பிரதமர் சென்ற ஃபோர்ஸ் ஒன் ரயில்!



வெளிநாடுகளுக்கு செல்லும்போது வழக்கமாக விமானங்களை பயன்படுத்தும் பிரதமர் மோடி, முதல் முறையாக உக்ரைன் நாட்டுக்கு ரயிலில் சென்றிருக்கிறார்.
ஆம். 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அந்நாட்டுக்கு சென்ற இந்திய பிரதமரான மோடி, போலந்தில் இருந்து ‘ஃபோர்ஸ் ஒன்’ என்ற ரயிலில் பயணித்து உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குச் சென்றிருக்கிறார்.

போலந்தில் இருந்து கீவ் நகருக்கு 20 மணி நேரப் பயணமாம். போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளின் வழியாகச் செல்லும் இந்த ரயிலில், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு வசதிகள், வேலை மற்றும் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. பொதுவாக ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது விமானங்களைத்தான் பயன்படுத்துவார்கள். 
ஆனால், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு அந்நாட்டுக்குச் செல்லும் தலைவர்கள் பலரும் விமானங்களைவிட ரயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதிலும் ‘ரயில் ஃபோர்ஸ் ஒன்’ ரயிலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உக்ரைனின் விமான நிலையங்கள் பலவும் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டதும், உக்ரைன் நாட்டின் வான் எல்லை அத்தனை பாதுகாப்பாக இல்லை என்பதும்தான் இதற்கு முக்கிய காரணம்.
பிரதமர் மோடிக்கு முன்னதாக அந்நாட்டுக்குச் சென்ற ஃபிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி மற்றும் கடந்த ஆண்டு பிப்ரவரியில்சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரும் இதே ‘ரயில் ஃபோர்ஸ் ஒன்’ ரயிலில்தான் உக்ரைன் சென்றனர்.

கிரீமியா நகருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2014ம் ஆண்டு இந்த ‘ரயில் ஃபோர்ஸ் ஒன்’ உருவாக்கப்பட்டது. இந்த ரயிலானது, நடமாடும் நட்சத்திர ஹோட்டல் போல அழகான மற்றும் நவீன உட்புற வசதிகளைக் கொண்டிருக்கிறது. நீண்ட நேரப் பயணம் என்பதால் ரயிலில் பயணிக்கும் முக்கிய தலைவர்கள் அதிலேயே முக்கியமான கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக பெரிய அளவில் மேஜை, சோஃபா, டிவி மற்றும் நன்றாக ஓய்வெடுப்பதற்கு அதிநவீன படுக்கை வசதிகளும் இதனுள் இருக்கின்றன.

ஜான்சி