ஆனால், எந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆராய்ந்துதான் கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை ஏமாந்து கண்ணி வெடி இருக்கும் இடத்தில் கால் வைத்து, அதை அழுத்திவிட்டால் மரணம்தான்.
 அந்தளவுக்கு சக்தி வாய்ந்தது கண்ணி வெடி. எப்போதோ புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடியால், இன்றும் கூட மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். உதாரணத்துக்கு, கடந்த 1979ம் வருடத்திலிருந்து இன்று வரை, கம்போடியாவில் மட்டும் கண்ணி வெடியால் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். தவிர, ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, உடல் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் கண்ணி வெடி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதை செயலிழக்கச் செய்வது கடினமான, ஆபத்தான ஒரு வேலை. இந்த வேலையில் உயிர் ஆபத்து இருப்பதால் மனிதர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதையும் மீறி சிலர் மட்டுமே மக்களின் நலனுக்கான தங்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் கண்ணி வெடியை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
“உலகம் முழுவதும் உள்ள 60 நாடுகளில் சுமார் 11 கோடி கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன...” என்கிறது கண்ணிவெடியைச் செயலிழக்கச் செய்யும் பணிகளைச் செய்து வரும் ‘அபோபோ’ என்கிற தொண்டு நிறுவனம். தவிர, கடந்த 2023ம் வருடத்தில் மட்டும் கண்ணி வெடியில் சிக்கி, 5,757 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இதில் 37 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் புதையுண்டு கிடக்கும் கண்ணி வெடிகளைச் செயலிழக்கச் செய்வதற்கான மனித பலம் இல்லை. மனிதர்களுக்கு மாற்றாக எலிகளுக்குப் பயிற்சி கொடுத்து கண்ணி வெடியை அகற்றி வருகிறது ‘அபோபோ’. இப்படி நூற்றுக்கும் மேலான எலிகளுக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறது இந்த தொண்டு நிறுவனம். ‘அபோபோ’வில் பயிற்சி பெற்ற எலிகளில் முதன்மையானது, ரோனின். வாசனையை வைத்தே கண்ணி வெடி இருக்கும் இடத்தை துல்லியமாக அடையாளம் காட்டக்கூடிய திறன் வாய்ந்தது, ரோனின். அதே நேரத்தில் ரோனின் எடை மிகவும் குறைவு என்பதால் கண்ணி வெடியின் மீது ரோனின் நின்று, அழுத்தினால் கூட வெடிக்காது. அதனால் ரோனினுக்குக் கண்ணி வெடியால் ஆபத்தும் இல்லை.
டென்னிஸ் மைதானம் அளவுள்ள இடத்தில் எங்கேயாவது கண்ணி வெடி இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ரோனினுக்கு 30 நிமிடங்களே போதுமானது. அந்தளவுக்கு வேகமாகவும், விவேகமாகவும் செயல்படக்கூடியது ரோனின். இதே அளவுள்ள இடத்தில் மனிதன் சோதனை செய்ய நாள் கணக்காகும் என்கின்றனர்.
மட்டுமல்ல, ரோனினின் செயல்பாடு எலிகளின் தனித்துவமான திறமையை உலகுக்குக் காட்டும் கண்ணாடி போலிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். தவிர, பல துறைகளில் எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தொற்று நோய்கள் பரவுவதைக் கண்காணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காச நோயைக் கண்டுபிடிக்கவும் மருத்துவத்துறையில் எலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் அதிக கண்ணி வெடிகளைக் கண்டறிந்த எலி என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது, ரோனின். கம்போடியாவில் மட்டுமே சுமார் 60 லட்சம் கண்ணி வெடிகள் இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டிலிருந்து கண்ணி வெடியைக் கண்டுபிடிக்கும் சேவையைச் செய்து வருகிறது ரோனின்.
இதுவரை கம்போடியாவில் புதைக்கப்பட்டிருந்த 109 கண்ணிவெடிகள் மற்றும் 15 வெடிகுண்டுகளைக் கண்டறிந்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது ரோனின். இதற்கு முன்பு மகாவா என்ற எலி 71 கண்ணி வெடிகளையும், 38 வெடிப் பொருட்களையும் கண்டுபிடித்து தந்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்தது. கடந்த 2022ம் வருடம் மகாவா இறந்துவிட்டது.
த.சக்திவேல்
|