நேற்று குட்டி பிரபாஸ், குட்டி பிருத்விராஜ்... இன்று s/o AK!
‘‘விஹான காணோம்...’’ த்ரிஷா சொல்லும் இந்த வார்த்தைதான் மொத்த திரைப்படத்தின் போக்கையும் மாற்றி திரையில் தீப்பிடிக்க வைக்கும். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தின் மகனாக விஹான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கார்த்திகேயா தேவ்.  இந்தப் படம் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமாகி இருக்கும் கார்த்திகேயா, ஏற்கனவே மாஸ் படங்களில் கால் பதித்துவிட்ட பான் இந்தியா ஸ்டார்.‘சலார்’ படத்தில் டீன் ஏஜ் பிரபாஸ், ‘லூசிஃபர்2: எம்புரான்’ படத்தில் டீன் ஏஜ் பிருத்விராஜ் என்று சொன்னவுடன் படம் பார்த்த பலருக்கும் சட்டென ஞாபகம் வருகிறதா? இது மட்டுமல்லாமல் சுமார் பத்துக்கும் மேலான படங்களில் நடித்திருக்கிறார் கார்த்திகேயா தேவ். 
‘‘நான் இப்பதான் +1 முடிச்சு +2 போறேன். வயசு 16...’’ இன்னமும் மிச்சம் இருக்கும் குழந்தைத்தனத்துடன் பேசத் துவங்கினார் கார்த்திகேயா.‘‘ஆந்திரா காகுளத்தில் பிறந்தேன். பிரகாசம் மாவட்டம்தான் எனக்கு பூர்வீகம். அப்பாவும் அம்மாவும் ஐடியில் வேலை செய்யறாங்க. கொரோனா ஆரம்பிக்கிறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் என்னுடைய கரியர் துவங்குச்சு.
சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடிக்கணும் என்பதுதான் ஆசை. ஆரம்ப கட்டமா காஸ்டிங் டைரக்டர்கள் மூலமாக வாய்ப்பு கிடைக்க ஆரம்பிச்சு சில விளம்பரங்கள், போட்டோ ஷூட் வாய்ப்புகள் தேடி வந்துச்சு. இதற்கிடையில் கொரோனா பிரேக்...’’ என்னும் கார்த்திகேயா தொடர்ந்து நடிப்புக்கான பயிற்சி எடுத்துக் கொள்ள துவங்கியிருக்கிறார்.
‘‘நடிப்புதான் முதன்மைனு முடிவு செய்துட்டேன். அப்பாவும் அம்மாவும் அதற்கு பச்சைக் கொடி காண்பிச்சுட்டாங்க. சின்சியரா நடிப்பு கத்துக்கிட்டேன். தொடர்ந்து பிய்யாலா வெங்கட் பாப்பா ராவ் ஐஏஎஸ் டைரக்ட் செய்த ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தில் நடிச்சேன். அந்தப் படத்தில் ஸ்ரேயா மேடம் ஹீரோயின்.
இசைஞானி இளையராஜா சார் இசை. அந்தப் படத்திற்கு முன்பு வரை சின்னச் சின்ன கேரக்டர்களில்தான் நடிச்சிட்டு இருந்தேன். முழுமையான ஒரு கதாபாத்திரமா தேடி வந்தது இந்த ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தில்தான்...’’ என்ற கார்த்திகேயா, முதல் பான் இந்தியா திரைப்படம் அமைந்த விதம் பற்றித் தொடர்ந்தார்.
‘‘சினிமா மேல் எனக்கு ஆர்வம் அதிகமானது ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தில்தான். நானும் அந்த நேரம் ஸ்கூலில் படிச்சிட்டு இருந்தேன். படம் முழுக்க நிறைய குழந்தைகள். ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
அதேபோல சினிமா ஆர்வத்துடன் எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வாய்ப்பும் என்னைத் தேடி வந்துச்சு. காஸ்டிங் டைரக்டர்கள்கிட்ட புகைப்படம் கொடுத்து வைத்திருந்தேன். அவங்க ஒவ்வொரு படமா கூப்பிட்டாங்க. மாடலிங் சான்ஸ் கூட அவங்க கொடுத்ததுதான்.
ஆனா, எல்லார்கிட்டயும் என்னுடைய 12 வயசு போட்டோதான் இருந்துச்சு. ‘சலார்’ கதைப்படி 14 வயசு பையன் தேவை. அதனால் என்னை காத்திருப்பில் வச்சிருந்தாங்க. கடைசி நிமிஷத்தில்தான் இந்த பையனே ஓகேனு முடிவு செய்து என்னைக் கூப்பிட்டாங்க.
அந்த கேரக்டருக்கு மட்டும் சுமார் 80க்கும் மேலான ப்ரொபைல்கள் வந்திருக்கு. அதில் செலக்ட் ஆனவன் நான்தான்னு அங்கே செட்டில் இருந்தவங்க சொன்னாங்க. 1% கூட வாய்ப்பு கிடைக்காதுனுதான் நினைச்சிருந்தேன்.
ஒன்றரை மாசம் இருக்கும்... டைரக்டர் பிரசாந்த் நீல் சார் நேரடியா கூப்பிட்டு ‘உனக்கு ரிகர்சல் இருக்கு... வந்திடு’னு சொன்னார். ‘ஆங், எந்த பிரசாந்த் நீல் சார்’னு கேட்டேன். சிரிச்சார். ஏதோ பசங்க என்னை கலாய்க்கிறாங்கனு நினைச்சுட்டேன்.
போனதுக்கு பிறகு கூட எனக்கு நம்பிக்கை வரலை. இதுவும் ஒருவிதமான டெஸ்ட் மாதிரிதான்னு நினைச்சேன். ஆனா, அந்த செகண்ட் ஆரம்பிச்சது மேஜிக் என் வாழ்க்கைல’’ நெகிழும் கார்த்திகேயா, ‘எம்புரான்’, ‘குட் பேட் அக்லி’ வாய்ப்பு கிடைத்தது எப்படி என கண்கள் விரிய விவரித்தார்.
‘‘‘சலார்’ பார்த்துதான் ‘எம்புரான்’ திரைப்படம் தேடிவந்தது. ஆக்சுவலா ‘சலார்’ ப்ரொமோஷன் டைம்ல கேஷுவலா ஒரு காரியம் செய்தேன். ஒரு இன்டர்வியூல நானி சார் ஒரு டயலாக் பேசியிருப்பார்.
அதை நான் சும்மா ஃபன்னுக்கு சொல்ல... அது அப்படியே ரீல்ஸா மாறி வைரலாச்சு.அந்த ரீல்ஸை பார்த்துதான் ஆதிக் சார் என்னை ‘குட் பேட் அக்லி’க்கு கூப்பிட்டார்...’’ என்ற கார்த்திகேயா, ஷூட்டிங் சமயத்தில் அஜித் சொன்ன அட்வைஸை பகிர்ந்து கொண்டார்.
‘‘‘எதற்கும் அவசரப்படாதே...’ இதுதான் அஜித் சார் சொன்ன முக்கியமான அட்வைஸ். அதைத் தாண்டி நிறைய விஷயங்கள் என்னிடம் பேசினார். ‘உனக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. அதை சரியா சேனலைஸ் செய்து அவசரப்படாமல் கரியரை வளர்த்துக்க...’; ‘இனிமே வரப்போற அத்தனை கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து யோசிச்சு நடி. அதேபோல அதிகம் இப்போ எக்ஸ்போஸ் ஆக வேண்டாம்.
படிப்பு முக்கியம்...’ இப்படி நிறைய ஆலோசனைகள் வழங்கினார். ரொம்ப அமைதியா அவரை ஷூட்டிங் முழுக்க கவனிச்சிட்டே இருந்தேன். ஒருத்தர் ஏன் இவ்வளவு பெரிய ஹீரோ அப்படிங்கறதுக்கு அவரைப் பார்த்தாலே நமக்கு ஆட்டோமேட்டிக்கா பயிற்சி கிடைக்கும்...’’ என்றவர் தனது குடும்பம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
‘‘அப்பா நாராயணா, அம்மா கவிதா ரெண்டு பேரும் என்னுடைய சினிமா மற்றும் படிப்பு இரண்டையும் பார்த்துக்கிறாங்க. அம்மாதான் கிட்டத்தட்ட என்னுடைய மேனேஜர். என்னுடைய கால்ஷீட், பேட்டிகள், எல்லாத்தையும் அம்மாதான் ஒழுங்குபடுத்தறாங்க.
அம்மா மாதிரி கடுமையான உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. இத்தனைக்கும் ஐடியில் வேலை எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும். அதிலும் கவனம் செலுத்திக்கிட்டே என்னுடைய கரியர், வீட்டுப் பொறுப்பு எல்லாத்தையும் கவனிச்சுக்கறாங்க. படிப்பை பொருத்தவரை பிசினஸ்தான் எதிர்காலத் திட்டம். ‘டுக் டுக்’ படம் போன மாதம் தெலுங்கில் வெளியாகி அதுவும் ஹிட். ரேட்டிங் கூட நல்லா வந்திருக்கு. தெலுங்கில் நிறைய படங்கள் ஒப்பந்தமாகி இருக்கேன். ஆனா, எதுவுமே இப்போதைக்கு சொல்ல முடியாத சூழல். தமிழிலும் இரண்டு படங்கள் ஓகே செய்திருக்கேன். கூடிய சீக்கிரம் படக்குழு அறிவிப்பாங்க...’’ கண்சிமிட்டுகிறார் கார்த்திகேயா.
ஷாலினி நியூட்டன்
|