வட ஆற்காடு மொழி பழமையானது... அதேசமயம் உயிர்ப்பானது...
சொல்கிறார் தங்கலான் வசனகர்த்தாவும் புகழ்பெற்ற எழுத்தாளருமான அழகிய பெரியவன்
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் ‘தங்கலான்’. படம் பார்த்த ரசிகர்களுக்கு வட தமிழகத்தின் வட்டார மொழி வசனங்கள் புது அனுபவத்தைக் கொடுத்தன. அதை எழுதியவர் அழகிய பெரியவன். தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான இவருக்கு ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர், மேடைப் பேச்சாளர், வசனகர்த்தா என பன்முகம் உண்டு. பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர் ‘தகப்பன் கொடி’, ‘உனக்கும் எனக்குமான சொல்’ ஆகிய படைப்புகளுக்காக தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
அரவிந்தன் எப்படி அழகிய பெரியவனாக மாறினார்?
சொந்த ஊர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு. எளிமையான குடும்பம். எழுத ஆரம்பிச்ச பிறகு எனக்கு நானே சூட்டிக்கொண்ட பேர் அழகிய பெரியவன். கல்லூரி நாட்களுக்கு முன்பே எழுத ஆரம்பிச்சுட்டேன். அப்போது வானொலி, தொலைக்காட்சிகளின் பயன்பாடு குறைவு. செய்தித்தாள், நூலகம் வழியாகத் தான் வெளியுலகத் தொடர்பு கிடைச்சது. எழுத்தின் மீதான ஆர்வத்துக்கு புத்தக வாசிப்புதான் தூண்டுதலாக இருந்துச்சு. படிப்பு முடிஞ்சதும் ஆசிரியர் வேலையில் சேர்ந்தேன். எழுத்துலகில் உங்களுக்கு அடையாளத்தைக் கொடுத்த படைப்பு எது?
‘தீட்டு’, ‘நீ நிகழ்ந்தபோது’ ஆகிய இரண்டு படைப்புகளும் 2000ம் ஆண்டு வெளியானது. அப்போது ஆரம்பித்த எழுத்துப் பணி இப்போதும் தொடர்கிறது. 30 நூல்கள், 100 சிறுகதைகள், 4 நாவல்கள், ஏராளமான கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
என்னுடைய மனதுக்கு நெருக்கமான நூல் என்றால் ‘தீட்டு’, ‘நீ நிகழ்ந்தபோது’. அவ்விரண்டு நூல்கள்தான் எனக்கு எழுத்தாளனாக பேர் வாங்கித் தந்ததோடு இலக்கிய உலகின் கவனத்தையும் என் பக்கமாகத் திருப்பியது.
உங்கள் படைப்புகள் தலித் மக்களுக்கான குரலாக மட்டுமே வகைப்படுத்துகிறதா?
தலித் எழுத்து என்பது பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகவும், அடையாளப்படுத்துவதற்காகவும் உருவான வகைப்பாடு. 90களில் டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின்போதுதான் அப்படி ஒரு வகைமை பேசப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பே சங்க இலக்கியங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பல புலவர்கள் தலித் மக்களுக்காக எழுதியுள்ளார்கள். அப்படியொரு மரபு இருக்கிறது. தொன்மை தமிழ் சமூகம் சாதீய பாகுபாடு பார்க்கும் சமூகமாக அறியப்படவில்லை. சாதீய பாகுபாடு, வர்ணக் கொள்கைகள் பிற்பாடு வந்தன.
வட தமிழகத்தில் இருக்கும் வர்ண அமைப்புகளை அப்படியே தமிழ் சமூகத்துக்குள் கொண்டு வந்து பொருத்த முடியாது. ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து பலர் எழுதியுள்ளார்கள். நாளடைவில் அதன் விகிதாசாரம் குறைந்தபோது நவீன இலக்கிய படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன.
அதை எழுதியவர்கள் மேட்டுக்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது பிரதிநிதித்துவத்துக் காகவும், அடையாளத்துக்காகவும் மட்டும் எழுதாமல், சரியாக பதிவு செய்யாதது, இருட்டடிப்பு, தவறான சித்தரிப்பு என தவறுகள் நடந்துள்ளன.
அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் தலித் இலக்கியம் ஒரு வகைப்பாடாக வந்தது. என்னைக் கேட்டால் அந்த அடையாளத்தோடு மட்டும் அடங்கிக் கொள்ளவோ, சுருக்கிக் கொள்ளவோ விருப்பமில்லை. நான் தமிழ் எழுத்தாளன்.எல்லா எழுத்தாளர்களுக்கும் இருப்பதுபோல் எனக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. எனக்கென ஒரு வேர், மரபு உள்ளது. அந்த வேர், மரபின்படிதான் எழுதுகிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல் என்னை பாதிக்கும் அத்தனை அம்சங்களையும் என்னுடைய எழுத்தில் கொண்டு வருகிறேன். அப்படி சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், சமூக அவலங்கள் என பல தளங்களில் எழுதுகிறேன். அதுமட்டுமல்ல, எழுத்தாளனாக அறச் சீற்றம் உருவாகும்போது அதை எழுதுகிறேன். நான் எழுதுவது தமிழ் இலக்கியம். சினிமா உலகிற்கு எப்படி வந்தீர்கள்?
சிறுவயதில் அம்மா, பாட்டியோடு திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பேன். அந்த அனுபவம் எழுத்தாளனாக மாறியதும் பாடல் எழுதவேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுத்தது.
சில நண்பர்கள் ‘உணர்வுபூர்வமாக கதை எழுதுகிறாய், சினிமா கதாசிரியனாக முயற்சிக்கலாமே’ என்றனர்.
சினிமாவுலகில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்தாலும் வாய்ப்பு கேட்டதில்லை. எனக்கு வந்த வாய்ப்புகளில் பங்கு கொண்டுள்ளேன். என்னுடைய சிறுகதைகள் ‘நடந்த கதை’, ‘கண்காணிக்கும் மரம்’ ஆகியவை குறும்படங்களாக வந்துள்ளதோடு பல விருதுகள் வென்றுள்ளன. ‘மனுஷங்கடா’ என்ற படத்துக்கு இணை திரைக்கதை எழுதியுள்ளேன். தமிழ் இயக்கிய ‘எலக்ஷன்’ படத்துக்கு வசனம் எழுதினேன். ‘தங்கலான்’ வாய்ப்பு எதிர்பார்த்தீர்களா?
பா.இரஞ்சித் என் படைப்புகளை வாசித்துள்ளார். ‘மெட்ராஸ்’ வெளியான கால கட்டத்திலிருந்து பழக்கம். பேச்சாளர்களாக பல மேடைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
‘தங்கலான்’ படம் எடுக்கிறார் என்று தெரியும். ஆனால், நான் எழுதுவேன் என்று தெரியாது.
அது ஆச்சர்யம். ‘தங்கலான்’ வடஆற்காடு மாவட்டத்தை மையமாகக் கொண்ட 18 ம் நூற்றாண்டின் கதை. அதன் மொழி முக்கியம் என்று கருதினார் பா.இரஞ்சித். நான் எழுதிய ‘தகப்பன் கொடி’, ‘வல்லிசை’ போன்ற படைப்புகள் வரலாற்றைத் தொட்டு சமகாலத்தில் முடியும். அதில் 1800களில் பேசுவது போல் மொழிப் பயன்பாடு இருக்கும். அது இரஞ்சித்துக்கு பிடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வட ஆற்காடு வட்டார மொழியை எப்படி படத்துக்குள் கொண்டுவந்தீர்கள்?
வட ஆற்காடு மொழி அசல் தமிழ் இலக்கியத்துக்கு இணையான மொழி. பெரியளவில் இலக்கியம், சினிமாவில் பதிவாகவில்லை. நிழல், மறை பிரதேசமாகவே இலக்கியத்திலும், சினிமாவிலும் இருந்துள்ளது. மறைக்கப்பட்ட அல்லது இதுவரை வெளிவராத மொழி ‘தங்கலான்’ படத்தில் வந்துள்ளது. ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்ட மக்களிடம் பெரிய வரவேற்பு. அதற்கு வாய்ப்பு கொடுத்த பா.இரஞ்சித்துக்கு நன்றி.
வட ஆற்காடு என்பது மலை, மலை சார்ந்த பகுதி. அந்தப் பகுதி மக்கள் கடும் உழைப்பாளிகள். அவர்களிடம் உயிர்ப்பான மொழி இருந்துள்ளது. ஆந்திர எல்லையொட்டிய மாவட்டம் என்பதாலும், நவாப்கள் ஆட்சி புரிந்ததாலும் இயல்பாகவே தெலுங்கு, உருது கலந்திருக்கும். அதைப் படத்தில் பயன்படுத்தினோம்.ஒரு காட்சியில் ‘என் புள்ளைங்களுக்கு எதாச்சும் ஆச்சுன்னா அதுக்கு யார் ‘ஜவாப்’ சொல்றது...’ என்றும், இன்னொரு காட்சியில் ‘அது முடியாது’ என்று அர்த்தம் கொள்ளும் விதமாக ‘பில்கோல்’ என்று வரும்.
ஊரை விட்டுப் போகும் காட்சி பின்னணியில் ‘எவ்வுரா அது’ என்ற தெலுங்கு வசனம் வரும். மற்றொரு காட்சியில் ‘துரை என்ன பாத்திருந்தார்ன்னா ‘தப்பி’ன்னு இருப்பார்’ன்னு வரும்.
‘தப்பி’ என்பது ‘தழுவி’ என்பதன் மருவுச் சொல்.
கட்டி, அணைத்து என்றால் அன்னியமா படும். வட ஆற்காடு மொழி உயிர்ப்புள்ள மொழி, அசல் தன்மை, கச்சாத் தன்மை கொண்டது. அதைப் படத்தில் பயன்படுத்த முடிந்தது. அது சமகால மொழி அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அதற்கு நாவல் அனுபவம் கைகொடுத்தது. சமூக செயற்பாட்டாளராக பலதரப்பட்ட மக்களுடன் பழகுவதாலும் மொழி வசப்பட்டது. யாரெல்லாம் பாராட்டினார்கள்?
பொன்வண்ணன், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், இயக்குநர் வசந்தபாலன், விக்ரம், பார்வதி என பலர் பாராட்டினார்கள்.
நாவல்கள் எழுதும்போது கிடைக்கும் சுதந்திரம் சினிமாவில் கிடைக்கிறதா?
பா.இரஞ்சித் முழு சுதந்திரம் கொடுத்தார். சினிமா கூட்டு முயற்சி என்றாலும் சக கலைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தும்போதுதான் இயக்குநருக்கு வெற்றி கிடைக்கும். பா.இரஞ்சித் கதாபாத்திரங்கள் தனித்துவமாகத் தெரிவதற்காகவும், வசனங்களின் பயன்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல குறிப்புகள் கொடுத்தார். இன்னொரு மகிழ்ச்சி- நான் எழுதிக்கொடுத்ததை பெரும்பாலும் பயன்படுத்தினார்.
சமூக செயற்பாட்டாளராக நீங்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வு?
கல்லூரி முடிச்சதும் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்தேன். எங்கள் பகுதியில் பீடித் தொழில் அதிகம். பீடித் நிர்வாகத்திடம் பணத்துகாக பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை அடிமைகளாக சேர்த்து விடுவார்கள். அந்தச் சுமை, சூழ்நிலை பிடிக்காமல் பல குழந்தைகள் தப்பி ஓடிவிடுவார்கள் அல்லது முரண்டு பிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களைப் பிடித்து கை, கால்களில் விலங்கு மாட்டி வேலை வாங்குவார்கள்.
அதை வெளி உலகத்துக்கு தெரிவிக்கும் விதமாக ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தபோது செய்திகளில் இடம் பிடித்தது.அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தக் குழந்தைகளை மீட்க தனி திட்டம் உருவாக்கியது. இப்போது வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் பங்கேற்று வருகிறேன். இருளர், குடுகுடுப்பைக்காரர்களுக்கு சாதிச் சான்றிதழ் பெற்றுத்தரும் போராட்டத்தில் பங்கேற்றது உட்பட பல போராட்டங்களில் தொடர்ந்து கள செயற்பாட்டாளராக போராடுகிறேன்.
உங்களைப் பாதித்த எழுத்தாளர்கள்?
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், தி.ஜானகி ராமன், பிரபஞ்சன். உலகளவில் ரஷ்ய எழுத்தாளர்களான டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி.
தொடர்ந்து சினிமாவுக்கு எழுதுவீர்களா?
நல்ல கதைகள் வரும்போது தொடர்ந்து எழுதுவேன். அதுவே என் விருப்பம். இலக்கியம், சினிமா என காலத்துக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொள்வது முக்கியம். ஒரே இடத்தில தேங்கி நிற்க விரும்பவில்லை. இந்தத் தலைமுறைக்கு காட்சி ஊடகம் நெருக்கமாக இருப்பது அறிந்ததே. என் எழுத்துக்கள் அவர்களையும் எட்ட வேண்டும். அதற்கு திரைப்படம் சிறந்த வழி. அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நானும் நிரூபித்துள்ளேன். இலக்கியம், சினிமா என இரண்டு தளங்களிலும் தொடர்ந்து பயணிப்பேன்.
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|