Must Watch



டிக்டாம்

‘ஜியோ சினிமா’வில் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘டிக்டாம்’. ஓர் அழகான கிராமத்தில் வயதான பெற்றோர் மற்றும் பள்ளியில் படிக்கும் தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார், பிரகாஷ். அந்த ஊரிலிருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். வருமானம் குறைவு என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் பிரகாஷ்.

இந்நிலையில் அவர் வேலை பார்த்து வந்த ஹோட்டல் நஷ்டமடைகிறது. வேறு வழியில்லாமல் ஹோட்டலை மூடுகின்றனர். வருமானம் இல்லாமல் பிரகாஷின் குடும்பத்தினர் தவிக்கின்றனர். பள்ளியிலிருந்து பிக்னிக் போக ஆசையோடு குழந்தைகள் இருக்கின்றனர்.

இப்படியான சூழலில் நகரத்தில் நல்ல சம்பளத்தில் பிரகாஷுக்கு வேலை கிடைக்கிறது. அழகான கிராமத்தைவிட்டு நகரத்துக்குச் சென்ற பிரகாஷின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே மீதிக்கதை. பொருளாதாரத் தேவைக்காக நாம் இழந்துகொண்டிருக்கும் அழகான வாழ்க்கையை இப்படம் நினைவுக்குக் கொண்டு வருகிறது. படமாக்கப்பட்ட இடங்கள் நம் மனதை அள்ளுகின்றன. குடும்பத்துடன் கண்டு களிக்கக்கூடிய ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் விவேக் ஆஞ்சாலியா.

கல்கி 2898 ஏடி

திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய தெலுங்குப் படம், ‘கல்கி 2898 ஏடி’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழிலும் காணக்கிடைக்கிறது. குருத்ரப் போர் முடிந்து 6000 வருடங்கள் கழித்து, கிபி 2898ல் படத்தின் கதை நிகழ்கிறது. எல்லாமே அழிந்து காசி மட்டுமே வாழ்வதற்கு ஏற்ற இடமாக உலகில் இருக்கிறது. எல்லா வசதிகளும் கிடைக்கும் காம்ப்ளக்ஸ் எனும் இடத்தை ஆண்டு வருகிறார் சுப்ரீம் யாஸ்கின். கர்ப்பிணிகளை வைத்து புரொஜக்ட் கே என்ற ஆய்வை செய்து வருகிறார் யாஸ்கின்.
எப்படியாவது காம்ப்ளக்ஸுக்குள் நுழைய வேண்டும் என்பது பைரவாவின் கனவு.

இதே இடத்தில் சில ஆயிரம் வருடங்களாக உயிருடனே இருக்கிறார் அஸ்வத்தாமா. காசியில் நடக்கும் கதை எப்படி குருத்ரப் போருடன் தொடர்பு கொள்கிறது, உண்மையில் யாஸ்கின், பைரவா யார், இவ்வளவு வருடங்களாக அஸ்வத்தாமா ஏன் உயிருடன் இருக்கிறார், புரொஜக்ட் கே எதற்காக... என்பதற்கு பதில் சொல்கிறது திரைக்கதை. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், அன்னா பென், பசுபதி என நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கிறது. விஷுவல் எபெக்ட்ஸ் பிரமிக்க வைக்கிறது. படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின்.

Grrr

கலகலப்பான, ஜாலியான ஒரு மலையாளப்படம், ‘Grrr’. ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கிலும் பார்க்க கிடைக்கிறது. ரச்சனா என்ற பெண்ணைக் காதலிக்கிறான் ரெஜிமோன். இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடுகின்றனர். சாதிப் பிரச்னை காரணமாக ரச்சனாவின் பெற்றோர் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று ரெஜிமோன் திட்டமிடுகிறான். இதற்காக ரச்சனாவை ஓர் இடத்துக்கு வரச் சொல்கிறான்.

திருமணம் செய்துகொள்ளப்போகும் நாள் வருகிறது. ரெஜிமோனின் போனை ரச்சனா எடுப்பதே இல்லை. கடுப்பாகும் ரெஜிமோன் ஒரு மதுவிடுதிக்குச் சென்று நண்பனுடன் சேர்ந்து பயங்கரமாகக் குடிக்கிறான். பலமுறை ரச்சனாவுக்கு போன் பண்ணுகிறான். ஆனால், ரச்சனா எடுப்பதே இல்லை.

மனமுடையும் ரெஜிமோன் இன்னமும் அதிகமாகக் குடிக்கிறான். போதையின் உச்சிக்குச் செல்லும் அவன், ஓர் உயிரியல் பூங்காவுக்குச் செல்கிறான். ரச்சனா அவனை கோழை என்று சொல்லியிருப்பாள். தனது வீரத்தை நிரூபிப்பதற்காக சிங்கம் இருக்கும் இடத்துக்குள் சென்று சிங்கத்திடம் சண்டையிட முயற்சிக்கிறான் ரெஜிமோன். சிங்கத்திடமிருந்து ரெஜிமோன் தப்பித்தானா என்பதே கிளைமேக்ஸ். உண்மையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதையை இயக்கியிருக்கிறார் ஜெய் கே.

டொகுன்போ

சீட் நுனியில் உட்கார வைக்கும் திரில்லர் படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘டொகுன்போ’ எனும் நைஜீரிய நாட்டுப் படம்.விலையுயர்ந்த, பாதுகாப்பான கார்களைக் கூட அசால்ட்டாக திருடுபவன், டொகுன்போ. காஸா எனும் கேங்ஸ்டரிடம் வேலை செய்து வருகிறான். கார்களைத் திருடிக்கொடுத்தால் காஸா ஒரு தொகையை டொகுன்போவுக்குக் கொடுப்பான். டொகுன்போவுக்குத் திருமணமாகி ஒரு மகன் பிறக்கிறான்.

புதிதாகப் பிறந்த மகனுக்காக திருட்டு வேலையை விட முடிவு செய்கிறான். கடைசியாக ஒரு காரைத் திருடி காஸாவிடம் கொடுத்துவிட்டு, குறைந்த தொகையைப் பெற்றுக்கொள்கிறான்.
ஒன்றரை வருடங்கள் ஓடுகின்றன. டாக்ஸி ஓட்டி குடும்பத்தை நடத்துகிறான் டொகுன்போ. இந்நிலையில் டொகுன்போவின் மகனுக்கு தீராத ஒரு நோய் வருகிறது. 

சிகிச்சையளிக்க லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. பலரிடம் பணம் கேட்கிறான். யாருமே அவனுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் மீண்டும் அவன் பழைய வாழ்க்கைக்கே திரும்ப, சூடுபிடிக்கிறது திரைக்கதை. திரில்லிங்கும், சென்டிமென்ட்டும் கலந்து கொடுத்திருக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகள் அசர வைக்கின்றன. படத்தின் இயக்குநர் ராம்ஷே நோவா.  

தொகுப்பு: த.சக்திவேல்